/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
பிளானோவில் (டெக்சாஸ்) பிரமாதமாய் பிரகாசமாய் சமயபுரத்தாளுக்கு ஓர் விளக்குபூஜை
/
பிளானோவில் (டெக்சாஸ்) பிரமாதமாய் பிரகாசமாய் சமயபுரத்தாளுக்கு ஓர் விளக்குபூஜை
பிளானோவில் (டெக்சாஸ்) பிரமாதமாய் பிரகாசமாய் சமயபுரத்தாளுக்கு ஓர் விளக்குபூஜை
பிளானோவில் (டெக்சாஸ்) பிரமாதமாய் பிரகாசமாய் சமயபுரத்தாளுக்கு ஓர் விளக்குபூஜை
நவ 21, 2024

ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மாரியம்மன் கூழ் திருவிழா நிகழ்விற்குப் பிறகு, நாங்கள் பலர் கோவில் குழுவின் அடுத்த அறிவிப்பை எதிர்நோக்கியிருந்தோம். செப்டம்பர் மாதத்தில்,அடுத்த நிகழ்வு மெகா திருவிளக்கு பூஜை நவம்பர் 15, 2024 அன்று எலிகன்ஸ் பால்ரூம் மற்றும் ஈவென்ட் சென்டர், பிளானோ, டெக்சாஸ்-ல் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
விளக்கு பூஜை என்பது ஒரு பாரம்பரிய இந்து மத வழிபாட்டுப் பண்பாட்டில் முக்கியத்துவம் உடையது. இது தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும்.பூஜையின் போது விளக்குகளை ஏற்றுவதன் மூலம், நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவரது அருளை பெற விரும்புகிறோம்.
நாம் உள்ளே நுழைந்த போது, நம்மை வரவேற்ற தன்னார்வலர்கள், முன்பதிவு செய்யப்பட்ட அட்டவணையை சரிபார்த்து நம்மை உள்ளே அனுப்பினர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற உடையில் நிறைந்திருந்த பெண்களைப் பார்த்த போது, கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வானம் கருப்பாகிக் கொண்டிருக்கையில்,அறையில் சூரியன் மெதுவாய் நுழைந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது.
அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர்,” பரவாயில்லையே, உதவி செய்வதற்கு இத்தனை ஆண்கள் முன் வந்திருக்கிறார்களே, சபாஷ்!!” என்று தன்னார்வலர்களைப் பாராட்டினார். பக்கத்திலிருந்தவர், “உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் அந்த குழுவில இருக்காங்க” ன்னு சொன்னவுடன், “வெரி குட், பிள்ளைகள் இப்போலிருந்தே நம்ம கலாச்சாரத்தை கத்துகிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு”, ன்னு பெருமிதத்துடன் கூறினார். பார்கோடுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு நமது இருக்கைக்குச் சென்றோம்.
கோயில் சார்பாக வழங்கப்பட்ட பொருட்கள் இருக்கைகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளதை உறுதிப்படுத்தியது, இதனால் பங்கேற்பாளர்கள் பூஜை விழாவில் முழுமையாக ஈடுபட முடிந்தது.
பங்கேற்பாளர்கள் எடுத்து வரும்படி கேட்கப்பட்டிருந்த பொருட்கள்:
● குத்துவிளக்கு
● தாம்பூலத் தட்டு
● பஞ்சபாத்திரம்
● மணி
● தூபக்கால்
கோயில் சார்பாக வழங்கப்பட்ட பூஜை பொருட்கள்:
● மஞ்சள்
● குங்குமம்
● அக்ஷதை
● மல்லிகைப்பூ சரம்
● மஞ்சள் பிள்ளையார்
● அரிசி
● வெற்றிலை
● பாக்கு
● பழம்
● உதிரிப்பூக்கள்
● எண்ணை
● திரி
● வத்திப்பெட்டி
● கற்பூரம்
● சக்கரைப் பொங்கல்
● தண்ணீர் பாட்டில்
● காகித துடைப்பான்
● இரண்டு காகித தட்டுகள்
அமர்வுப் பயன்பாடுகள் அருமையாக அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரிசையும் மேற்கு நோக்கி அமர்த்தப்பட்டு, பூஜை நிகழ்ச்சி ஒழுங்காகவும் இசைவாகவும் நடக்கக்கூடிய சூழலை உருவாக்கியது. ஒவ்வொரு வரிசையிலும் பன்னிரெண்டு பெண்கள் அமர்ந்து கலந்து கொள்ள வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தரையில் அமருவதில் சிரமம் உள்ளவர்களுக்காக மேஜைகளும் நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.
