
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 10ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழாசிரியர், வித்வான் ஜி.என்.நாராயணசாமி அய்யர், மாணவரது மனங்களில் பதியுமாறு, இலக்கணப் பாடத்தை மிகவும் இனிமையாக நடத்துவார்.
யாப்பிலக்கண வகுப்பில், 'குறள் வெண்பா' பற்றி விரிவாக விளக்கிய பின், 'பண்டாரச் சின்னப் பயல்' எனும், ஈற்றடி ஒன்றை கொடுத்து, மறுநாள் ஆளுக்கொரு குறட்பா எழுதி வருமாறு கூறினார்.
நான் எழுதி சென்ற, 'வண்டார் வனக்குறத்தி வள்ளி மனம் கவர் பண்டாரச் சின்னப் பயல்' எனும் குறட்பா, தமிழாசியரின் பாராட்டுடன், பேனா பரிசையும் பெற்றது.
அந்த ஆண்டில், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் பாடத்தில், 200க்கு, 143 மதிப்பெண் பெற்றேன். என்னை ஆசிர்வதித்த தமிழாசிரியர் ஜி.என்.நாராயணசாமி அய்யர், மதுரை தமிழ் சங்கத்தில், புலவர் கல்லுாரியில் சேருமாறு அறிவுரை கூறியதோடு, தன்னிடமிருந்த சிறந்த நுால்களையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
தற்போது எனக்கு, 84 வயது. 37 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, 1999ல் ஓய்வு பெற்றேன். நாள், வார, மாத இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் அறிவுத் தந்தை, தமிழாசிரியர் ஜி.என்.நாராயணசாமி அய்யரை, அனுதினமும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
- ஜி.சீனிவாசன், மதுரை.தொடர்புக்கு: 63697 94311

