/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சேலைக்கேற்ற நிறத்தில் சீர்வரிசை தட்டுகள்
/
சேலைக்கேற்ற நிறத்தில் சீர்வரிசை தட்டுகள்
ADDED : ஜூன் 09, 2024 10:41 AM

புதுமை என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்படாவிட்டால் உலகம் இயங்காமல் அப்படியே நிலைபெற்று விடும். ஓரிடத்தில் தன்னை தக்கவைப்பதற்கும் தகவமைத்து கொள்வதற்கும் புதுமை என்ற முயற்சி தொடர வேண்டும் என்கிறார் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மோனிஷா.
பி.டெக்., பேஷன் டெக்னாலஜி முடித்த மோனிஷா கலை, கைவினைப்பொருட்கள் இரண்டிலும் கைதேர்ந்தவராக மாறிய கதையை விவரித்தார்.
தற்போது பேஷன் டிசைனராக வேலை செய்கிறேன். அம்மா உஷா டெய்லரிங் பயிற்சியோடு ஆரி வேலை, ஆரத்தி தட்டுகளை தயாரிக்கிறார். அம்மாவின் திறமையை பார்த்து என்னை வளர்த்து கொண்டேன். ஓவியத்தில் துவங்கிய பயணம் பென்சில் முகங்களாய் (போர்ட்ரெய்ட்) என்னை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது.
கொரோனா தொற்றின் போது சமூக வலைதளங்கள் மூலம் ஆர்டர் பெற்று படம் வரைந்து கொடுத்தேன். உறவுகளை இழந்தவர்கள் அவர்களது படத்துடன் தங்களையும் சேர்த்து வரைந்து தரச் சொல்கின்றனர். இந்த ஓவியங்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக கூறும் போது உண்மையான அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன்.
மணப்பெண் மெகந்தியில் புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். 'கார்ட் போர்டு' அட்டையில் ஆணி அறைந்து நுால் கட்டி டிசைன்கள் தயாரிக்கிறேன். விசேஷங்களில் அலங்கரித்த ஆரத்தி தட்டு வைப்பது ஒரு கலை. ஆனால் சீர்வரிசை தட்டுகளை பிரத்யேகமாக அலங்கரித்து தருகிறேன். சில்வர் தட்டு, மரத்தட்டுகளில் மணப்பெண் சேலைக்கு ஏற்ற நிறத்தில் வெல்வெட் துணி, ரிப்பன், பூக்கள் வைத்து சீர்வரிசை தட்டு தயாரிப்பேன்.
பழங்கள், சாக்லேட், கல்கண்டு வைக்கும் போது அழகாக தெரியும். மணப்பெண் காஸ்ட்யூம் டிசைனிங் செய்கிறேன். மணப்பெண் நிறம், உயரம், எடைக்கேற்ப உடை தயாரிக்கிறேன். இவற்றை அணிந்து மணமேடை, கடற்கரை 'போட்டோ சூட்' எடுத்தால் பிரமாண்டமாக தெரியும்.
மதுரை திருமங்கலம் அரசு பள்ளி சுவர்களில் தண்ணீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து இலவச ஓவியம் வரைந்துள்ளேன். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறேன். வார்லி, மண்டலா, டாட் மண்டலா, மதுபானி, கலம்காரி, வாட்டர் கலர், அக்ரிலிக் படம் வரைகிறேன். மதுரை மீனாட்சி அம்மனை கிராபைட் (பென்சில்), கரி, வாட்டர் கலர், கலர் பென்சில் கொண்டு வரைய 35 மணி நேரம் ஆனது. இந்த உலக சாதனைக்காக இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு பாராட்டியது. இளம்வயதில் மீனாட்சியம்மன் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
டிசைனர் வேலை தொழில் என்றாலும் பிடித்த விஷயம் ஓவியம் தான். மனதுக்கு நெருக்கமான வேலை செய்யும் போது மனதை லேசாக்கி சந்தோஷத்தில் பறக்கச் செய்கிறது என்றார்.
இவரிடம் பேச: 93613 22536.