ADDED : அக் 26, 2025 09:53 AM

பிறந்தோம் ... வாழ்ந்தோம் என்று வாழ்க்கையை சாதாரணமான கடந்து செல்ல மனமில்லை. என்னை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கலையைத் தேர்ந்தெடுத்தேன். எனது பயணம் சுகமாக மாறிவிட்டது என்கிறார் மதுரையை சேர்ந்த ஜீவிதா.
எல்லோரையும் போல ஒரே மாதிரியான கலைப்படைப்புகளை செய்யாமல் எனக்கென தனிப்பாதையை தேர்ந்தெடுத்தேன் என்று ஆரம்பித்தார் ஜீவிதா.
மதுரை கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியலில் கோல்டு மெடல் வாங்கினேன். திருமணமான நிலையில் எம்.எஸ்சி., முடிக்க முடியாமல் டீச்சர் டிரெயினிங், டெட் தேர்வு முடித்தேன். குடும்பம், குழந்தைகள் என்றானதால் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை. வெறுமனே வீட்டில் இருப்பதா என யோசித்து கலைகள் மீது கவனத்தை மாற்றினேன்.
ஒவ்வொருவரின் கலைப்படைப்புகளை பார்க்கும் போது இதிலிருந்து நாம் மாறுபட்டு செய்தாலென்ன என்று யோசித்தேன்.
குறைந்த பட்ஜெட்டில் ஆரத்தி தட்டுகளை தயாரித்தேன். அக்கம்பக்கத்தினர், உறவினர்களின் கவனத்தை ஈர்த்தது. பொம்மைகளை வாங்கி அழகுபடுத்தி திருமண விசேஷங்களுக்கு ஆரத்தி தட்டுகளாக்கி கொடுத்தேன். அதுவும் வரவேற்பைப் பெற்றது. திருமணத்திற்கான கலைநயமிக்க பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரித்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்குமிடம் திருமணம் தான். மண்டபத்தின் அலங்காரத்தை அமைதியாக உட்கார்ந்து மனது ரசித்து மதிப்பீடு செய்யும். அந்த தருணங்களை நினைவுபடுத்தி எனது பொம்மைகளுக்கு அழகூட்டி ஆரத்தி தட்டுகளாக உலவவிட்டேன்.
விழாக்காலங்களில் பெண்களின் ஆடைகளுக்கு ஏற்ப நகைகள் அணிவதில் ஆர்வமாக இருப்பர். எனவே பட்டுநுாலில் முப்பரிமாண தோற்றத்தில் வண்ணங்களில் ஹேர் கிளிப், வளையல், காதணிகளை உருவாக்கினேன். இந்த முப்பரிமாண அணிமணிகள் மற்றவர்களின் பார்வையில் எளிதில் பாராட்டைப் பெற்றது.
தற்போது ரெக்ஸின் சீட்டில் உல்லன் நுாலை ஒட்டி பல்வேறு உருவங்களை உருவாக்குகிறேன். குத்துவிளக்கு வைப்பதற்கான சீட்டாக வைக்கலாம். ரங்கோலி வடிவில் வரவேற்பறையில் தரையில் விரிக்கலாம். ஜல்லிக்கட்டு, குழந்தைகளின் பாதங்கள் வரைந்த சீட்டுகளை சுவர்களில் அழகாக மாட்டலாம்.
'ஷேடோ பாக்ஸ் மினியேச்சர்' என்ற பெயரில் ஒவ்வொருவரின் வாழ்க்கையை அட்டைப்பெட்டிக்குள் சின்னஞ்சிறு உருவங்களாக செதுக்குகிறேன். திருமணம் என்றால் ஒவ்வொரு சடங்குகள் குறித்த காட்சிகள் மினியேச்சர்களாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆசிரியர் பணி ஓய்வு பெறுகிறார் எனில் வகுப்பறை, கரும்பலகை, இளமைக்கால புகைப்படங்களுடன் அட்டைப்பெட்டிக்குள் நிரந்தர நினைவுப்பெட்டகமாக பொதிந்திருக்கும். இந்த மினியேச்சர் பெட்டிகளுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்கிறேன். எனது திறமையை வெளிக்கொணரவும் முடிகிறது. பட்ஜெட்டை தாண்டி அதிகமாக செலவு செய்யவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பதிவு செய்கிறேன். என்னை புதுப்பித்துக் கொண்டிருக்கும் கலையை கைபிடித்து கரைசேருகிறேன் என்றார் ஜீவிதா.
இவரிடம் பேச 99526 92697.

