ADDED : செப் 22, 2024 12:08 PM

பத்தாம் வகுப்பில் 400, பிளஸ் டூவில் ஆயிரத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெறுமளவுக்கு படிப்பில் படு சுட்டி நான். இதனால் எப்படியாவது கம்ப்யூட்டர் இன்ஜினியராகும் நோக்கத்துடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்து விட்டேன். ஆனாலும் என்னமோ தெரியவில்லை. அதையும் தாண்டி மக்களிடம் போய் சேர வேண்டும் என மனம் விரும்பியது. அதற்கு நடிகையானால் எளிதாக இருக்கும் என அப்போதே மனம் அதை நோக்கி செல்ல துவங்கிவிட்டது.
பொறியியல் படிப்பை முடித்த கையுடன் சென்னைக்கு புறப்பட்டு விட்டேன். தனியார் நிறுவனத்தில் மனித வளப்பிரிவு மேலாளர் பணி கிடைத்தது. ஆனாலும் அதில் மனம் லயிக்கவில்லை. ஆக்டிங் மீது தான் கண் இருந்தது. இதையறிந்து முதலில் குடும்பத்தினர் தயங்கினர். பிறகு ஓ.கே., சொல்லி விட்டனர்.
நடிக்க வருவோர் திரைப்பட கல்லுாரிக்கு செல்வர். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் அதற்கு தயாராக ஆங்கரிங்... மாடலிங்... இறங்கினேன். தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அறியாத அன்பும், ஆரூயிர் காதலும் என்ற குறும்படம் பெரிய பிரேக் பெற்று கொடுத்தது. அதையடுத்து கண் மூடியும் தோன்றினாள், குடி, நம்பியுடன் கொஞ்ச துாரம் என பல குறும்படங்களில் நடித்து முடித்த நிலையில் சங்கத்தலைவன் என்ற திரைப்படத்தில் சான்ஸ் கிட்டியது. அதில் என் நடிப்பை கவனித்து சில இயக்குனர்கள் அடுத்தடுத்து அவர்களது படங்களில் நடிக்க வாய்ப்புளித்தனர். ஜாங்கோ, வார்டு 126, கருமேகங்கள் கலைகின்றன, சொப்பனசுந்தரி உள்ளிட்ட படங்களில் நடித்தேன். தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.
'கருமேகங்கள் கலைகின்றன' பட நடிப்பை கவனித்த இயக்குனர் தங்கர்பச்சான் நான் இல்லாத நேரத்தில் மற்ற நடிகர்களிடம் பாராட்டியிருக்கிறார். இதை படப்பிடிப்பு பணிகள் முடிந்த போது சக நடிகர்கள் கூறிய போது நம்மிடமும் ஏதோ சரக்கு இருப்பதாக கருத தோன்றியது.
என்னை பொருத்தவரையில் எல்லா நடிகர், நடிகைகளுமே ரோல் மாடல்கள் தான். அந்தளவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு தான். ஆனால் அதையும் தாண்டி நடிகை நயன்தாரா, இந்தளவு சாதித்ததை நினைத்து கொண்டு இருக்கிறேன்.
ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது வழியில் காக்டீல் (கிளி இனம்) பறவை கிடந்தது. காயத்துடன் கிடந்ததை கண்டு எடுக்க முயன்ற போது பறந்து சென்றாலும் சிறிது நேரத்தில் திரும்பி வந்தது. அதை கால்நடை மருத்துவரிடம் காட்டி குணப்படுத்தி விட முயன்ற போது அது செல்ல மறுத்து என்னுடன் தங்கியது. கையில் அமர்ந்து அது கொஞ்சும் போது எந்த டென்ஷனும் பறந்து விடும். பிறந்த குழந்தையை துாக்கும் போது எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறதோ அந்த சந்தோஷம் பறவைகளை துாக்கி கொஞ்சும் போது கிடைக்கிறது. அதுதான் இன்று 18 காக்டீல் வளர்க்க காரணமாக அமைந்தது. அவற்றுடன் பொழுது போவதே தெரியாது.
மீ டூ, ேஹமா கமிட்டி குறித்து கருத்து சொல்லுமளவுக்கு நான் பெரிய நடிகையாக வளர வில்லை. ஆனாலும் இந்த விஷயங்கள் நடிகைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அலர்ட் செய்வதாக கருதுகிறேன் என்றார்.