UPDATED : மே 31, 2026 08:57 AM
ADDED : மே 30, 2026 07:41 PM

''பெத்த பிள்ளையைப் போல நெஞ்சுருக வளர்த்த ஆடுகளெல்லாம் இப்படி ரத்த வெள்ளத்துல துடிதுடித்து சாகுதே... நாங்க இனி எதை வைச்சுப் பிழைப்போம்?'' விவசாயிகளின் நெஞ்சை பிளக்கும் இந்த ஓலம், ஓய்ந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில், தெருநாய்களின் வெறித்தனமான தாக்குதலுக்கு வாயில்லா ஜீவன்களான ஆடுகள் கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றன.
நேற்று முன்தினம், வெள்ளக்கோவில் சிவனாபுரம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில், 8 ஆடுகள் பலியான அதிர்ச்சியிலிருந்தே இன்னும் விவசாயிகள் மீளவில்லை. அதற்குள், நேற்று அதிகாலை திருப்பூர் தெற்கு முதலிபாளையம் கிராமம், கெங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் தோட்டத்தில் புகுந்த நாய் கூட்டம், 18 ஆடுகளை கடித்துக் குதறியது; இதில் 10 ஆடுகள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தன.
விவசாயிகள் கூறுகையில், 'ஆடுகள்தான் எங்களின் வாழ்வாதாரம். கஷ்டப்பட்டு வளர்த்த ஆடுகள் நாய்க்கடிக்கு இரையாவதை கண்முன்னே பார்ப்பதை விடக் கொடுமை வேறெதுவுமில்லை. தெருநாய்களை கட்டுப்படுத்த உயர்நீதிமன்றம் வழிகாட்டியும், உள்ளாட்சி நிர்வாகங்கள் உறக்கம் தெளியாமல் உள்ளன. இனிமேலாவது நாய்களை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். பலியான ஆடுகளுக்கு, தற்போதைய சந்தை மதிப்பில் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.
சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு சாத்தியமா?
காங்கயம், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகம் வெளியிட்டுள்ள கடித குறிப்பில் கூறியுள்ளதாவது:பேரிடர் மேலாண்மை நிதி விதிப்படி, ஒரு எருமை மாட்டுக்கு, தலா 37,500 ஆயிரம் ரூபாய், வெள்ளாடு அல்லது செம்மறியாடு ஒன்றிற்கு 6,000; கோழி ஒன்றிற்கு 200 ரூபாய் வீதம் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. முதல்கட்டமாக, முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ், 9.08 லட்சம் ரூபாய்- இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிவாரணமாக, 13.63 லட்சம்- பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக்கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.விவசாயிகளின் பிரதான கோரிக்கையான சந்தை மதிப்பீட்டிலான இழப்பீடு குறித்து, கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக மாவட்ட கலெக்டருக்கு முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் விரைவில் நிவாரணம் பெற்றுத்தர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.
