UPDATED : மே 03, 2026 08:54 AM
ADDED : மே 03, 2026 04:11 AM

மிகுந்த நம்பிக்கையுடன் மேடை ஏறினான் அந்த இளைஞன். 'கருமேகம் போல் வீற்றிருக்கும் கல்லூரி முதல்வர் அவர்களே' என மனப்பாடம் செய்த வரிகளை பேசத்தொடங்கினான். 2வது வரி பேசும்போதே, பதற்றத்தில் வார்த்தைகள் குளற, அவன் உடல் வியர்த்து ஒழுகியது. 5 வரிக்கு மேல் பேச முடியவில்லை; உலகமே இருட்டிக் கொண்டு வந்ததாக உணர்ந்தான். எதிரில் இருப்பவர்களை, ஏறெடுத்து பார்க்க தைரியம் இல்லாமல், அழுகையை அடக்கிக் கொண்டு பாதியில் வெளியேறினான்.
அப்போது தெரியவில்லை அந்த இளைஞனுக்கு, 'எந்த தமிழ் தன்னை அழ வைத்ததோ, அதே தமிழ் தன்னை ஜனாதிபதியிடம் விருது வாங்க வைக்கும் என்று'. அன்று மேடையில் அழுத இளைஞன், இன்று மேடையை ஆளும் பேச்சாளர், பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர் என பன்முகங்கள் கொண்ட பா.ஜெய் கணேஷ்.
அவர் நம்மிடம் பகிர்ந்தது...
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சொந்த ஊர். சிறு வயதிலேயே தந்தை இறைவனடி சேர்ந்து விட்டதால், இளமைப் பருவம் வறுமையின் பிடியில் நகர்ந்தது. பள்ளி படிக்கும் போதே, ஓய்வு நேரத்தில் ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்தேன். பின் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் இளங்கலை பயின்றேன்.
சிறிய வீடு என்பதால், சமையலறை இடத்தில் கொசுக்கடியோடு படிப்பேன். வார இறுதியில் வேலைகளுக்குச் சென்று விடுவேன். முதுகலை வந்த போது, தமிழ்தாத்தா உ.வே.சா., பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மேடை தந்த நம்பிக்கை சாதாரண விஷயம் இல்லை. பின்னாளில், பொதிகையில் 2016ல் 'ழகரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் அன்று பயந்த நான் 1 மணி நேரம் 30 நிமிடம் நேரலை நிகழ்ச்சியை 59 வாரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் இடைவிடாமல் வெற்றிகரமாக நடத்தினேன்.
முதுகலை முடிக்கும் போது, நெட் தேர்வு உதவித்தொகை பெறும் தகுதியுடன் தேர்வு பெற்றேன். 5 மாதங்களுக்கான ரூ.40 ஆயிரம் உதவித்தொகையை வீட்டில் காட்டியபோது, அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். 'தமிழ் படிச்சு என்னடா பண்ணுவீங்க' என அலட்சியமாக பார்த்தவர்கள் கூட, ஆச்சரியப்பட்டனர்.
நமக்குள்ளும் ஒரு நடிகன்
பாடத்தை தாண்டி படிக்க வேண்டும் என்ற உந்துதல் சென்னை பல்கலையில் தான் கிடைத்தது. இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே, பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் புத்தக கண்காட்சியில், பதிப்பகங்களில் பணியாற்றுவேன்.
பேராசிரியர் மங்கையின் குறிஞ்சிப்பாட்டு நாடகத்தில், பாரி கதாபாத்திரம் வாய்ப்பு கிடைத்தது. நடிகர்கள் நாசர், சாயாசிங்குடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. 'நமக்குள்ளே ஒரு நடிகன் இருக்கான் டா' என மைண்ட் வாய்ஸ் கேட்டது.
