/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
காளைக்கு பரிசாக பசுவும் கன்றும் தருவோம்
/
காளைக்கு பரிசாக பசுவும் கன்றும் தருவோம்
ADDED : ஜன 05, 2025 05:13 AM

மதுரை பாலமேட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த காளைக்கு பசுவும் கன்றும் பரிசாக தருகிறேன். பாரம்பரியத்தை மீட்டெடுக்க இதுவே வழி என்கிறார் மதுரை அலங்காநல்லுாரைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்குமார்.
அவர் கூறியது: ஜல்லிக்கட்டு கார்ப்பரேட் நிறுவன விளையாட்டு அல்ல. மண்ணின் வீரத்தையும் காளையின் பெருமையையும் நிலைநாட்டும் வீர விளையாட்டு. பாரம்பரியத்தை வழிவழியாக கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சி. இதில் கார், பைக் போன்ற பரிசுப் பொருட்கள் தருவதை விட பசுக்கள் தருவது தான் சிறந்தது என்பது எனது கருத்து.
2016ல் மதுரை அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரம். மண்ணின் மைந்தராய் நானும் போராட்டக்களத்தில் முன்நின்றேன். போராட்டத்தில் வெற்றி கிடைத்து 2017ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் தேர்வான சிறந்த காளைக்கு காங்கேயம் பசுவுடன் கன்றை பரிசாக வழங்கினேன்.
ஜல்லிக்கட்டு போட்டியில் புலிக்குளம், மலைமாடுகள், காங்கேயம் என உள்நாட்டு ரகங்கள் தான் பங்கேற்கின்றன. இவற்றுக்கு பெருமை சேர்க்க சிறந்த காளைக்கு காங்கேயம் பசு பரிசாக தர நினைத்தேன். அதன் பிறகு 2020 முதல் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக பாலமேடு போட்டியில் பசுவும் கன்றும் வழங்கி வருகிறேன்.
காங்கேயம் பசு மதிப்பு ரூ.ஒருலட்சம். பசுவும் கன்றுமாக வழங்கும் போது காளை உரிமையாளர்கள் அந்த காளையுடன் பசுவை சேர்த்து வளர்ப்பார்கள். விற்க மனது வராது. ஒரு பசு 13 முறை கன்று ஈனும். தினமும் 6 லிட்டர் பால் கறக்கும். இது ஏ 1 நாட்டு மாட்டு பால் என்பதால் விலை கூடுதலாக விற்கலாம். ஜல்லிக்கட்டில் பரிசு வழங்குவதை பார்த்த அலங்காநல்லுார் இளைஞர்கள் கபடி போட்டிக்கும் பரிசு வழங்க கேட்டனர். சிறந்த கபடி வீரராக தேர்வு பெறுவோர் நிச்சயம் எங்கள் பகுதி இளைஞராக தான் இருப்பார். அவருக்கு பசுவின் அருமை தெரியும் என்பதால் கன்றுக்குட்டியை (ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம்) பரிசாக வழங்குகிறேன்.
உழவுக்கு நாட்டுமாடு பயன்பாடு குறைந்து விட்டது. கிடைமாடுகளாகி விட்டால் இறைச்சிக்கு தான் பயன்படும். ஜல்லிக்கட்டு போட்டி தான் நாட்டுமாடுகளை உயிர்ப்புடன் வாழ வைக்கிறது. அதற்கு கைமாறு செய்ய பசுக்களை தான் பரிசாக வழங்க வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட நாட்டு மாட்டினங்கள் இருந்த நிலையில் தற்போது பாதியாக குறைந்து விட்டது. எனவே ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமல்ல பரிசும் மண் சார்ந்து இருக்க வேண்டும். அதுவே பாரம்பரிய வீர விளையாட்டுக்கான பெருமை என்றார்.