/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
தொழில் முனைவோராக உயர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுஷ்மிதா
/
தொழில் முனைவோராக உயர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுஷ்மிதா
தொழில் முனைவோராக உயர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுஷ்மிதா
தொழில் முனைவோராக உயர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுஷ்மிதா
ADDED : டிச 08, 2024 10:18 AM

திருமணத்துக்கு பிறகு குடும்ப தலைவியாகவே வாழ்க்கையை தொடரும் பல பெண்களுக்கு மத்தியில், 'மெய்வருத்தக் கூலி தரும்' என்ற வரிகளுக்கேற்ப தடைகளை உடைத்து இயற்கை விவசாயப் பொருட்களை தமிழகம், வெளிநாடுகளுக்கு அனுப்பி தொழில் முனைவோராக வலம் வருகிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுஷ்மிதா.
தாராபுரத்தை பிறந்த ஊராக கொண்ட சுஷ்மிதா சாப்ட்வேர் இன்ஜினியர். திருமணத்திற்கு பின் கணவரின் ஊரான பட்டுக்கோட்டை சென்ற இவரின் வாழ்க்கை குடும்பம், குழந்தை என மாறியது. கூட்டுகுடும்பத்தில் வீட்டிற்குள்ளே நாட்கள் கழிந்தன. குழந்தை பிறந்ததும் தன் குழந்தைக்கு ஆரோக்கிய ஆர்கானிக் உணவு கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே சுஷ்மிதாவை தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது.
இயற்கை உணவுகளை தேடி அலைந்த பயணம் விவசாயிகளை நோக்கி நகர்ந்தது. அப்போது தான் அவருக்கு தெரிந்தது வெளி மார்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கும், விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதற்குமான வேறுபாடு. அப்போது தோன்றிய எண்ணம் தான் நாம் ஏன் விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை வாங்கி, கடைகளுக்கு கொடுக்கக் கூடாது என்பது.
ஸ்ட்ராபெர்ரி பழங்களை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி முதன்முறையாக கடை ஒன்றிற்கு கொடுக்க சென்றிருக்கிறார். முதலில் கிடைத்த லாபம் ரூ.70 தான் சுஷ்மிதாவின் முதல் வருமானம். இப்படி தொடங்கிய பயணம் விரிவடைந்தது.
பழங்களில் தொடங்கி அரிசி, முட்டை, பால் என ஒவ்வொரு ஊரின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் என மாதம் 2 டன் வரை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்கிறார். சில்லறை விற்பனையாக தொடங்கி தற்போது மொத்த விற்பனையாளராக மாறியிருக்கிறார். இதற்காக ஒவ்வொரு ஊராக பயணித்து விவசாயிகளையும், மக்களையும் சந்தித்து ஆர்கானிக் பொருட்கள் குறித்து எடுத்துரைத்து மார்கெட்டை தமிழகம் மட்டுமல்லாது பிரிட்டன், ஓமன் என வளர்த்துள்ளார். அதிக லாபத்தை எதிர்பார்க்காமல், குறைந்த விலையில் இயற்கை உணவுகள் மக்களிடம் சேர வேண்டுமென பயணித்து வருகிறார்.
விவசாயிகளுக்கான உரிய வருமானம் கிடைப்பதில்லை எனக் கூறும் சுஷ்மிதா, ஒவ்வாரு ஊரிலும் விவசாய அங்காடிகளை ஏற்படுத்தி விவசாயப் பொருட்களை நேரடியாக மக்கள் வாங்க வேண்டும் என்கிறார்.
விவசாயிகளை கைவிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வரும் தலைமுறையினர் உடன் நிற்க வேண்டுமென கூறுகிறார். இதோடு இவர் வாடிக்கையாளர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்து இந்த உணவை எடுத்துக் கொண்டால் இவை சரியாகுமென உணவையும் மருந்தாக்கி வருவதோடு, பல பெண்களை தொழில்முனைவோர் ஆக்கும் நோக்கில் தன்னால் ஆன உதவியையும் செய்து வருகிறார்.
சுஷ்மிதா கூறியதாவது: இந்த தொழிலை துவங்கியபோது முதலீட்டிற்கு பணம் இல்லை. அப்போது ஊட்டியை சேர்ந்த இர்பான் என்பவர், எங்களின் பொருட்களை விற்றபின் பணம் கொடுங்கள் என நம்பிக்கை கொடுத்தார். அப்படி ஆரம்பித்தேன். அந்த நம்பிக்கை என்னை இந்தளவிற்கு அழைத்து வந்துள்ளது.
உணவு தான் மருந்து. நோய்களை சரியான இயற்கை உணவினை கொண்டே கட்டுப்படுத்த முடியும். மக்களிடம் சமீப காலமாக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதனால் எங்களின் பொருட்களுக்கு மார்கெட்டில் மவுசு உள்ளது. பெண்கள் எப்போதும் வீட்டில் முடங்கி விடக்கூடாது. தடைகள் எத்தனை இருப்பினும் தன்னம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
இவரை வாழ்த்த 63820 25020