தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (330)

இளஸ் மனஸ்! (330)

இளஸ் மனஸ்! (330)


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு அம்மா,

நான், பிளஸ் 2 படிக்கிறேன். அடுத்தாண்டு கல்லுாரியில் சேரலாம் என, தினமும் கனவில் மிதப்பவன். ஆனால் வீட்டில் வறுமை நிலை. குடித்துக் குடித்தே அப்பா இறந்து விட்டார். எனக்கு இரு தங்கைகள். நாலைந்து வீடுகளில் வேலை செய்து, குடும்ப செலவை சமாளிக்கிறார் தாய்.

எனவே, 'நீ படித்தது போதும்; வேலைக்கு போ. அப்போது தான் குடும்பத்தை கரை சேர்க்க முடியும்' என்கிறார் அம்மா. என் கல்லுாரிக் கனவு காற்றில் கரைய வேண்டியது தானா... என் போன்றவர்களுக்கும் பட்டப்படிப்பு கை கூட வழி சொல்லுங்கள் அம்மா...

இப்படிக்கு

- சசீதரன்.



அன்பு சசீதரா,

உன் கல்லுாரி ஏக்கமும், கனவும் எனக்கு புரிகிறது. எத்தனை வயதானாலும் மறக்க முடியாதது, கல்லுாரி காலம் தான். 90 வயதாகி, படுக்கையில் கிடந்தாலும், மனதில் அசை போட வைக்கும் மகிழ்ச்சிகரமான காலம், கல்லுாரி நாட்கள் தான்.

அது கிடைக்காமல் போய் விடுமோ என்பது, தாங்க முடியாத பரிதவிப்பு தான். அதே போல், உன் தாயின் நிலைமையும் எனக்கு புரிகிறது.

பாவம் அவர் என்ன செய்வார்... அவரால் இயன்ற வரை குடும்பத்திற்காக உழைக்கிறார்.

ஒரு கையால் எந்த அளவு ஓசை எழுப்ப முடியும்... ஒரு வண்டியை இரட்டை மாடுகள் இழுக்கிறபோது, சுமை பகிரப்பட்டு குறையத்தான் செய்யும். ஒற்றை மாடாக இழுத்தால், வாயில் நுரை தள்ளும்.

குடும்பத்தையும் கவனித்து, உன் கனவையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஒரு வழியென்ன... பல வழிகள் உண்டு!

அதிகாலையில் எழுந்து, வீடுகளுக்கு செய்தித்தாள் போடலாம்... வீடு வீடாக பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யலாம்... அதன்பின் கல்லுாரிக்கு செல்லலாம்.

இப்போதெல்லாம் கல்லுாரிகள் காலை, 9:30 - 4:00 வரை என்பதெல்லாம் இல்லை. மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு காரணமாக, 'ஷிப்ட்' முறையில் இயங்குகின்றன. மாலை கல்லுாரி வகுப்பு என்றால், அதற்கு ஏற்றவாறு, உன் பணியை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

பல பெரிய கடைகள், மால்கள், உணவு விடுதிகளில் ஆன்லைன் விநியோகங்கள் உண்டு. மாலையில் கல்லுாரி முடிந்த பின் அந்த மால்கள், விடுதிகளில் வேலை செய்யலாம். நேர மேலாண்மையை கைப்பற்றினால், இரவு, 8:00 மணிக்கு திரும்பி, 11:00 மணி வரை படிக்க முடியும்.

இவை எதுவும் சாத்தியமே இல்லை என்கிற பட்சத்தில், இருக்கவே இருக்கிறது கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ். படிப்பதும், பட்டம் பெறுவதும் தான் உன் நோக்கம் என்றால், அதற்கு வழிகள் உண்டு.

'மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்... வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்...'

- இந்தப் பாடலை கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா...

அடுத்த வரி என்ன தெரியுமா...

'துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்...'

துணிந்து விடு மகனே!

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us