/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
தேசத்தின் பெருமையை உணர்த்தும் நாள்!
/
தேசத்தின் பெருமையை உணர்த்தும் நாள்!
PUBLISHED ON : ஜன 24, 2026

ஜன., 26 குடியரசு தினம்!
நம் நாட்டின் குடியரசு தினம், ஒவ்வோர் ஆண்டும், ஜன., 26ல் கொண்டாடப்படுகிறது. இந்நாள், 1950ல், இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததை நினைவுகூர்கிறது.
ஆங்கிலேயரிடமிருந்து, 1947ல் விடுதலை பெற்ற பின், இந்தியாவுக்கு சொந்த அரசியலமைப்பு தேவைப்பட்டது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில், அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் ஆலோசனைகளுக்குப் பின், நவ., 26, 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனவரி 26, 1950ல், இது அமலுக்கு வந்து, இந்தியாவை ஒரு குடியரசு நாடாக அறிவித்தது.
இந்திய அரசியலமைப்பு, உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இதில், 448 பிரிவுகள், 12 அட்டவணைகள் உள்ளன. இது மக்களாட்சி, சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
புதுடில்லியில் உள்ள ராஜ்பாத் மைதானத்தில், பெரும் விழாவாக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தேசியக் கொடியை ஜனாதிபதி ஏற்றி, ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், வெளிநாட்டுத் தலைவர் ஒருவர், முதன்மை விருந்தினராக அழைக்கப்படுகிறார். இது, இந்தியாவின் பன்னாட்டு உறவுகளை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் பன்முகக் கலாசாரம், பாரம்பரியம், ராணுவ வலிமை ஆகியவை, இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஆகியவை, விழாவை மேலும் சிறப்பாக்குகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் இந்நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள், தேசிய உணர்வுடன் ஒன்றிணைந்து, நாட்டின் முன்னேற்றத்தை நினைவுகூர்கின்றனர்.
-மு.நாவம்மா

