
பள்ளி கல்வித்துறையால் வாசிப்பு இயக்கம் - 2023ல் துவங்கப்பட்டது. சின்னஞ்சிறு புத்தகங்களை எளிய மொழியில் படங்களுடன் துவக்கப்பள்ளி குழந்தைகளின் பார்வைக்கு தருவது தான் வாசிப்பு இயக்கத்தின் நோக்கம். இதனை படிக்கும் மாணவர்கள் கதை நடையை புரிந்து தங்களும் கதை எழுத ஊக்கப்படுத்துகிறது, கல்வித்துறை.
இதனால், ஈர்க்கப்பட்ட காங்கயம் அருகே காடையூர், கல்லாங்காட்டுப்புதுார் ஊராட்சி துவக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி தன்யாவர்ஷினி, தன் வீட்டில் குருவி கூடு கட்டியதை, குஞ்சு பொறித்து வாழ்ந்ததை அப்படியே, கதையாக்கியுள்ளார், 'குருவி முட்டை' என்ற தலைப்பிலான கதை, தமிழகம் முழுதும், நடப்பாண்டு (2025 - 26) வெளியாக உள்ள வாசிப்பு இயக்க புத்தகத்துக்கு தேர்வாகியுள்ளது. இதனால், மாணவி சிறுமிக்கும், பள்ளிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இரண்டு வயதில் கதை எழுதும் ஆர்வம் வந்தது குறித்து, தன்யாவர்ஷினியின் வகுப்பாசிரியர் மகேஷ்வரி இப்படி சிலாகித்தார்....
ஏற்கனவே வெளியான வாசிப்பு இயக்க புத்தகம், படங்களை ஆர்வமுடன் பார்த்த சிறுமி, மிஸ், எங்க வீட்டுல ஒரு குருவி கூடு கட்டிட்டு இருக்கு. அது, நம்ம புத்தகத்துல படிச்ச மாதிரியெல்லாம் இருக்கு என ஆர்வமுடன் கூறினார்.
'உனக்கு தெரிந்ததை நீ கதையாக எழுதுமா. உன்னோட கதையும் எல்லாரும் படிக்கிற மாதிரி வாசிப்பு இயக்க புத்தகத்தில் வரும்,' என்று சொல்லி ஊக்கப்படுத்தினேன். அடுத்த நாளே, மாணவியின் பெற்றோரிடம் இது குறித்து சொன்னதும், பள்ளிக்கு வந்து என்னிடம் இது குறித்து கேட்டனர். ஆமாங்க. நீங்க உதவி செய்யுங்க. தன்யாவர்ஷனி ரொம்ப ஆர்வமாக பேசுகிறார் என எடுத்துக் கூறினேன்.
மழலை மொழியில் அவள் சொல்லச் சொல்ல அவரின் அம்மா அந்த கதையை அப்படியே தனக்கு தெரிந்த வகையில், எழுதி கொண்டு வந்திருந்தார். படித்து பார்த்தோம்; நன்றாக இருந்தது. அதனை அப்படியே தலைமையாசிரியை சாவித்திரி மாநில பட்டியலுக்கு அனுப்பி வைத்தார். அதனால், எங்கள் பள்ளி மாணவியின் 'குருவி முட்டை' என்ற தலைப்பில் அந்தக் கதை வாசிப்பு இயக்க புத்தகத்துக்கு தேர்வாகியது, மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது, என பெருமை பொங்க சொன்னார் மகேஷ்வரி.
'வாசிப்பு என்பது ஒரு பெரிய பலம். அதிலும் சிறுவயதில் இருந்தே தவறாமல், சரளமாக வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை அனைத்து மாணவருக்கும் சொல்லித்தருகிறோம். தவறின்றி வாசித்து பழகியதால், அர்த்தம் புரிந்து, உணர்ந்து, இரண்டாம் வகுப்பு மாணவி அக்கட்டுரையை எழுதியுள்ளார். நாங்கள் துாண்டுகோல்கள் தான். மாணவி தான் அகல்விளக்கு,' என தனது தலைமைப்பண்புக்கு இலக்கணமாக பேசினார் பள்ளி தலைமையாசிரியர் சாவித்திரி.