/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
இசைக்கடலில் இன்னும் கற்கிறோம் 'இசை அரசிகள்' அனாகிதா, அபூர்வா
/
இசைக்கடலில் இன்னும் கற்கிறோம் 'இசை அரசிகள்' அனாகிதா, அபூர்வா
இசைக்கடலில் இன்னும் கற்கிறோம் 'இசை அரசிகள்' அனாகிதா, அபூர்வா
இசைக்கடலில் இன்னும் கற்கிறோம் 'இசை அரசிகள்' அனாகிதா, அபூர்வா
ADDED : ஆக 17, 2025 04:04 AM

'' உ ன்னடியே கதி என்றடைந்தேன் தாயே.... உலக நாயகியே... பொன்னையும், புகழையும், பூவரையும் தேடி...'' என்ற கர்நாடக சங்கீத பாடல் மூலம் பல்வேறு கச்சேரிகளில் ரசிகர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றனர் சென்னையை சேர்ந்த கர்நாடக சங்கீத 'இசை அரசிகள்' விருது பெற்ற சகோதரிகளான 39 வயதான அனாகிதா,29 வயதான அபூர்வா.
சண்டே ஸ்பெஷலுக்காக இவர்கள் நம்மிடம்...
கர்நாடக சங்கீதத்தை சிறுவயதில் இருந்தே கற்றோம். எங்கள் பாட்டி சாந்தி ஜெயராமன் தான் முதல் குரு. 14, 13வது வயதில் இருந்தே இருவரும் ஒரே கச்சேரியில் பாடத் தொடங்கினோம். 15 ஆண்டுக்கும் மேலாக பாடி வருகிறோம். எங்கள் குரு ரவிகிரணிடம் இன்னும் பயிற்சி பெற்றுக்கொண்டே இருக்கிறோம். பாடல் மட்டுமின்றி வீணை, வயலினும் இசைப்போம். முதுகலை (இசை), மேலாண்மை துறையில் பட்டமும் பெற்றுள்ளோம்
இந்தியாவிலும் வெளிநாட்டிலுமாக 700 கச்சேரிகளில் கர்நாடக இசை பாடல்களை பாடி, ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளோம். எங்களுக்கு இசை அரசி, இசை சுடர், சண்முக சங்கீத சிரோன்மணி, சங்கீத முத்ரா, எம்.எல்.,வசந்தகுமாரி விருது, எம்.எஸ்., சுப்புலட்சுமி, யுவபுரந்தரா விருதுகள் கிடைத்துள்ளன.
மதுரைக்கு புகழ் மீனாட்சி அம்மன். ஆகையால் மதுரையில் நடக்கும் அனைத்து கச்சேரிகளிலும் அம்மனின் புகழை பாடி அவளது அருளோடு, ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது எங்கள் பேறு.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம், கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடுவதன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் ஆசிர்வாதம், ஆதரவை பெற்றுள்ளோம்.
சமீபகாலமாக கர்நாடக சங்கீதத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி. எளிமையாக பாடி, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இதை பார்த்து இளைஞர்கள், பெண்கள் எங்களிடம் கர்நாடக சங்கீதம் கற்கின்றனர்.
வெளிநாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரிகளில் அந்நாட்டவர்கள் பங்கேற்கும் போது, நமது கர்நாடக சங்கீத பாடல் வரிகள் ஆழமாக இருப்பதாக கூறி ரசிக்கின்றனர். வெளிநாட்டினர் பாடல்களில், நமது சங்கீதத்தை போல இசையுடன் கூடிய அதிக வார்த்தை, அர்த்தங்கள் இல்லை என்கின்றனர். இது நம் கலாசாரத்திற்கு கிடைத்த பெருமை.
பள்ளி மாணவர்களிடம் கர்நாடக இசையை கொண்டு செல்வதற்காக, திருக்குறளை பாடலாக பாடி எளிமையாக மனதில் பதிய வைக்கிறோம். கச்சேரிக்கு வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறோம்.
பள்ளிகளுக்கு கர்நாடக இசையை எடுத்து சென்றால், வருங்கால சந்ததிகளான மாணவர்களிடம் நமது பாரம்பரிய இசை இன்னும் வளர்ச்சி பெறும். அரசு இதனை செய்ய வேண்டும். நம் கலாசாரத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகிறோம் என்பதில் தான் நமக்கு பெருமை. இசை கடல் போன்றது. அன்றாடம் கற்றுக்கொண்டே இருக்கிறோம். கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது, என்றனர்.