/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பிரியங்காவின் பிரியமுள்ள 'வர்ணம்'
/
பிரியங்காவின் பிரியமுள்ள 'வர்ணம்'
ADDED : டிச 07, 2025 09:55 AM

'நான்கு வயதில் பரதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். சி.ஏ., இன்டர் முடித்து ஆடிட்டராக வேலை பார்த்தாலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பரதத்தை பார்க்கிறேன்,' என்கிறார் மதுரையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பிரியங்கா.
பிரியங்கா கூறியது: பிரபல பரதநாட்டிய கலைஞர் சம்பூர்ணம் எனது முதல் குரு, ஹர்ஷவர்த்தினி 2வது குரு. சென்னையில் கல்லுாரியில் படிக்கும் போது பரத அரங்கேற்றம் முடித்தேன். தொடர்ந்து சி.ஏ., இன்டர் முடித்து ஆடிட்டரானேன். வேலை வேறானாலும் எனது வாழ்க்கையின் ஒருபகுதியாக பரதத்தை பார்க்கிறேன். சென்னையில் அபார்ட்மென்ட் மழலையர்களுக்கு பரதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். பத்தாண்டுகளாக பரத வகுப்புகள் எடுக்கிறேன்.
சென்னையில் இருந்த போது குழந்தைகள் வகுப்புக்கு வரமுடியாத சூழலில் நானே அவர்கள் வீடுகளுக்குச் சென்று வகுப்பெடுத்தேன். என்னிடம் கற்ற 32 வயது பெண் டாக்டருக்கு அரங்கேற்றம் செய்து வைத்தேன். திருமணத்திற்கு பின் பெங்களூரு சென்ற போது வர்ஷா என்பவரிடம் பரதத்தை தொடர்ந்தேன். தற்போது வரை என்னை புதுப்பிக்க நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
தற்போது மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் ஏற்கனவே சென்னையில் கற்று வருபவர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் சொல்லித் தருகிறேன். அவர்களுக்கு அடவுகள் முழுமையாகத் தெரியும். புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு 'ஆன்லைனில்' பரத முத்திரைகள், நடன நிலைகளை சொல்லி புரியவைக்க முடியாது.
நான் பரதம் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்தது பந்தநல்லுார் ஸ்டைல். இப்போது கலாஷேத்ரா ஸ்டைல் நடனம் கற்று வருகிறேன். இரண்டும் ஒன்று தான். உடலை எந்தளவுக்கு வளைக்கிறோம் என்பதிலும், முக பாவனையிலும் தான் வேறுபடும்.
மதுரையில் கின்னஸ் சாதனைக்காக ஆன்லைன் மூலம் 800 பரதக்கலைஞர்கள் இணைந்து தமிழின் பெருமை குறித்து 45 நிமிடத்திற்கு 'வர்ணம்' வகையில் ஆடினோம். மதுரை ஆர்.முரளி வழிகாட்டுதலில் இந்த சாதனை செய்து முடித்தோம்.
சமீபத்தில் மதுரையில் இந்தியா, ஸ்விட்சர்லாந்து இடையிலான ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடியது பெருமையாக இருந்தது.
அரங்கேற்றம் என்பது புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து கணபதி, முருகன், கவுத்துவம், ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம் என தொடர்ந்து தில்லானாவில் முடிப்போம். நடுவில் ஆடுவது வர்ணம். இதற்கு நிறைய ஆற்றல் வேண்டும். இந்த நடனத்தில் குறைந்தது அரைமணி நேரத்திற்கு நிருத்தா (நடனம்), அபிநயம் இரண்டும் சேர்ந்திருக்கும். ஏதாவது கடவுளைப் பற்றி கதையாக சொல்லப்படும். நடனத்துடன் அபிநயம் சேர்த்து பின்னப்படும். 3 வித வேகங்களில் நடனமாடுவோம். நமது ஆட்டத்திறனை பரிசோதிக்கும் களமாக வர்ணத்தை சொல்லலாம். ௨ மணி நேர நிகழ்ச்சியில் வர்ணம் சிறப்புப் பகுதியாக இடம்பெறும்.
பரதம் என்றாலே நாட்டியம், நிருத்தா, அபிநயா சேர்ந்தது தான். நாட்டியம் என்பது கதை சொல்லும் போக்கு. நிருத்தா நிறைய நடனங்கள், அடவுகள் கொண்டது. அபிநயா முகபாவனை. இந்த மூன்றும் சேர்ந்து பரதமாடும் போது பார்வையாளர்கள் பரவசமடைவர்.
26 வகை முத்திரைகள் நிறைய நடனங்கள் கொண்ட நடன டிராமாவும் உள்ளது. நிறைய அடவு கொண்ட ஸ்டைலும் உள்ளது. இதில் எது அதிகமாக சேர்க்கப்பட்டாலும் சலிப்பு தட்டாது. முத்திரை என்றாலே கை அசைவு தான். கிளி மாதிரி, மான், மயில் மாதிரி காட்டவும் சிவன், முருகன், மீனாட்சி என காட்டவும் கை முத்திரைகள் தான் பயன்படும். பரதம் ஆடும் போது வாய் திறப்பதில்லை என்பதால் முத்திரைகள் தான் பேசும். ஒரு கையில் காண்பிக்கிற 26 வகை முத்திரைகள் உள்ளன. அடவு என்பது முழுமையான நடன நிலை. இதைக் கற்றுக்கொண்டால் தான் பாடல்களுக்கு நடனமாட முடியும்.
தெய்வீகம் சார்ந்ததாக பரதத்தை மக்கள் பார்க்கின்றனர். தெய்வீகக் கலையோடு பயணிப்பது கடவுள் வரம் தான் என்கிறார் பிரியங்கா.
தொடர்புக்கு 91502 80820.

