/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கொரோனா 'கொடுத்த' எழுத்தாளர் கோகிலா
/
கொரோனா 'கொடுத்த' எழுத்தாளர் கோகிலா
ADDED : டிச 15, 2024 11:14 AM

சென்னையில் வீடற்றோர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள், தெருவோரங்களில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து வெளிவர என்ன முயற்சி மேற்கொள்கிறார்கள், அவர்கள் தரப்பு நியாயங்கள் என்ன என்பது பற்றி 6 மாதங்கள் கள ஆய்வு செய்து 'தடை அதை உடை' என்ற நுாலாக வெளியிட்டுள்ளார் சென்னை சித்தலப்பாக்கத்தை சேர்ந்த தொழில் முனைவரான கோகிலா.
கொரோனா காலக்கட்டம் தான் எழுத்தாளராக மாற்றியது என்கிறார் இவர்.
தொழில்முனைவோர் எழுத்தாளராக மாறியது குறித்து நம்மிடம் மனம் திறந்ததாவது: சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சோத்துப்பாக்கம். பி.எஸ்.சி., படித்துள்ளேன். கணவர் பாபு தொழில் செய்கிறார். இரு பெண் குழந்தைகள். திருமணமான பின் வடசென்னையில் வசித்தோம். கல்லுாரி படிப்பு முடித்ததும் வெப் டிசைனிங் படித்ததால், 4 ஊழியர்களை கொண்டு அதுசம்மந்தமான கம்பெனி நடந்தினேன். சிங்கப்பூரில் ஒரு பத்திரிக்கைக்கு தலையங்கம் பகுதிக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்தேன். கணவரின் தொழில் காரணமாக தென்சென்னைக்கு இடமாறுதல் ஏற்பட்டதால் அக்கம்பெனியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
மகளிருக்கான துணிக்கடை ஆரம்பித்தேன். பின் சொந்த வீடு செல்ல நேர்ந்ததால் அதையும் மூட வேண்டியிருந்தது. பின் துபாயின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் கிளை ஒன்றை ஏற்று நடத்தினேன். லாபத்துடன் வளர்ந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக மூடிய போது பெரிய இழப்பை சந்தித்தேன்.
கொரோனா காலத்தில் சும்மா வீட்டில் இருந்த போது தான் எழுத்துலகுக்கு வந்தேன். அச்சமயம் எழுத்தாளர் பா.ராகவன் ஆன்லைனில் எழுத்து பயிற்சி ஒர்க் ஷாப் நடத்தினார். அதில் பங்கேற்றபோது எழுத்து மீது எனக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்தேன். என்ன தலைப்பு கொடுத்தாலும் என்னால் எழுத முடிந்ததை அவர் கண்டறிந்தார். பின் ௨ ஆண்டுகள் சவாலான பயிற்சிகளை வழங்கினார். தற்போது அவரது பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக என்னை பணியமர்த்தியுள்ளார். பத்திரிக்கை துறையில் இருப்பதால் நேரமின்மை காரணமாக மாற்று வேலை குறித்து சிந்திக்கவில்லை. இதிலேயே தொடர விரும்பினேன்.
சென்னை பற்றிய என் முதல் புத்தகமான 'ஒரு மனிதன் ஒரு நகரம்', ராபர்ட் கிளைவ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இஸ்ரேல் பாலஸ்தீன போர் குறித்து 'உலரா உதிரம்', 'தொழில்நுட்பம் அறிவோம்' புத்தகங்களை எழுதியுள்ளேன்.
அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'தடை அதை உடை' எனது 4வது புத்தகம். கொரோனா காலத்தில் ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தார் நடத்திய ஒர்க் ஷாப்பில் பங்கேற்றேன். பதிப்பகத்தின் நிவேதிதா லுாயிசும், வள்ளிதாசனும் புதுப்புது விஷயங்களை செய்யச் சொல்லி பயிற்சி அளித்தார்கள். 2022ல் அவர்கள் ஏற்பாடு செய்த ஜூம் மீட்டிங்கில் சென்னையில் வீடில்லாமல் தெருவொரம் வாழ்ந்து வந்த சங்கீதா பேசினார்.
அவர் சொன்ன விஷயங்களை நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. வடசென்னையில் வசித்திருக்கிறேன். அங்குள்ள மக்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை முறை உள்ளது என அப்போது வரை நான் அறிந்திருக்கவில்லை. இவரை போன்றவர்களின் வாழ்க்கையை பதிவு செய்து 'தடை அதை உடை' புத்தகம் வெளிவந்தது. நிறைய பாராட்டுகளை அந்த புத்தகம் பெற்று தந்தது.
தனித்தமிழ் இயக்கம் கணினியில் தமிழ் எந்தளவு பயன்படுத்தப்படுகிறது என 25 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறது. அதன் முன்னோடி, மலேசியத் தமிழரான கணினிவியலாளர் முத்து நெடுமாறன். ஆப்பிள் போன்களில் தமிழுக்கான எழுத்துருவை அறிமுகப்படுத்தியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் உள்ளன. முத்து நெடுமாறன் 35க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வடிவமைத்துள்ளார். அவரது எழுத்துருக்களே சிங்கப்பூர், மலேசியாவில் வழக்கத்தில் உள்ளன. எழுத்துரு எப்படி இருக்கும் எனஅவரை சந்திக்கும் வரை யோசித்ததில்லை.
நீண்ட நேரம் படிப்பதற்கும், கண்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும் தனித்துவமான எழுத்துருக்கள் உள்ளன. என்னதான் நன்றாக எழுதியிருந்தாலும் அதை தவறான எழுத்துருவில் அச்சிட்டால் புத்தகத்தை படிக்கத் தோணாது.இதனை 'உரு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட உள்ளேன்.
புதிதாக எழுத வருபவர்களுக்கு நான் சொல்வது... ஏதோ ஒரு நாள் மனதில் உள்ளதை கொட்டுவதால் எழுத்தாளராக முடியாது. தொடர்ந்து ஒரு வேலையை செய்வது போல எழுதுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை தினமும் ஒதுக்க வேண்டும். அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை தினமும் ஏதோ ஒன்றை எழுதுவேன். இதுபோன்ற பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் நம்முடைய எழுத்து நாளுக்கு நாள் மேம்படும் என்றார்.