பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் 'அங்காயா வம்சம்'
பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் 'அங்காயா வம்சம்'
ADDED : ஏப் 26, 2026 04:21 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் கண்மணி எழுதிய 'அங்காயா வம்சம்' என்ற நாவல் குறித்து எழுத்தாளர் அம்சப்பிரியா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். மனித வாழ்வின் உணர்ச்சிகரமான பரிமாணங்களை வெளிப்படுத்தும் நாவலுக்குத் தனித்துவமான இடமுண்டு. அவ்வகையில், நான் வாசித்த நாவல்களில் 'அங்காயா வம்சம்' என்ற இந்நாவல் முக்கியமானது.
பொதுவாக வரலாற்று நாவல்கள் அரசர்களின் வாழ்க்கை, அரண்மனைச் சூழல்களை மையமாகக் கொண்டிருக்கும். இந்நாவல் எளிய மக்களின் வாழ்வியல் அனுபவங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார போராட்டங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
நாவலில் பெண்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்களின் போராட்டம் உயர்வாக சித்தரிக்கப்படுகிறது. இரு குடும்பங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவற்றில் அங்கம்மா என்ற கதாப்பாத்திரம் கதைக்கு மிகவும் வலு சேர்க்கிறது. சிறுவயதில் திருமணம் செய்யப்பட்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தாலும், தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடும் பெண்ணாக அவளது பாத்திரப்படைப்பு உள்ளது.
அவளின் வாழ்க்கை, தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாகவும், பெண்களின் உறுதிக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
''மனிதர்கள் தங்களை ஏதாவது ஒரு வழியில் அடையாளப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சிக்கின்றனர்,'' என்ற வரிகள், ஏகாம்பரம் என்ற கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.
ஆடம்பரமும், உழைப்பும் கலந்து வாழ்ந்த ஏகாம்பரத்தின் வாழ்க்கை, காலப்போக்கில் போர்களாலும், பொருளாதார மாற்றங்களாலும் சிதைந்து போகிறது.
குறிப்பாக ஜப்பானில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதல், அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகளாவிய அரசியல் நிகழ்வுகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரும் படைப்பாகவும், வரலாற்று உண்மைகளை உயிர்ப்பிக்கும் ஆவணமாகவும் திகழ்கிறது 'அங்காயா வம்சம்'.
