ADDED : பிப் 15, 2026 06:11 AM

''வ யது முதிர்வால் உடலளவில் தளர்ந்துவிட்டேன். ஆனால், என் ஜீவனுக்கு ஊற்று, தினமும் நான் எழுதும் புதிய ராகங்களும், பாடல்களுமே,'' என்கிறார், கோவை ராம்நகரை சேர்ந்த 86 வயது நிரம்பிய இசை ஆசிரியை பத்மா.
இசை மணக்க இருக்கிறது இவரது வீடு. புல்லாங்குழல், வீணை, தம்புரா, கீ போர்டு, மிருதங்கம்...என தற்போதைக்கு மவுனமாக இருக்கும் இசைக்கருவிகள் சொல்கின்றன, ஆசிரியை பத்மாவின் கடந்து போன இனிய இசை வாழ்க்கையை!
''அப்பா லட்சுமிநாராயணன், மைசூர் மகாராஜா அரண்மனையில், ஆலோசகராக இருந்தவர். அம்மா சுப்பலட்சுமியம்மாள்; இல்லத்தரசி. ஏழு பேரில், ஆறாவது கடைக்குட்டியாக பிறந்தேன். என் எட்டாவது வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா தான் தனியாளாக நின்று, அனைவரையும் படிக்க வைத்தார். அனைவரும் அமெரிக்காவில் நல்ல வேலையில் செட்டில் ஆகிவிட்டனர்,''.
''நீங்கள் மட்டும் எப்படி இங்கே?'': ''எனக்கு சின்ன வயதில் இருந்தே இசை மீது அதிக விருப்பம். எம்.ஏ., மியூசிக் படித்துள்ளேன். நிறைய கச்சேரிகள், புகழ்பெற்ற பல கோவில்களில் பாடியிருக்கிறேன். வீணை, தம்பூரா, புல்புல்தரங், புல்லாங்குழல், கீ போர்டு போன்ற இசைக்கருவிகள் வாசிப்பேன். நிறைய மாணவர்களுக்கு இசைக்கருவி வாசிக்க, பாட கற்று தந்துள்ளேன். புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞர் மைசூர் சந்தன்குமார் என் மாணவன் தான். என் பேத்தி அபிநயா, கல்யாணி ஆகிய இருவரும், பாடகர்கள்; சின்னத்திரையில் முத்திரை பதித்து வருகின்றனர்,''.
''இப்போது என்ன செய்கிறீர்கள்?'': ''60ஐ தொடும் போது, உடலளவில் தளர்ந்துவிட்டேன். ஆனால், இளமையில் இருந்த அதே துடிப்பும், உத்வேகமும், புல்லாங்குழல் தொடும் போதும், பாடல்களுக்கு புதிய ராகங்கள் எழுதும் போது உணர்வேன். தற்போது, பக்தி பாடல்களுக்கு பல ராகங்களை உருவாக்கி, 'ராகமாலிகா' எழுதி வருகிறேன்.
என் இத்தனை ஆண்டு இசைப்பயணத்தில் எழுதிய, புதிய பாடல்கள், ராகங்களை, 'ஆத்மநிவேதனா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட தொகுத்து வருகிறேன். என் மகள் லட்சுமி தான், இதை கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து தொகுக்கும் பணிகளை மேற்கொள்கிறார்,''.
''முதுமை காலம் மகிழ்ச்சியாக கழிகிறதா?'': புதிய ராகங்களில் தொலைந்து மீளும் போதெல்லாம், இந்த முதுமை கூட, புதுமையாக தான் தெரிகிறது. நிறைய மனிதர்கள், சம்பவங்களை மறந்துவிட்டேன். ஆனால், பாடல்வரிகள் மட்டும் என்றும் மறப்பதில்லை.
இசை ஆசிரியை பத்மாவுக்கு நாளை பிறந்தநாள்!

