ADDED : அக் 15, 2023 11:34 AM

அலங்காரம் என்பது இயல்பான ஒன்றுடன் கூடுதல் பொருட்கள் அல்லது வண்ணங்களை சேர்ப்பதன் மூலம் மிகவும் அழகாக மாற்றுவது. அலங்காரம் ஒரு கலை. மக்களின் மனக்கவலையை போக்கி அருளை அள்ளித்தரும் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்யும் கலைஞர்கள் ஊருக்கு சிலர் தான் உள்ளனர்.
இந்த வரிசையில் முன்னணியில் இருக்கிறார் ராமநாதபுரத்தில் மளிகைகடை நடத்தும் எஸ்.மகேந்திரன் 28 வயதான இளைஞர். பத்தாண்டுகளாக சுவாமி அலங்காரம் செய்கிறார். சுவாமி அலங்காரம் என்றாலே.. மளிகை கடை மகேந்திரனை கூப்பிடுங்க.. என பெயர் பெற்றுள்ளார்.
மகேந்திரன் கூறுகிறார்... நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் கோயில்களில் விழா நேரத்தில் மூலவர், உற்ஸவரை அலங்காரம் செய்வதை கூர்ந்து கவனித்தேன். அந்த திவ்ய பணியில் ஆர்வம் மேலிட்டது. சுவாமி அலங்கார கலைஞர் சுசீந்திரன்செட்டியாரிடம் அலங்கார கலைகள் கற்றுக்கொண்டேன்.
ராமநாதபுரத்தில் சிவன், முருகன், அம்மன், விநாயகர், பெருமாள் சுவாமிகளை நான் அலங்காரம் செய்தது பக்தர்களுக்கு பரவசம் தந்தது. மதுரை, சிவகாசி, துாத்துக்குடி திருவிழா, ஆடிவெள்ளி, புரட்டாசி சனி, சபரிமலை சீசன்களில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யும் வாய்ப்பு வந்தது.இந்த பணி காரணமாகவே அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். விரதமிருந்து பக்தியுடன் பணிக்கு செல்வேன்.
மூலவர், உற்ஸவர் சிலைகளை பட்டாடைகள், நகை, மலர் மாலைகள் அணிவித்து அழகுப்படுத்துகிறோம். சிலர் உற்ஸவர் போல சிலை செய்து தர ஆர்டர் தருகின்றனர். அஷ்டபாதம் எனப்படும் கை, கால்களை தனித்தனியாக வாங்கி கூட்டல் வடிவிலான (குச்சி, கம்பியால்) அமைப்பை உருவாக்கி அதில் அஷ்டபாத அமைப்புகளை, பொருத்தி சுவாமி சிலைகளை உருவாக்குகிறேன்.
கோயில்களில் உள்ள உற்ஸவமூர்த்தி போல செய்து பட்டாடை, நகை, கிரீடம் பொருத்தி காண்பவரை கையெடுத்து கும்பிடும் அளவிற்கு செய்கிறேன். கோயில் அர்ச்சகர் உதவியுடன் உற்ஸவர், மூலவர் சிலையையும் அலங்காரம் செய்கிறேன்.
அலங்காரத்தின் தன்மையை பொறுத்து அன்பளிப்பு வாங்குகிறேன். கிரகபிரவேசம், கல்யாண நிகழ்ச்சிகளிலும் சுவாமி அலங்காரம் செய்கிறேன். மூலவர் அலங்காரம் இரண்டு மணி நேரம், உற்ஸவர் அலங்காரம் ஒரு மணி நேரம்ஆகும். காலையில் மளிகைக்கடையை கவனிக்கிறேன். அலங்கார பணி இருந்தால் கடையை அடைத்து விடுவேன் என்றார்.
இவரை வாழ்த்த.. 99522 40565
