UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 09:55 PM

வெகுஜன மக்களின் பாராட்டுக்களை பெற்ற கூழாங்கல், தாய்க்கிழவி, மொத ராத்திரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் குணசித்திர நடிகை பானு பிரியா. அக்காவாக, அம்மாவாக என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். அடுத்தடுத்து பெரிய பிராஜெக்ட்டுகளில் நடித்து வருகிறார். எதிர்காலத்தில் சிறந்த குணசித்திர நடிகையாக வலம் வர வாய்ப்புள்ள இவர் கூறியதாவது:
“சொந்த ஊர் சென்னை அனகாபுத்துார். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். பள்ளி படிக்கும் போது டி.வி., சேனலில் நடிகை தேவை விளம்பரத்தை பார்த்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கும் போது வீட்டில் மாட்டிக் கொண்டேன். சினிமாவுக்கு போக அனுமதிக்கவில்லை. வளர வளர சினிமா ஆசையும் வளர்ந்தது. கல்லுாரியில் விஸ்காம் படிப்பில் சேர்ந்தேன்.
சிறிது காலம் டிவி சேனல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினேன். பின் பக்ருதீன் மாஸ்டரின் நாடகங்களில் நடித்து நடிப்பு பயின்றேன். அப்போது அங்கு வந்திருந்தார் இயக்குனர் வினோத் ராஜ். அவரது கூழாங்கல் திரைப்படத்தில் தான் அறிமுகமானேன்.
சினிமாவில் அறிமுகமாகும் முன்பு வரை குறும்படங்களில் குணசித்திர, அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்தேன்.
சமீபத்தில் தாய் கிழவி திரைப்படத்தில் நடித்தேன். படத்தின் துவக்கத்தில் நடிகை ராதிகா கதாபாத்திரம் வரும் போது செயினை கழட்டி வைக்கும் காட்சியில் நடித்தது வரவேற்பை பெற்றது. மொத ராத்திரி திரைப்படத்தில் பக்ஸ் மனைவியாக தேவி கதாபாத்திரத்தில் நடித்தேன். இத்திரைப்படத்தில் நீளம் தாண்டுதலில் சாதிக்க முடியாமல் ஒரு பெண்ணின் இளமை கால கனவு கரைந்ததை கூறும் வசனத்தில் நடித்தது பலருக்கு பிடித்தது.
இப்போது என்னை எங்கு பார்த்தாலும் அந்த வசனத்தை வைத்து பேச வருவர்.
வெற்றிமாறனின் ராஜன் வகையறா திரைப்படத்தில் கிஷோரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இயக்குனர் மாரிசெல்வராஜின் மஞ்சனத்தி, நடிகர் தனுஷின் ஓம், அவரது 56வது படம், நடிகர் சந்தானத்தின் லவ் பைட் திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
மொத ராத்திரி ஹிட்டிற்கு பிறகு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேனோ, அவ்வளவு பயமாகவும் உள்ளது. அடுத்து என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என மக்கள் கேட்கின்றனர்.
என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் இந்த பெண் நடிப்பார் என இயக்குனர்கள் நினைக்கும் அளவுக்கு திறமையை வளர்த்து வருகிறேன். எனக்கு வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை.
மொத ராத்திரி படக்குழு நட்பு ரீதியானது. நடிகர் ரிஷிகாந்த், நடிகை அனிஷ்மா எளிமையாக நடந்து கொள்வர். இயக்குனர் ராஜா கருப்பசாமி மிகவும் கூல் ஆனவர்.
சினிமாவில் இருப்பதை முதலில் என் பெற்றோர் வெறுத்தனர். தற்போது என் நடிப்பை பலர் பாராட்டும் போது என்னை பார்த்து பெருமைப்படுகின்றனர்.
சினிமாவில் வெற்றி பெற தொடர்புகள், சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தும் எண்ணம் அவசியம். எல்லா தொடர்புகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து அவர்களிடம் வாய்ப்பு கேட்க வேண்டும்.
சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி நடித்து நம் முகத்தை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். நான் 9 ஆண்டுகளாக சினிமாவில் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.
சினிமாவில் நடிப்பதற்கு கேமரா, திரைக்கதை, லைட்டிங் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பது நம் நடிப்பை இன்னும் மெருகேற்றும் என்றார்.
