/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கோவையில் தயாரித்து கடைக்கு வந்தல்லோ கேரள சேலைகள்!
/
கோவையில் தயாரித்து கடைக்கு வந்தல்லோ கேரள சேலைகள்!
ADDED : ஆக 16, 2025 09:12 PM

த மிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு சேலை போன்று, கேரளாவில் மிகவும் பிரபலமானது, கசவு பாரம்பரிய புடவைகள்.
ஓணம் பண்டிகையின் போது, கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கசவு புடவைகளை விரும்பி அணிவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆக., இறுதியில் துவங்கி, செப்., 5ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கசவு, குத்தாம்புள்ளி புடவைகள், திசு, புல்காரி, செட் முண்டு, வேட்டி போன்றவை கோவை வடவள்ளி பகுதியில் உள்ள, நுாலாடை நிறுவனத்தில் ஜரூராக தயாராகி வருகிறது.
கோவை சிறுவாணி சாலையில் அமைந்துள்ள, நுாலாடை கைத்தறி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரள பாரம்பரிய ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது.
நுாலாடை நிறுவன இ-காமர்ஸ் தலைவர் தேவிப்பிரியா கூறியதாவது:
எம்.கே.பேப்ரிக் என்ற பெயரில், 25 ஆண்டுகளாக கேரள பாரம்பரிய ஆடைகளை தயாரித்து வருகிறோம். நுாலாடை என்ற பெயரில், 2022 முதல்இணையதளம் வாயிலாக நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். கேரளாவில் மொத்த வியாபாரிகள் இங்கு இருந்தே ஆடைகளை வாங்கி செல்கின்றனர். ஓணம் பண்டிகைக்கு தற்போது உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது. பாரம்பரிய ஆடைகள் மட்டுமின்றி, தற்போது இளம் பெண்கள் விரும்பும் வகையில், புதுவிதமாக கலை நயமிக்க ஓவியங்கள் பிரிண்ட் செய்தும், எம்பிராய்டரி செய்தும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு டிசைன்களுடன் நாங்கள் செய்யும், செட் முண்டு அதிகளவில் கேரளாவில் விற்பனையாகி வருகிறது. திருமணத்திற்கு மணப்பெண், மணமகன்களுக்கு தேவைப்படும் கேரள ஆடைகளில் எம்பிராய்டரி செய்து புதிய டிசைன்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களிடம் புடவைகள் 300 முதல், வேட்டிகள் 250 ரூபாய் முதல் விற்பனை செய்துவருகிறோம்.
வீடுகளில் இருந்து விற்பனை செய்யும் பெண்கள் பலரும், இங்கு துணிகளை எடுத்துச்செல்கின்றனர். மொத்தமாக கேரளாவுக்கு அனுப்புகின்றோம்.