/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!'
/
'ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!'
ADDED : செப் 14, 2025 01:46 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை நம் வாசகர்கள் இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் சிவசக்தி நாகராஜ் எழுதிய, 'ஸ்ரீஅன்னையின் கீதங்கள்' என்ற ஆன்மிக நுால் குறித்து, பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தினமலர் வாரமலரில், 25 ஆண்டுகளுக்கு முன், 'உங்களுக்கு பிடித்த புத்தகம் எது?' என்று கேட்டு இருந்தனர். நான், 'ஸ்ரீஅன்னையின் கீதங்கள்' என்ற இந்த புத்தகத்தை பற்றிதான் சொன்னேன்.
அன்றில் இருந்து இன்று வரை, இந்த புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். மனதில் குழப்பம், மன அமைதி இன்மை, கவலை, துக்கம் என, எது என்னை பாதித்தாலும், உடனே இந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கி விடுவேன். நான்கு பக்கங்கள் படித்தால் போதும்; மனதில் உள்ள எல்லா பாரமும் பனிபோல் கரைந்து விடும்.
நான் போற்றி பாதுகாத்து வரும், 1000 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எழுதியவர் எழுத்தாளரோ, பேராசிரியரோ, வரலாற்று ஆய்வாளரோ இல்லை.
இவர் திண்டுக்கலை சேர்ந்த இன்ஜினியர் சிவசக்தி நாகராஜ் என்பவர். இதில் இல்லாத ஸ்லோகங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எல்லாம் இருக்கின்றன.
பல ஆண்டுகள் ஆய்வு செய்து தொகுத்து இருக்கிறார். விநாயகரில் துவங்கி, நாட்டார் தெய்வங்கள், கிராம தேவதைகள் வரை அனைத்து கடவுள்களை பற்றியும், ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
'ஸ்ரீஅன்னையின் கீதங்கள்' என்ற இந்த நுால், அனைத்து உலகத் தமிழர்களின் வேதங்கள்' என்று குறிப்பிடுகிறார் நுாலாசிரியர். அது உண்மைதான். நம் ஞானக் கண்களை திறக்கும் திறவுகோலாக இந்த நுால் உள்ளது.
இதில் உள்ள ஸ்லோகங்கள், சமஸ்கிருதத்தில் உள்ளன. அதை அப்படியே தமிழிலும் மொழியாக்கம் செய்து கொடுத்து இருக்கிறார். அதற்கான விளக்க உரையும் உள்ளது. அதனால் தொடர்ந்து படித்து வருகிறேன்.
எனக்கு ஆன்மிகத்தில்தான் அதிக நாட்டம் உண்டு. சாஸ்திர, சம்பிரதாயங்களை மீறி எதையும் நான் செய்யமாட்டேன். கிரைம் நாவல் எழுதும் எனக்கு, எப்படி ஆன்மிகத்தில் இத்தனை நாட்டம் என்று கேட்கலாம். நம்பிக்கை என்பது வேறு; எழுத்து என்பது வேறு. எழுத்தை நான் ஒரு தொழிலாகதான் செய்கிறேன்.
நான் நாவல் எழுத போகும் முன், இந்த புத்தகத்தில் சில பக்கங்களை படித்து விட்டு எழுத துவங்குவேன். எல்லா விசேஷ தினங்களுக்கும், பண்டிகைகளுக்கும் ஏற்ற ஸ்லோகங்கள் இதில் உள்ளன. புத்தகத்தை படித்தால் கோயிலுக்குள் சென்று, வெளியில் வருவது போல் இருக்கும். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தினமலரில் இந்த புத்தகம் பற்றி, நான் சொல்லி இருந்த கருத்தை அறிந்த அவர், 20 ஆண்டுகளுக்கு முன், என் வீட்டுக்கு வந்து நன்றி தெரிவித்தார். இந்த நுாலை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து சென்றார்.
இதில் நான் எழுதிய ஒரு பக்க மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், இந்த நுாலை வாங்கி, தினமும் படிக்க வேண்டும். இப்போது கடைகளில் இந்த நுால் கிடைக்குமா என தெரியவில்லை.
மனதில் குழப்பம், மன அமைதி இன்மை, கவலை, துக்கம் என, எது என்னை பாதித்தாலும், உடனே இந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கி விடுவேன். நான்கு பக்கங்கள் படித்தால் போதும்; மனதில் உள்ள எல்லா பாரமும் பனிபோல் கரைந்து விடும்.