
பிளாரன்ஸ் ஆன்ட்டி,
எனக்கு, 9 வயது. நான்காம் வகுப்பு படிக்கிறேன். அம்மா, அப்பா இருவரும் ஆபீசுக்கு செல்கின்றனர். வீட்டில், அப்பாவின் அப்பாவான, என் தாத்தா இருக்கிறார். தாத்தா, 'ரிட்டையர்' ஆனவர். தாத்தா தான் என்னை குளிப்பாட்டி, தலைசீவி, சீருடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து செல்வார். எனக்கு இரண்டு இட்லி என்றால், தாத்தாவுக்கும் அதே இரண்டு இட்லி தான். ஆனால், அப்பா, அம்மா நாலு இட்லி சாப்பிடுவர்.
'தாத்தாவுக்கு பசிக்கும்மா... கூட கொஞ்சம் இட்லி குடும்மா...' எனக் கூறினால், 'வயசானவங்க அதிகம் சாப்பிடக்கூடாது... எனக்கு எல்லாம் தெரியும். சும்மா இருடா...' என்பார், அம்மா.
எனக்கு மஹாபாரத கதை, ராமாயணக் கதை, அரிச்சந்திரன், நளன், விஸ்வாமித்திரர் என்று எல்லா கதைகளையும், தாத்தா சொல்வார். நானும், தாத்தாவும் சேர்ந்து தான், 'டிவி'யில் கிரிக்கெட் போட்டி பார்ப்போம். தாத்தாவுடன் தான் நான் துாங்குவேன். அவரை, எனக்கு மிகவும் பிடிக்கும்; என் 'பெஸ்ட் பிரெண்ட்' அவர் தான்.
ஆனால், 'தாத்தாவை முதியோர் இல்லத்தில் விட வேண்டும்...' என, சில நாட்களாக அம்மா கூறி வருகிறார். தாத்தாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறதாம். வயதாகி விட்டதாம். இப்பிரச்னையில், அப்பாவுடன் அம்மா தினமும் சண்டை போடுகிறார்.
தாத்தா இல்லாமல் நான் எப்படி இருப்பேன்... எனக்கு அழுகை, அழுகையாக வருகிறது. அம்மாவும், அப்பாவும் தினமலர் நாளிதழ் படிப்பர். இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழை என்னுடன் சேர்ந்து, வீட்டில் அனைவரும் படிப்பர். தாத்தாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டாமென்று, அம்மாவிடம் சொல்லுங்கள், ஆன்ட்டி.
- இப்படிக்கு,
ஹரீஷ் ராகவேந்தர்.
அன்புள்ள ஹரீஷ்,
உன் கடிதம், என் நெஞ்சை உருக்குகிறது; படிக்க, படிக்க மனசு வலிக்கிறது.
படித்த பின் எடைக்கு போடுகிற பேப்பர் போன்றவர்களா வயதானவர்கள்... தனக்கும் வயதாகும் என்பதை உன் அம்மா ஏன் மறந்து விட்டார்... அம்மாவின் அப்பா என்றால், இப்படி சொல்லியிருப்பாரா...
அதுவும், வீட்டு வேலைகளில் உன் அம்மாவிற்கு, தாத்தா உதவி செய்கிறார். உன்னை பள்ளிக்கு அழைத்து சென்று, திரும்ப அழைத்து வருகிறார். அப்பா, அம்மா அலுவலகம் சென்ற பின், வீட்டை பார்த்துக் கொள்கிறார். உனக்கு ஆத்மார்த்த நண்பனாக இருக்கிறார்.
உனக்கு அம்மா செய்ய வேண்டியதெல்லாம், அவர் செய்கிறார். அப்படிப்பட்டவரையே முதியோர் காப்பகத்தில் விடப் போவதாக அம்மா சொன்னால், அவரிடம் இரக்கம் இல்லையா...
பெண் என்றாலே இரக்க சுபாவம் கொண்டவள், மென்மையானவள், இயற்கையிலேயே தாயுணர்வோடு படைக்கப்பட்டவள் என்பது தான், பொருள். ஆனால், தற்போது அந்த பெண்மைக்கான இலக்கணம் சற்று மாறி இருக்கிறது. அதிலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களின் உணர்வுகள் குறுகிவிட்டன.
'அம்மா, நான் பெரியவனாகி, எனக்கு திருமணமானால், என் மனைவி உன்னையும், அப்பாவையும் இதுபோல் முதியோர் இல்லத்திற்கு கொண்டு சென்று விட்டு விட சொல்வாளாம்மா...' என்று, உன் அம்மாவிடம் கேள்.
அப்போதாவது அவருக்கு தன் தவறு புரிகிறதா என்று பார்க்கலாம்.
காலம் ஒரே மாதிரி இருக்காது. எப்போது, யாருக்கு, என்ன வரும் என்று சொல்ல முடியாது. வயதானோருக்கு தான் உடம்புக்கு வரும் என்பதில்லை. இப்போதெல்லாம் பிறக்கும் குழந்தைகளே, சர்க்கரை வியாதியுடன் பிறக்கின்றன. நிறைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது. ஒருவேளை அம்மா உடல்நிலை சரியின்றி படுத்த படுக்கையானால், வெந்நீர் வைத்து தரக்கூட ஆளிருக்க மாட்டார்கள். தாத்தா எவ்வளவு உதவியாக இருப்பார் என்பதை எடுத்துக்கூறு.
அப்போதாவது உன் அம்மா திருந்துகிறாரா என்று பார்க்கலாம்.
- இப்படிக்கு, பிளாரன்ஸ்.

