
சென்னை, அம்பத்துார், சர்.ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது, தலைமையாசிரியராக இருந்தவர் பத்மநாபன். அவர், கணக்கு பாடமும் எடுப்பார். மிகவும் நல்லவர் என்றாலும், அவரது கம்பீரமான தோற்றத்தை கண்டு அஞ்சுவோம்.
ஒருநாள் அவர், கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி, அதற்கு விடை எழுதுமாறு என்னை அழைத்தார்; எனக்கு, 'திக்'கென்றது. எளிமையான கணக்கு தான் என்றாலும், பயம் மற்றும் அவசரத்தில், தவறான விடை எழுதி விட்டேன். ஆனால், அவர் என்னை திட்டாமல், திருத்தி எழுதினார்.
ஆண்டு இறுதியில், அவரிடம், 'ஆட்டோகிராப்' -வாங்கினேன். அவர் சிரித்தபடி, 'பி ஸ்லோ அண்டு ஷ்யூர்' -அதாவது, 'மெதுவாகவும், அதே நேரத்தில் உறுதியுடனும் செயல்படு' என, எழுதி தந்தார்.
தற்போது எனக்கு, 75 வயது. குடும்பத் தலைவியான நான், அவரது அறிவுரையை இப்போதும் பின்பற்றுகிறேன். நான் கற்றுக்கொடுத்து, என் பேரனும் அந்த அறிவுரையை பின்பற்றி, தற்போது, ஜெர்மனி நாட்டில் பிஎச்.டி., படித்துக் கொண்டிருக்கிறான். எந்த வேலை செய்தாலும், தலைமையாசிரியர் பத்மநாபனின் ஆட்டோகிராப் அறிவுரையை, நன்றியோடு நினைவில் போற்றுகிறேன்.
- சிங்கமணி நடராஜன், சென்னை.
தொடர்புக்கு: 92822 08448

