/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
வட அமெரிக்காவை அசத்திய கனடியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
/
வட அமெரிக்காவை அசத்திய கனடியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
வட அமெரிக்காவை அசத்திய கனடியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
வட அமெரிக்காவை அசத்திய கனடியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
டிச 08, 2025

டொராண்டோ: கனடாவில் நடைபெற்ற தமிழ்ப் புத்தகக் கண்காட்சி வட அமெரிக்கத் தமிழுலகை வியக்க வைத்தது. காட்சிப்படுத்தப்பட்ட நூல்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்ததோடு, தமிழ் படைப்பு உலகின் பரந்த விருதலை வெளிப்படுத்தின. Toronto Tamil Book Fair (TTBF) இந்த கண்காட்சி Canadian Tamil Congress (CTC) மற்றும் United Sri Lanka Muslim Council of Canada (USLMCC) ஆகியோர் “Community Partners” ஆக இணைந்து நடத்தப்பட்டது.
கனடா பல்லின மக்கள் வாழும் நாடாக இருப்பினும் குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், வியாபாரம், கலை எனப் பல வகைகளில் பரிணமிக்கின்றனர். பல லட்சம் தமிழர்கள் வாழும் இந்நிலப்பரப்பில் எழுத்தாக்கங்களும், இலக்கியமும் அறிவு சார்ந்த ஆக்கங்களும், புதிய படைப்புகளும் படைக்கப்பட்டு தமிழரின் வாழ்வைப் புதுப்பித்த வண்ணமே இருக்கின்றன.
அத்தகைய படைப்புகளுக்கு ஓர் மேடையாக, ஊக்குவிக்கும் நிகழ்வாக இந்த கண்காட்சி வழியமைக்கிறது. இலங்கையிலிருந்து மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க வாழ் தமிழர்களின் படைப்புகளோடு தாய் தமிழகத்தின் ஊக்கமிகு எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழ் தோட்டத்திற்கு மணம் சேர்த்தன என்றால் மிகையாகா. எழுத்து என்பது ஓர் சமூகத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.
கனடாவில் குடியேறி பல ஆண்டுகள் ஆயினும் தமிழின் தாகம் தீராமல் மொழியே எமது வேர், தாங்கள் சுவாசிப்பது தமிழன்றி வேறு ஒன்றுமில்லை என இப் படைப்பாளர்களின் கண்களில் ஓர் தீர்க்கம் இன்று காண நேர்ந்தது. தமிழ் என்ற செம்மொழியின் பிழம்புகள் ஓங்காரமுடன், உயிர்த்துடிப்பாய், உத்வேகத்துடன் ஊக்கத்துடன் இக்கனடிய குளிரிலும் கதகதப்பாய் அரவணைத்து உச்சிமுகர்ந்தது. கண்ணில் பட்ட சில புத்தகங்கள் பட்டியல் சில இங்கே:
'மறக்கவே நினைக்கிறேன்' மாரி செல்வராஜ் 'கடவுளின் மரணம்' கருணை ரவி 'தேவதைகளின் தீட்டுத்துணி'யோ கர்ணன் 'கொலை நிலம்' தியாகு/ஷோபாசக்தி சுந்தர் பாலசுப்ரமணியம் எழுதிய முரட்டு குதிரைக்கு 37 கடிவாளங்கள் முனைவர் புஷ்பா கிறிஸ்டி எழுதிய 'திருக்குறள் ஆய்வு வழிகாட்டி உரைகள்' புதுவை முருகு எழுதிய 'தயங்குவது ஏன் இன்னும்' 'பனித்த விழிகள்' வளர்மதி சிவகுமாரன் 'முதல் சந்திப்பின் முதல் முத்தம்' மனுஷ்யபுத்ரன் 'அறிதலில்லா அறிதல்' புகாரி எனப் பட்டியல் நீளும்.
அரங்கம் முழுக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், அச்சிட்டாளர்கள், வாசகர்கள், இலக்கிய விரும்பிகள் என மலரைத் தேடும் வண்டாகப் புத்தகக் கண்காட்சியை மொய்த்துக்கொண்டிருந்தனர். நிகழ்வின் முத்தாய்ப்பாக 'அ.முத்து லிங்கத்தின் எழுத்துலகு' எனும் நூல் வெளியிடப்பட்டது. நூல்கள் கடந்த, நிகழ்கின்ற, மற்றும் எதிர்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும், சமூகத்திடையே நல்லுறவை வளர்ப்பதாகவும் இவ்வரங்கம் இனிவரும் எழுத்துலகிற்குக் கட்டியம் கூறும்.
ஒன்று எழுதுபவனாக வாழு இல்லை எனின் எழுதப்படுபவனாக வாழு! இப்புத்தகக் கண்காட்சிக்கு வித்திட்டவர்கள் கனடிய தமிழர் பேரவை, ஐக்கிய இலங்கை முஸ்லீம் பேரவை மற்றும் பல கனடிய சமூக அமைப்புகளுடன் வடஅமெரிக்க தமிழ் எழுத்தாளர்களின் அமைப்பு(நடவு) ஆகும். வடஅமெரிக்க தமிழ் (நடவு)எழுத்தாளர்களின் அமைப்பின் சார்பாக முனைவர் புஷ்பா கிறிஸ்டி மற்றும் ஶ்ரீதாஸ் கலந்துகொண்டனர். உலகத்தின் சங்கமம் தமிழே! மாற்றுக்கருத்தில்லை!
- கனடாவிலிருந்து நமது செய்தியாளர் சுதர்சன்
Advertisement

