
காலத்தால் அழியாத காவியமாக போற்றப்படும் சிற்பக்கலை, ஓவியக்கலையில் எல்லோரும் சாதிக்க முடியாது. சித்திரமும் கைப்பழக்கம் என்ற சொல்லிற்கு ஏற்ப காண்பவர் வியக்கும்வண்ணம் கையில் வித்தைகளைக் காட்டும் கலைதான் ஓவியம்.
இத்தகைய சிறந்த ஓவியக் கலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி டி.காவியாகை தேர்ந்து விளங்குகிறார். படிக்கும் நேரம் போக ஓய்வு நேரத்தில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு நேரில் அல்லது போட்டோவில் பார்க்கும் நபர், விலங்குகளை தத்ரூபமாக வரைந்து வருகிறார்.
தற்போது போர்டல் ஓவியங்களை வரைந்து அதை விற்று பகுதி நேரமாக வருமானமும் ஈட்டி வருகிறார். காவியா கூறியதாவது:
பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா திருநாவுக்கரசு மீன்பிடி தொழில் செய்கிறார். அம்மா அங்கயற்கண்ணி குடும்பத்தலைவி. எனக்கு சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லுாயில் சேர்ந்த போது ஓய்வுநேரத்தில் ஓவியங்களை வரைந்து பழகினேன். தற்போது போர்டல் ஆர்ட் நன்றாக வரைகிறேன். ஆரம்பத்தில் என்னுடன் படிக்கும் தோழிகளை வரைந்தேன்.
எனது திறமையை பாராட்டிய பேராசிரியர்கள், தோழிகள் 'நன்றாக உள்ளது.தொடர்ந்து முயற்சி செய். நல்ல ஆர்ட்டிஸ்ட்டாக வரலாம்' என ஊக்கமளித்தனர்.
ஆரம்பத்தில் ஒருவரை வரைய ஒரு நாள் கூட ஆகும். தற்போது 3 மணி நேரத்தில் வரைந்து விடுகிறேன். ஒரு ஓவியத்திற்கு ரூ.300 வரை தருகின்றனர். படிப்பு செலவிற்கு பயன்படுகிறது.
தொடர்ந்து ஆயில் பெயின்ட்டிங் உட்பட ஓவியக்கலையில்நிறையக் கற்றுக்கொண்டு சாதிக்க விரும்புகிறேன். பி.எட்., படித்து கற்றக்கலையை மாணவர்களுக்கு கற்றுத்தருவது தான் எனது எதிர்கால ஆசை என்றார்.
இவரை வாழ்த்த...oviya22022009@gmail.com