/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
மேஜிக் டீச்சரும் மா... பத்மாவதியும்
/
மேஜிக் டீச்சரும் மா... பத்மாவதியும்
ADDED : ஏப் 13, 2025 04:15 AM

மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா பெயர்களில் அரசியல், அறிவியல், ஆரோக்கிய, ஆன்மிக கட்டுரைகளை எழுதி வரும் எழுத்தாளர் பத்மாவதியின் எழுத்துக்கு வயது 40.
அறிவியலைத் தொட்டு குழந்தைகளோடு விளையாடும் அதிசய மேஜிக் டீச்சர். மந்திரக் கம்பளத்தில் மாணவர்களை அமரவைத்து பூமி கிரகத்தில் இருந்து சூரியனின் மற்ற கிரகங்களை மாயக் கற்பனையில் வலம் வரச் செய்யும் மந்திரக்கோலுக்கு (எழுத்து) சொந்தக்காரர்.
'அனைத்து துறைகளையும் வலம் வந்தாலும் குழந்தைகளுக்கான படைப்புகள் எழுதும் போது என்னை மீண்டும் மீண்டும் புதுப்பிப்பது போலிருக்கிறது' என்று நினைவுகளாய் மலர ஆரம்பித்தார் பத்மாவதி.
கட்டுரைகளை பெண் மொழி என்ற பெயரில் தொகுத்து புத்தகமாக எழுதினேன். 'சிலையும் நானே சிற்பியும் நானே' என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டேன். மாதவிடாயை முதன்முதலில் எதிர்கொள்ளும் சிறுமிகளுக்காக 'நான் வளர்கிறேனே' புத்தகமும் பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் 'நான் யார்... நீ யார்' புத்தகமும் வரவேற்பை பெற்றது.
கேள்வி கேள் பதில் தேடு, சிந்தனை செய் மனமே, என் வாழ்க்கை என் கையில், மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், உலகத்திலேயே சிறந்த டீ, கற்பிதமல்ல பெருமிதம்... என எழுத்துக்களின் எண்ணிக்கை நீண்டது.
குழந்தைகளுக்கான இன்றைய தேவை அறிவியல் தான். அலைபேசியில் அடைபட்டு கொண்டிருக்கும் மழலையர்களை இதுபோன்ற மேஜிக் கதைகளால் ஈர்க்க முடியும் என்பதை எனது புத்தகங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். நான் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகங்களை அவர்களே படிக்கலாம், ஆசிரியர்கள் மூலம் படிக்கலாம். கலந்துரையாடலாக படிக்கலாம். அதற்கேற்ப அறிவியல் சார்ந்த கதைகளை மாயா டீச்சரின் மந்திரக்கம்பளம் புத்தகத்தில் எழுதியுள்ளேன்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், இளம்சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும் யுனிசெப் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் எழுத்துக்களை கூடுதலாக செதுக்கியது.
குழந்தைகளுக்கு அண்ணாந்து பார்த்து நிலாவை காட்டி சோறுாட்டிய சுவடுகள் மறைந்து விட்டது. இன்றைய மழலையர்களை சுற்றுப்புறம் மறந்து தலைகுனிந்து அலைபேசியை பார்த்தபடி சாப்பிட வைப்பதை பெருமையாக நினைக்கின்றனர் பெற்றோர். ஆனால் வளர்ந்தபின் ௧0ம் வகுப்பில் அலைபேசியே கதியாக கிடக்கின்றனர் என குறைசொல்வது நியாயமில்லை. அதை மாற்றும் இடம் வீடு தான். பெற்றோர் குழந்தைகளிடம் நிறைய பேச வேண்டும். நிறைய கதைகள் சொல்ல வேண்டும். அப்போது தான் குழந்தைகள் ஆர்வமாக கேட்டு மனதில் பதிய வைப்பர். எப்போதும் அலைபேசியில் மீம்ஸ், ரீல்ஸ்களை பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிள்ளைகள் பொறுப்பாக நடக்கவில்லை என குற்றம் சொல்லக்கூடாது.
திருநங்கைகளுடன் பழகி விழிப்புணர்வு குறும்படங்கள் எடுத்தபோது அவர்களின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது. உடல் ஆணாக, மனது பெண்ணாக இருவகை வாழ்க்கை, இருவகை வலியுடன் வாழ்வது எவ்வளவு பெரிய முரண்பாடு. நீ பெண் தான் என்று சொல்லும் மனதை மாற்ற முடியாது; அதற்காகவே உடலை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். மாறிய பின்னும் அவர்களை வேறு வேலை செய்வதற்கு இந்த சமூகம் அனுமதிப்பதில்லை. மொத்த சமூகமும் ஒதுக்கும் போது யாராக இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதை குறும்படங்களின் வாயிலாக விளக்கிய போது சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறுதுளியாக என்னை உணர்கிறேன் என்றார்.

