
சமூக உறவுகள் சார்ந்தும், பெண்களின் வாழ்வியல் தேடல்கள் சார்ந்தும் எழுதுவோரில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. அரசு கால்நடைத்துறை டாக்டராக பணியை துவங்கி பிறகு டி.என்.பி.எஸ்.சி., குரூப் ஒன் தேர்வு எழுதி தற்போது மாவட்ட பதிவாளராக பணியில் தொடர்கிறார். டாக்டர், எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், இயற்கை ஆர்வலர் என பல பரிணாமங்களில் மிளர்கிறார். கல்லுாரி காலங்களிலேயே பட்டிமன்றங்களில் பங்கேற்ற இவருக்கு 'செந்தமிழ் அருவி' உள்ளிட்ட பட்டங்களும் சொந்தம். இவர்... ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த டாக்டர் கு.கவிதா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவருடன் பேசியதிலிருந்து...
அப்பா குமாரசாமி விவசாயி. அம்மா ஈஸ்வரி டெய்லர். இவர்களுக்கு நான் ஒரே பொண்ணு. என்னை நன்றாக படிக்க வைத்தனர். அந்தியூரில் பள்ளிக் கல்வியை முடித்து கால்நடை பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்று கால்நடை டாக்டராக பணியை துவங்கினேன். பள்ளி, கல்லுாரியில் படிக்கும் காலங்களில் மேடையில் நன்றாக பேசுவதுண்டு. இதனால் எந்த விழாக்கள் என்றாலும் என்னை பேச அழைத்து விடுவர்.
அதன் மூலம் பட்டிமன்றங்களிலும் பங்கேற்றேன். கட்டுரை, பேச்சு உள்ளிட்ட எந்த போட்டிகள் என்றாலும் மிஸ் பண்ணுவதில்லை. பத்தாம் வகுப்பு படித்த போதே ஒரு நாவல் எழுதினேன். ஆனால் அந்த வயதில் அதை எப்படி புத்தகமாக வெளியிட வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் அப்படியே கையெழுத்து வடிவத்தில் அதை வைத்திருக்கிறேன். இனி புத்தகமாக வெளியிட வேண்டும்.
பட்டிமன்றங்களில் சிறப்பாக பேசியதற்காக தஞ்சை தமிழ் பல்கலையில் நடந்த விழாவில் செந்தமிழ் அருவி பட்டம் வழங்கி கவுரவித்தனர். கல்லுாரி விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தனிடமும் பரிசு பெற்றுள்ளேன்.
கால்நடை டாக்டராக 7 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், தேர்வு எழுதி மாவட்ட பதிவாளருக்கு தேர்வாகி தற்போது கோபிச்செட்டிபாளையத்தில் பணிபுரிகிறேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறேன்.
அரசு பணிக்காக தேர்வு எழுதுவோர் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். சிலர் ஒன்றிரண்டு தேர்வு எழுதி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக ஒதுங்கி விடுகின்றனர். தொடர்ந்து கடினமாக படித்து ஏற்கனவே எழுதிய தேர்வுகளிலிருந்து கிடைத்த அனுபவத்தை புரிந்து தேர்வுகளை எழுதினால் வெற்றி பெறலாம்.
வனத்துறையில் பணிபுரிந்த கால்நடை டாக்டர் பிரகாஷூடன் திருமணம் ஆனது. பொன் சாரா என்ற மகள் உள்ளார். கணவரும் என்னை எழுத்துத்துறையில் தொடர ஊக்கமளித்தார். வனத்துறையில் யானையிடமிருந்து பொதுமக்களை மீட்டதற்காக, தமிழக அரசின் வீரதீரச் செயல் புரிந்ததற்கான அண்ணா பதக்கம் பெற்றவர் எனது கணவர். நான் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை தொகுத்து 'நள்ளிரவு சூரியன்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். இதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கணவர் யானைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவர் யானைகளுக்கு சிகிச்சையளித்தது, அவற்றை காப்பாற்றியது போன்றவைகளை தொகுத்து புத்தகமாக எழுதியுள்ளேன். எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், ரமணிசந்திரன், அனுராதாரமணன் நுால்களை படித்து விடுவேன். தொடர்ந்து இயற்கை சார்ந்தும் சூழல் சார்ந்தும் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சமூகம், பெண்ணியல் சார்ந்தும் எழுதி வருகிறேன்.
எத்தனையோ பொழுது போக்கு அம்சங்கள் வந்தாலும் கூட புத்தக வாசிப்பு இளைஞர்களிடம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சாப்ட்காப்பியாக இண்டர்நெட், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் அதிகளவில் படித்து வருகின்றனர். என்னை பொறுத்தவரையில் புத்தக வாசிப்பு என்றைக்கும் மாறாது என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.
இவரை வாழ்த்த 94880 10806
நான் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை தொகுத்து 'நள்ளிரவு சூரியன்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். இதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.