
அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் அறிவியல் ஆய்வகம் திறப்புவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றது.
அமரர் வி.ஏ.அண்ணாமலையின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி, வில்லேஜ் விஞ்ஞானி 2025 விருதுகள் வழங்குதல், 'அண்ணாமலை - வள்ளி அறிவியல் ஆய்வகம்” திறப்பு ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அறிவியல் ஆய்வகத்தின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைகள் புரிந்த அரசுப் பள்ளி மாணவர்கள் நால்வருக்கு 'வில்லேஜ் விஞ்ஞானி - 2025' என்னும் விருதுகளை அவர் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.
இந்திய விண்வெளி நிறுவனம் - இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி பேராசிரியர் ஆர். இளங்கோவன், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகுமாரன், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழினுட்பக் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் கோ. நீலகண்டன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்திரு.தா.மரிய அந்தோணிராஜ், வழக்கறிஞர் பொ.வே.ஆனந்தகிருஷ்ணன், கல்வியாளர் அ.சந்தானகிருஷ்ணன், zetwerk நிறுவன இயக்குநர் பாலசுப்ரமணியம், பாடகர் ஜோதி, அமெரிக்க வாழ் தன்னார்வலர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை அண்ணாமலை அறக்கட்டளை நிறுவனரும் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டல் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைச் செயலாளருமான மென் பொறியாளர் பெருமாள் அண்ணாமலை, பேராசிரியர் கி.பார்த்திபராஜா, பதிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement