
தமிழ் சினிமாவின் ஹாலிவுட்டான கோடம்பாக்கம் பக்கம் பலரது பார்வைகள் இருந்தாலும், அங்குள்ளவர்களின் பார்வையை மதுரை பக்கம் திரும்ப வைத்திருப்பவர் நடிகை சுஜாதா.திரைத்துறை வாய்ப்புகளுக்காக காலமெல்லாம் காத்திராமல், கிடைத்த ஒரே வாய்ப்பை அலட்சியப்படுத்தாமல் லட்சியமாக்கிக் கொண்டதின் வெகுமதியாக இன்று பல படங்களுடன் திரைக்களத்தில் 'பிசி'யாக இருக்கிறார்.
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் ஒன்றித்து விடும் இவரது மேடை நடிப்பை பார்த்து அசந்துவிட்ட கமல், விருமாண்டி படத்தில் முதல் வாய்ப்பு அளித்து இவரின் திரைத்துறை நடிப்புக்கு பிள்ளையார் சுழிபோட்டார்.குணச்சித்திர வேடமென்றால் சுஜாதா என பேசப்படும் அளவிற்கு தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பருத்திவீரன், கோலிசோடா, பசங்க, ரேணிகுண்டா, கேடிபில்லா கில்லாடிரங்கா, காக்கிச்சட்டை என 50 க்கும் மேற்பட்ட படங்களை கடந்து விட்ட அவரோடு ஒரு நேர்காணல்...* நடிப்பை எங்கு கற்றீர்கள்நடிப்புக்கு காரணம் கணவர் பாலகிருஷ்ணன். அவரிடமிருந்து தான் நடிப்பை கற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கி வந்த நாடக 'மையம்' என்ற அமைப்பு தான் என் கலைப்பயணத்தை துவக்கி வைத்தது.* நாடகத்திலும் குணச்சித்திர வேடங்கள் தானா?நான் நடித்த நாடகங்கள் அனைத்தும் சமூக விழிப்புணர்வுக்கானவை.அந்த நாடகங்கள் நடக்கும் காலங்களில் சில கலைஞர்கள் வராமல் இருப்பார்கள். அப்போது அவர்களின் கதாப்பாத்திரங்களை நான் ஏற்று நடிப்பேன். அதனால் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் எளிதாக நடிக்க முடிந்தது. குறிப்பாக 'அம்மா' கேரக்டர் அதிகம்.* சுஜாதா என்றால் 'சென்டிமென்ட் ஆர்ட்டிஸ்ட்' என்பது உண்மையா?'பருத்திவீரன்' பெற்றுத்தந்த பெரும் கவுரவம் தான் எனக்கு பல படங்களை தந்தது. சுஜாதா நடித்தால் படம் வெற்றி பெறும் என்ற 'சென்டிமென்ட்' பரவலாக பேசப்பட்டது. படத்தில் ஏதாவது ஒரு காட்சியிலாவது முகத்தை காட்டுங்கள் என அன்பு வேண்டுகோள் விடப்பட்டதால் தொடர்ந்து சிறு கதாபாத்திரம் என்றும் பார்க்காமல் நடித்தேன். இப்போது அதை நிறுத்திவிட்டேன்.* எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை விரும்புகிறீர்கள் ?இப்போது இயக்குனர்களிடம் கதை கேட்டு முழுமையாக தெரிந்த பின் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். எனது கதாபாத்திரம் கதையில் கொஞ்சம் வலிமை மிக்கதாய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.* சென்னையில் இருந்தால் தானே வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்?நான் நடித்துள்ள பெரும்பாலான படங்களுக்கு, மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் படப்பிடிப்புகள் நடந்துள்ளன, நடக்கின்றன. இப்போது சினிமாவை பொறுத்தவரையில் மதுரை தான் வசதியான ஊர். இங்கிருந்து எந்த இடத்திற்கும் சிலமணி நேர பயணத்தில் சென்றுவிட முடிகிறது. இதனால் சென்னை, மதுரை என்ற வித்தியாசம் எனக்கு இல்லை.* வெளிவராமல் போன எதிர்பார்ப்புக்குரிய படங்கள்?'பால்' என்ற படம் வெளியாகவில்லை. அதிலும் அம்மா வேடம். அதில் மகனாக வரும் கதாநாயகன் திருநங்கையாக மாறுவான். அப்போது அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக நடித்திருந்தேன். அந்த படம் வெளிவந்திருந்தால் இன்னும் புதுமையாக இருந்திருக்கும்.* நடிப்பு தவிர வேறு துறைகளில் ஆர்வம்? சின்னத்திரை?எதிர்காலத்தில் திரைத்துறை சார்ந்த பயிற்சி நிறுவனம் ஒன்றை மதுரையில் துவங்க வேண்டும் என்பது விருப்பம். சின்னத்திரை பக்கம் செல்லவில்லை.* பிடித்த திரைக்கலைஞர்கள்?நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர்கள் அமீர், விஜய்மில்டன், பாண்டியராஜன், பன்னீர்செல்வம் இப்படி பலர். எனது நடிப்பு அவர்களுக்கும் பிடிப்பதால் தொடர்ந்து அவர்கள் படங்களில் வாய்ப்பு அளிக்கிறார்கள். முக்கியமாக படப்பிடிப்பின் போது எனக்கான காட்சிகள் ஒரே 'டேக்கில்' எடுக்கப்படுவது அவர்களுக்கு பிடிக்கும். சில படங்களில் நானே 'ஆன் தி ஸ்பாட் டயலாக்' பேசுவதும் 'பிளஸ்' தானே!வாழ்த்த balasujass@gmail.com