2009 ல் தமிழ் பதிப்புலகம், தமிழ் நுால் தொகுப்பு வரலாறு, அறியப்படாத தமிழ் உலகம் என ஆய்வு மலர்களை தொகுத்து வெளியிட்டேன். 2011ல் 'தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு' ஆய்வு நுாலை வெளியிட்டேன். இதற்காக 7 ஆண்டுகள் ஆய்வு செய்து, தொல்காப்பியம் தொடங்கி 19ம் நுாற்றாண்டு வரை யாப்பிலக்கணத்திற்கு எழுதப்பட்ட உரைகளை தொகுத்து காலவரிசைப்படுத்தினேன். பழைய பதிப்புகள், ஓலைச்சுவடிகள் தொடர்பாக ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டேன்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய 'ஏழாம் இலக்கணம்' நுால் 100 ஆண்டுகள் பதிப்பிக்கப்படாமல் இருந்தது. பேராசிரியர் மணிகண்டன் வழிகாட்டலில், அருள் என்ற நண்பருடன் சேர்ந்து வெளியிட்டேன்.
மத்திய அரசின் காசித் தமிழ் சங்கத்தில் பிரெய்லி நுாலை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்நுாலை புற வல்லுநர் என்ற முறையில் உருவாக்கும் குழுவில் பணியாற்றினேன். செம்மொழி தமிழாய்வு நிறுவனம், என்.சி.ஆர்.டி., இணைந்து நடத்தும் சைகை மொழியில் திருக்குறள், பிரதம மந்திரி இ வித்யாலயா யு டியூப் சேனலில், பிற மாநிலத்தவர்கள் தமிழ் கற்பதற்கு, உள்ளடக்கங்களை உருவாக்கியும் தந்துள்ளேன்.
சாகித்ய அகாடமி அங்கீகாரம்
'நிறைய நவீன கவிதைகளை படித்திருக்கிறோம்; நாம் ஏன் ஆழமான கவிதைகள் படைக்கக்கூடாது' என யோசித்தேன். அந்த முயற்சியிலும் இறங்கினேன். ஒரேயடியாக 300 கவிதைகள் எழுதினேன். 'மஞ்சள் வெயிலும் மாயச்சிறுமியும்' என்ற தலைப்பில் நுாலாக வெளியிட்டேன். இளையவர்களின் புதுக்கவிதைகள் என சாகித்ய அகாடமி வெளியிட்ட நுாலில், எனது 8 கவிதைகள் இடம்பெற்று இருந்தது பெருமை. பிறகு 'சித்தனும், புத்தனும்' கவிதைத் தொகுப்புகள் வெளியானது. கல்லுாரியில் என்னுடைய கவிதைகள் பாட நுாலாக வைக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், எனது முதல் விருதாக சிறந்த எழுத்தாளர் விருது கிடைத்தது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 'இளம் ஆய்வறிஞர்' விருது கிடைத்தது. தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு கவுரவப்படுத்தியது. அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையில் விருது வாங்கிய தருணத்தில், 'என் அன்னைத்தமிழ் இந்தச் சிறுவனின் கைப்பிடித்து, உயரிய சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது' என்று நினைத்தேன்.
ஆய்வு வட்டத்துக்குள் சுருங்கி இருந்தேன். 'நாம் ஏன் நமக்கு தெரிந்த, இலக்கிய நுால்களை அறிமுகம் செய்யக் கூடாது' என முகநுாலில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன். 'உங்களுடைய உச்சரிப்பு நன்றாக உள்ளது; இயல்பான புன்முறுவலோடு பேசுகிறீர்கள்' என மக்கள் உற்சாகப்படுத்துகின்றனர். 'எங்கோ அடுப்பங்கரையில் தொலைந்திருக்க வேண்டிய ஒருவனை, எல்லாருக்கும் முன், தலை நிமிரச் செய்த தமிழை என்றும் மறவேன்' என்றார்.
என் அன்னைத்தமிழ் இந்தச் சிறுவனின் கைப்பிடித்து உயரிய சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது
