UPDATED : செப் 20, 2026 11:40 AM
ADDED : செப் 20, 2026 02:57 AM

மரங்கள் இல்லையேல் பூமியில் உயிரினங்களின் இயக்கமே இருக்காது. இயற்கை சமநிலையைப் பேணிக் காப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பறவைகள், விலங்குகளுக்கு மரங்கள் உறைவிடமாகவும், பாதுகாப்பாகவும் விளங்குகின்றன.
இவ்வாறாக உலகில் 'யாதுமாகிய மரங்களை' உயிராக நேசித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை உருவாக்கி வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார் ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பாபு அப்துல்லா.
இவர் கல்லுாரியில் படிக்கும் போது பிற மாவட்ட நண்பர்கள் 'ராமநாதபுரம் தண்ணியில்லா காடு... பெட்ரோல் கண்டு பிடிச்சாத்தான் விமோசனம்,' என விமர்சனம் செய்தனர். அப்போதே மாவட்டம் முழுவதும் மரங்களை வளர்த்து பசுமையாக்க முடிவு செய்து அப்போது துவங்கி, தனது 73 வயதிலும் பள்ளிகள், ஊருணிகள், பள்ளிவாசல் வளாகங்களில் மரக்கன்றுகளை வளர்த்து இலவசமாக வழங்கி வருகிறார்.
அவரது அனுபவங்கள், மரம் வளர்ப்பால் நன்மைகள் குறித்து 'யாதுமாகிய மரங்கள்' என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். நீர்நிலைகளைப் பாதுகாத்து, பராமரிக்கும் நபர்கள், அமைப்புகளை கவுரவிக்கும் தமிழக அரசின் முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருதை 2025ல் பெற்றுள்ளார்.
தினமலர் வாசகர்களுக்காக அவர் கூறியது: எனது தந்தை டாக்டர் இ.எம்.அப்துல்லா சிறந்த மருத்துவராகவும், கல்வியாளராகவும், செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளை உருவாக்கினார். ராமநாதபுரம், மாவட்ட தலைநகர் ஆவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
அவரது வழியில் 'மாடு இல்லாத விவசாயமும், மரம் இல்லாத தோட்டமும் பாழ்,' என்ற முன்னோர் வாக்குப்படி ராமநாதபுரம் சாலைகள், ஊருணிகள், பள்ளி, கல்லுாரிகள் எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு மரங்களை வளர்க்க வேண்டும் என்று பணியை துவங்கினேன்.
எனது தந்தை வீடு கட்ட கிணறு தோண்டும் போது 25 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய சங்கு கிடைத்தது. இதன் மூலம் ராமநாதபுரம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் இங்கு மரங்கள் வளர்க்க சிரமப்பட வேண்டியுள்ளது.
ராமநாதபுரத்தில் 15க்கும் மேற்பட்ட ஊருணிகளை செய்யது அம்மாள் அறக்கட்டளை பசுமை படையில் இருந்து துார்வாரி கரை அமைத்து, மரக்கன்றுகள் நட்டுகொடுத்தோம். ரயில் நிலையம், அரசு மருத்துவமனை சாலை, கேணிக்கரை ரோடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விடங்கள் சோலைகளாக மாறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போதும் மரக்கன்றுகளை இலவசமாக வனத்துறை, வேளாண் துறை, மாவட்ட நிர்வாக நிகழ்ச்சிகளுக்கு வழங்குகிறோம். மாணவர்களிடம் மரங்களை வளர்க்க கூறி சிறந்த மரம் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
தேசிய அளவில் காற்று மாசு குறைந்த நகரங்களில் ராமநாதபுரம் 7ம் இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு கொண்டுவர வேண்டும். மரத்தை அரசு அனுமதியின்றி வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். சாலைகளை அகலப்படுத்த அல்லது வேறு காரணங்களுக்காக ஒரு மரத்தை எடுத்தால், ஐந்து மரங்களை ஊரைச் சுற்றி நடுவோம் என நாம் உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
