/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
உருகும் மெழுகுவர்த்தி ஒளியில் உழைப்பால் உயர்ந்த மங்கை
/
உருகும் மெழுகுவர்த்தி ஒளியில் உழைப்பால் உயர்ந்த மங்கை
உருகும் மெழுகுவர்த்தி ஒளியில் உழைப்பால் உயர்ந்த மங்கை
உருகும் மெழுகுவர்த்தி ஒளியில் உழைப்பால் உயர்ந்த மங்கை
ADDED : ஜன 07, 2024 11:28 AM

ஒரு காலத்தில் இப்படித்தான் பெண்கள் நடக்க வேண்டும். உட்கார வேண்டும். ஒருவரை சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்.. திமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாய் மகாகவி பாரதி கண்ட புதுமைப்பெண்கள் இன்று வலம் வருகின்றனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூரை சேர்ந்த ஏ.அஜிதா 29, சமூகநலத்துறையில் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரிந்தபடி வீட்டில் இருந்தே, ரசாயனம் இல்லாத இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி அழகிய மெழுகுவர்த்தி பொருட்கள் தயாரிக்கும் சிறுதொழிலில் ஈடுபட்டுள்ளார்.உள்ளூர் மட்டுமின்றி இணையதள உதவியுடன் வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகிறார்.
அஜிதாவின் வெற்றிக்கதை...
சமூகவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். அப்பா அருள்மாணிக்கம் போஸ்ட் மாஸ்டர். அம்மா ரீட்டா குடும்பத்தலைவி. என்னுடன் சேர்த்து மூன்று பெண்கள். யாரையும் நம்பி வாழக்கூடாது. பெற்றோருக்கு பாரமாக இருக்க கூடாது என்பதில் கவனமாக அடியெடுத்து வைத்தேன். சிறு தொழில் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். மெழுகுவர்த்தி தயாரிக்க கற்றுக்கொண்டேன். பணிபுரியும் ராமநாதபுரத்தில் தங்கி வீட்டில் சிறுதொழிலாக மெழுகுவர்த்தியில் அழகிய பொம்மைகள், தீப விளக்குகள் தயார் செய்கிறேன்.
மூலப்பொருட்களாக சோயா மாவு, தேன் மெழுகை கொண்டு எலுமிச்சை, ரோஸ், மல்லிகை, சந்தனம், ஸ்ட்ராபெர்ரி இயற்கை வாசனை பொருட்களை பயன்படுத்தி மெழுகுவர்த்திகள், அழகிய தீப விளக்குகள் செய்தேன். பறவை, பூக்கள், இதயம், தேவதை, சாண்டோகிளாஸ் உள்ளிட்ட பொம்மைகள், கீ செயின், பிறந்த நாள் மெழுகுவர்த்தி, வீட்டு அலங்காரப்பொருட்களும் தயாரிக்கிறேன்.
எனது முதலீடு ரூ.10ஆயிரம் தான். இப்போது சொந்தகாலில் நிற்கும்படி சம்பாதிக்கிறேன். பெண்கள் எளிதில் சாதிக்கும் வாய்ப்புள்ள சிறுதொழில் மெழுகுவர்த்தி தயாரிப்பு. ஆர்வம் உள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறேன். யாரையும் எதிர்பார்க்காமல் நமக்குரிய தேவைகளை நமது சம்பாத்தியத்தில் செய்து பிறர் மதிக்க வாழவேண்டும் என்பதே ஆசை என்றார்.
இவரை வாழ்த்த 96596 30838