தாம்பூலப் பையில் பாரம்பரிய விதைகள்: இயற்கை விவசாயத்துக்கு விழிப்புணர்வு
தாம்பூலப் பையில் பாரம்பரிய விதைகள்: இயற்கை விவசாயத்துக்கு விழிப்புணர்வு
UPDATED : மே 31, 2026 08:54 AM
ADDED : மே 30, 2026 05:53 PM

இன்று, பலரும் தங்கள் பொருளாதார வசதிக்கேற்ப ஆடம்பரமான நினைவு பரிசு வழங்குகின்றனர். ஆனால், இயற்கை விவசாயிகளோ ஒரு படி மேலே போய், தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு பாரம்பரிய விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை அன்பளிப்பாக வழங்கி அசத்துகின்றனர்.
முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளைப் பரிமாறுவதுடன், விதைப்பைகளையும் வழங்கி மக்கள் மத்தியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை விதைத்து வருகின்றனர் இந்த மண்ணின் மைந்தர்கள்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க இயற்கை விவசாய அணி மாநில செயலாளர் வேலுசாமி சொல்வது என்ன...
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே இயற்கை உணவுகள் மற்றும் ஆர்கானிக் விவசாயம் குறித்த தேடலும் விழிப்புணர்வும் உச்சத்தில் இருந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த ஆர்வம் மக்களிடையே சற்றே குறைந்து வருகிறது.
விவசாயிகளிடம் இயற்கை விவசாய ஆர்வம் நீடித்தாலும், அது பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதற்காகவே, இதுபோன்ற விசேஷங்கள் மற்றும் திருவிழா வாயிலாக பாரம்பரிய விதைகளையும், இயற்கை உணவு முறைகளையும் மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். சுத்தம் என்ற பெயரில் இன்று பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
'பேப்பர் கப்' தானே, உடலுக்குப் பாதுகாப்பானது' என்று நாம் நினைத்தால் அதுதான் தவறு. அதிலுள்ள மெழுகு பூச்சு, சூடான பானங்களை ஊற்றும்போது உருகி நம் உடலுக்குள் சென்று தீங்குகளை விளைவிக்கிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் இந்த 'கப்'களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
ஆடம்பரப் பொருட்களுக்கும் இதர தேவைகளுக்கும் தாராளமாகச் செலவு செய்யும் மக்கள், உடல் ஆரோக்கியம் தரும் இயற்கை உணவுகளுக்கு சற்று கூடுதல் விலை கொடுக்க யோசிக்கின்றனர். இயற்கை விளை பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற தேடலும், பலரிடம் இல்லை. விழிப்புணர்வு பெற்ற மக்கள், தொடர்ந்து இயற்கை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது நிம்மதியளிக்கிறது.
'பேப்பர் கப்' தானே, உடலுக்குப் பாதுகாப்பானது' என்று நாம் நினைத்தால் அதுதான் தவறு. அதிலுள்ள மெழுகு பூச்சு, சூடான பானங்களை ஊற்றும்போது உருகி நம் உடலுக்குள் சென்று தீங்குகளை விளைவிக்கிறது
