/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
நம்ம வீட்டு பையன் வி.ஜே., சித்து
/
நம்ம வீட்டு பையன் வி.ஜே., சித்து
ADDED : அக் 20, 2024 12:37 PM

'இவர் முன் சினத்து நின்றவர் எவருமில்லை, சிரிக்காமல் சென்றவர் மனிதர் இல்லை....மகிழ்விக்க தெரிந்ததால் மனிதனானான்... மக்களின் மனதில் மன்னனானான்....' என்பதற்கேற்ப லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னுடைய வீடியோவால் சிரிக்க வைத்து கொண்டிக்கிறார் இந்த வி.ஜே., சித்து.
மிடில் கிளாஸ் பையனாலும் முயற்சி இருந்தால் முடியும் என சிரித்த முகத்துடன் தன் திஸ் விஜே சித்து வ்லாக்ஸ்..' வலைதளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் சித்து. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் சித்துவின் 'பன் பண்றோம்' என்ற பிராங்க் வீடியோக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் தனியிடம் உண்டு.
நண்பர்களுடன் வெளியே செல்லும்போது என்னெல்லாம் நடக்கிறது என்பதை வீடியோவாக காட்சிப்படுத்தி வருகின்றனர் வி.ஜே., சித்துவின் குழுவினர். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், நாடுகள் என இவர்களின் பயணம் தொடர்கிறது. தற்போது 30 லட்சம் 'பாலோவர்களை' கொண்டுள்ள வி.ஜே., சித்து குழுவினர் ஒவ்வொரு 10 லட்சம் 'பாலோவர்கள்' வந்ததும் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பது அனைவரையும் ஈர்த்து வருகிறது.
சித்து கூறியது: தனியாக இருக்கும் வரை தெரியவில்லை. மனைவி, குடும்பம் என வந்தபோது, பொருளாதாரத்தை சமாளிக்க வேண்டுமென்ற எண்ணம்தான் புதிய பயணத்தை துவங்க வைத்தது. புதிதாக யுடியூப் சேனல் தொடங்கி விட்டோம். கேமராவோ, ஆட்களோ இல்லை. அலைபேசியில் வீடியோக்களை எடுத்தேன். ஆரம்பம் கடினமானதாக இருந்தது. சம்பளம் கொடுக்க கூட சிரமத்தை சந்தித்ததுண்டு. தற்போது மக்கள் ஆதரவால் கரையை கடந்து விட்டோம். பல வருடங்களாக போராடி, விடாத உழைப்பின் பலன்தான் இந்தளவிற்கு ஆதரவு என நினைக்கிறேன்.
அடுத்தகட்டமாக வெள்ளித்திரை வாய்ப்பு வருகிறதா என பலர் கேட்கின்றனர். படம் இயக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. விரைவில் நடக்கும். சோஷியல் மீடியாவில் பாராட்டு, எதிர்ப்பு எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
உருவக்கேலி, அவமானம், நெருக்கடி என கடந்து வந்த பாதை இருந்தாலும் எதையும் கேமரா முன் காட்டாமல் இளைஞர்கள், 'என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரே நீங்கதான்' எனும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சித்து பாராட்டிற்குரியவர்.