கூடுதலாக, ஒவ்வொரு வரிசையிலும் பங்கேற்பாளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர், இதனால் பூஜை முழுவதும் அனைவரும் தேவையான உதவியை எளிதில் பெற முடிந்தது. பங்கேற்காதவர்கள் பூஜையை நிம்மதியாகப் பார்ப்பதற்கான பிரத்தியேக இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேடையில் விநாயகர் தன் தெய்வீக ஆசியினால் அருள்புரிந்தார். மேலும் சமயபுரத்தாள் கருணையும் வலிமையும் அடங்கிய உருவத்தில் அமர்ந்து, கண்களில் மென்மையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் பாதுகாப்பின் உணர்வைத் தந்தாள். அவர்களுடன் பஞ்சலோக லலிதாம்பிகையும், கருமாரியம்மனும் சேர்ந்து அருள் பாவித்தனர். முப்பத்தியொரு வரிசைத் தட்டுகள் அம்மனுக்கு முன்னே நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. பூஜை செய்ய அழைக்கப்பட்டிருந்த இரு புரோகிதர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோவில் குழுவின் உறுப்பினர் ஒருவரின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு, புரோகிதர் விளக்கு பூஜையின் முக்கியத்துவத்தையும் அதன் ஆன்மிக பயன்களையும் விளக்கினார்.
பிள்ளையார் மற்றும் துர்க்கை வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. அதற்குப் பின்னர் கலசத்தில் சமயபுரம் மாரியம்மன் அவாஹனம் செய்யப்பட்டு, துர்க்கா அஷ்டோத்திரம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடர்ந்து திருவிளக்கு பூஜைக்கு மாறி, திருவிளக்கு போற்றி பாடல்களுடன் ஒலித்தது. இறுதியாக, விளக்கை குளிர வைக்கும் முறையை புரோகிதர் வழங்கி,பூஜையை நிறைவு செய்து வைத்தார்.
தன்னார்வலர்கள் ஒவ்வொரு வரிசையிலும், விளக்குகளில் இருந்த மீதமான எண்ணெயையும், பஞ்சபாத்திரத்தில் இருந்த தண்ணீரையும் சேகரித்தனர். பங்குபெற்றவர்களுக்கு புளி சாதம் , சுண்டல், தயிர் சாதம் அடங்கிய பிரசாத பெட்டியை விநியோகித்தனர். பின்னர் அனைவரும் மேடைக்கு சென்று அம்மனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் சென்றனர். மேலும், நிகழ்ச்சி மையத்தில் பங்கேற்காதவர்களுக்கும் கூடுதல் உணவு வாங்க விரும்பியவர்களுக்கும் பஃபெ உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
குயின்லான், டெக்ஸாஸில் கட்டப்படவிருக்கும் முதல் கட்ட கோவில் கட்டிடத்திற்கான நிதி திரட்டுவதற்காக தனிப்பயனாக்கப்பட்ட மாரியம்மன் விளக்குகளும், சமயபுரம் மாரியம்மன் படங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் கலைந்து செல்லும் போது, “மாம் , டூ யூ நோ வென் ஆர் தே கோயங் டு ஹாவ் கூழ் பெஸ்டிவல் லைக் லாஸ்ட் டைம்?”, (கூழ் திருவிழா திரும்ப எப்ப பண்ணுவாங்க?), என்று ஒரு இளம் பருவப் பெண் அவள் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்து சென்றாள்.
தடையனைத்தும் தீர்த்து, அனைவரின் உதவியுடன் குவின்லான், டெக்சாஸ் நகரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலைக் கட்டுவதற்கான ஆசீர்வாதங்களை சமயபுரத்தாளே வழங்கட்டும் என வேண்டிக்கொண்டு, இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாய் அமைய காரணமாக அமைந்த கோவில் குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்! தகவல்: K.வளர்மதி சுப்ரமணியம்
https://youtu.be/xCavTzzL3zc?si=2yIo957umNyFrGm-
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement