ADDED : ஜூன் 23, 2024 08:56 AM

மனதைப் புதுப்பிக்கும் மந்திர திறவுகோல் பயணங்கள். சற்று மனஅழுத்தம் தரக்கூடும் பயணம் என்பதால் தொழில்முறையாக, வேலை விஷயமாக அலைவதை இந்த வகையில் சேர்க்க முடியாது.
தன்னை சுற்றியிருக்கும் 'கமிட்மென்ட்' என்கிற தளைகளை துாக்கி எறிந்து காட்டாறு வெள்ளம் போல தனக்காக வாழ நேரும் சில நாட்களும் சில மணித்துளிகளும் பெண்களுக்கு கிடைத்த வரம். குடும்பச்சூழலுக்குள்ளும் அலுவலுக்குள்ளும் சிறைபட்ட மனதுக்கு சிறகு முளைத்த சுகம் தான் பயணம். இயற்கையின் மூச்சுக்காற்று இதமாய் முகம் வருடும் போது தொலைந்து போன குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கும் பரவசம். இது பயணத்தில் மட்டுமே கிடைக்கும் பேரதிசயம். அதிலும் மனமொத்த தோழிகளுடன் செல்லும் பயணத்தை சொர்க்கத்தின் திறப்பு விழாவாக கொண்டாடலாம்.
சென்னை தோழியர்கள் கீதா இளங்கோவன், நிலா, ரித்திகா ஸ்ரீ, கமலி, சங்கீதா, தேவி, ரேவதி. இமயமலை பனிமலையில் நடந்தும் தீண்டியும் அனுபவித்த தங்களது அனுபவங்களை பரவசத்துடன் விவரித்தனர். பயணத்தை ஒருங்கிணைத்த கீதா இளங்கோவன் பெண்களின் தன்னம்பிக்கை எழுத்துக்கு சொந்தக்காரர். தான் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷத்தையும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்க வேண்டும் என்ற பரந்த சிந்தனை உடையவர். இமயமலை பயணம் 2வது முறை அனுபவம் என்கிறார் கீதா இளங்கோவன்.
அவர் கூறுகிறார்... 7 பேரில் இரண்டு பேர் 18 வயது பெண்கள். மற்றவர்கள் 40, 50 வயது பருவத்தினர். வயது வித்தியாசம் இன்றி சென்றது வித்தியாசமாக இருந்தது. 2013ல் இமாச்சல் குலு மாவட்டத்தில் 13,799 அடி உயரத்தில் சர்பாஸ் என்ற இடத்தில் டிரெக்கிங் சென்றுள்ளேன். இந்த முறை 12,180 அடி உயரத்தில் சந்திரகனி டிரெக்கிங் பகுதிக்கு சென்றோம். இம்முறை எனக்கான 'ஸ்டாமினா' கூடுதலாக இருந்ததை உணர்ந்தேன்.
உடற்பயிற்சி, அவ்வப்போது மாரத்தான் ஓட்டம், சரிவிகித உணவு என நேர்கோட்டு முறையை கடைப்பிடித்ததால் மலையேற்றம் இலகுவாக இருந்தது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறதா என பரிசோதித்து சான்றிதழ் வாங்க வேண்டும். இவர்கள் மலையேறும் போது ஆக்சிஜன் குறைந்து மூச்சிரைக்கும் என்பதால் ரத்தத்தின் அளவு 8, 9 (எச்.பி) அளவில் இருந்தால் மலையேற்றத்திற்கு அனுமதிப்பதில்லை.
மலையேற்றம், இயற்கை அழகை ரசிக்க விரும்பினால் பெண்கள் பயணம் செய்ய வேண்டும். குடும்பத்துடன் விசேஷம், கோயில் விழாசெல்வது ஒரு ரகம். அங்கு மருமகளாக, மனைவியாக, கட்டுச்சோறை கட்டிக் கொண்டு குடும்பத்தலைவியாக தான் வாழமுடியும். அப்படியில்லாமல் ரசனையொத்த தோழிகளுடன் மலை, காற்று, சிற்றோடைகளை ரசிக்கும் போது தன்னைப்பற்றி சுயஅலசல் கிடைக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் பயணம் எங்கே சென்றாலும் சுகமாக இருக்கும். இல்லாவிட்டால் உடலே நமக்கு பாரமாகி விடும். மனம் குப்பைத்தொட்டியல்ல. அதில் சந்தோஷங்களை நிரப்பிக் கொள்ள பயணங்களே இனிதானது என்றார்.
நிலா, கல்லுாரி மாணவி: சிறுவயதில் அம்மாவுடன் டூவீலரில் டிரெக்கிங், சென்றிருக்கிறேன். முதன்முறை இமயமலை டிரெக்கிங் சென்றது மேஜிக் போல் இருந்தது. எல்லா வயதினருடன் கலந்து பழகும் போது நிறைய விஷயங்களை அனுபவமின்றி புரிந்து கொள்ள முடிந்தது. இமயமலை பயணம் எனக்கு சுதந்திரத்தை கற்றுத் தந்து பயத்தை குறைத்து தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது.
ஆலங்கட்டி மழையின் அதிசயம்
ஆகாயத்தில் இருந்து வெண்ணிற கற்கண்டை துாவியது போன்று ஆலங்கட்டி மழையின் பொழிவை ரசித்தோம் என்கிறார் எழுத்தாளர் கமலி. எனது பிறந்தநாளை இமயமலையில் கொண்டாடியது வாழ்நாளில் கிடைக்காத பாக்கியம்.முதன்முறை பனிமலையை பார்த்த பரவசத்தில் நின்ற போது ஆலங்கட்டி மழை பெய்தது. கற்கண்டு பனிகற்கள் துளிகளாய், முத்து சிதறலாய் மேலே விழுந்த ஒவ்வொரு மழைத்துளியும் பிரமிக்க வைத்தது. பனி, காற்றுக்கு நடுவே டென்ட்டில் அமர்ந்து அட..டா.. ஆலங்கட்டி மழையின் அழகை ரசித்தோம்.
கஷ்டப்பட்டு ஓரிடத்தில் நிற்பதல்ல பயணம். பார்க்கும் அனைத்தையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். முதல்நாள் களைப்பை துாக்கி எறிந்து மறுநாள் பயணத்திற்கு ப்ரெஷ் ஆக தயாராவது தான் சாமர்த்தியம் என்றார்.