ADDED : ஜூன் 21, 2026 02:32 AM

விடியலின் ஒவ்வொரு கதிரும் உடலுக்குள் புது வெளிச்சத்தைப் பாய்ச்சும் தத்துவமே யோகா. ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது; யோகா, வெறும் உடற்பயிற்சியல்ல; உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் அறிவியல் பூர்வமான வாழ்வியல் கலை என்பதை உலகம் இன்று ஏகோபித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது.
உலக சமுதாய சேவா சங்கத் துணைத்தலைவர் சுந்தர்ராஜ் கூறியதாவது:
'யோகம்' என்றால் ஒன்றுபடுதல் அல்லது ஒருங்கிணைத்தல் என்று பொருள். மனித உயிர் தனது மூலத்தை அறிந்து அதனுடன் ஐக்கியமாவதே இதன் ரகசியம். நம் தேசத்தில் பிறந்து, இங்கிருந்த சித்தர்களாலும் மகரிஷிகளாலும் செப்பனிடப்பட்டு உலகிற்கு கொடையாக அளிக்கப்பட்ட இக்கலையை, பிரதமர் மோடி ஆன்மிக வட்டத்திலிருந்து நகர்த்தி, அறிவியல் பூர்வமான கலையாக உலக மேடையில் நிறுத்தினார். இதன் விளைவாக, இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளும், மேற்கத்திய கிறிஸ்தவப் பல்கலைக்கழகங்களும், சீனா, ஜப்பான் போன்ற புத்த மத நாடுகளும் யோகாவை ஒரு அறிவியல் பூர்வமான வாழ்வியல் கலையாக ஏற்றுக்கொண்டு மன அழுத்தமில்லா அமைதிக்கு இதைப் பின்பற்றி வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து, வாழ்வியல் நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் இந்த யோகக்கலை, இன்று உலகளாவிய அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான ஒரு உன்னதப் பாலமாக மாறியுள்ளது நிஜம்.
- இன்று (ஜூன் 21) உலக யோகா தினம்
