
அன்புள்ள அம்மா,
நான் தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு, நம் நாட்டு அரசியல் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளின் அரசியல் நிலைகளை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.
ஆங்கில அறிவை பெருக்கி கொள்ள, 'இந்து' நாளிதழும், அரசியல், மற்ற விபரங்களை தெரிந்து கொள்ள, 'தினமலர்' நாளிதழையும் தினமும் படிக்கிறேன். ஆனாலும், அரசியலும், அரசியல்வாதிகளின் பேச்சும் புரியாத புதிராக உள்ளது.
அரசியல் அறிவைப் புகட்ட, பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தினால் என்ன... என்னைப் போல் அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே...
- இப்படிக்கு, ரமேஷ்
அன்பு ரமேஷ்,
மிக நல்ல கேள்வி. கல்லுாரிகளில், 'பொலிட்டிகல் சயின்ஸ்' என்றொரு, 'சப்ஜெக்ட்' உண்டு. இதைப் பள்ளிகளிலும் ஆரம்பித்தால் மாணவ - மாணவியருக்கு நல்ல அரசியல் எது, கேடு கெட்ட அரசியல் எது என்ற தெளிவு கிடைக்கும். அதேபோல், அரசியல்வாதிகளையும் தெரிந்து, தரம் பிரித்து பார்க்கும் அறிவும் கிடைக்கும்.
உன் இந்த எண்ணத்தையும், ஆலோசனையையும், ஆர்வத்தையும் வரவேற்கிறேன். உன் போன்ற மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மகிழ்ச்சியடையச் செய்கிறது.
நம் நாட்டு இளைய சமுதாயத்திற்கு, மாணவ -- மாணவியருக்கு, அரசியல் அறிவு மட்டுமில்லையடா, மகனே... கட்டாய ராணுவ பயிற்சியும், அத்தியாவசிய தேவை.
சிறுவயதிலேயே ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு விட்டால், நம் இளைய சமுதாயத்திற்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் ரத்தத்திலேயே ஊறிவிடும். நெறி தவறி போக மாட்டார்கள். எந்த ராணுவ வீரராவது ஒழுங்கு மீறி நடக்கிறாரா என பார்.
பேரிடர் சமயங்களில் உதவிக்கு முதலில் வருவோர், ராணுவத்தினர் தானே... நாட்டை காப்பதும் ராணுவ வீரர்கள் தானே... காரணம், அவர்கள் பெற்ற முறையான பயிற்சி.
நம் இளைய சமுதாயம் உருப்பட வேண்டுமானால், சோம்பலை விட்டொழித்து, சுறுசுறுப்பாக செயல்பட, பள்ளியிலேயே ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நீ சொன்ன மாதிரி அரசியல் அறிவும், நான் கூறிய ராணுவப் பயிற்சியும் பெற்றால், குற்றங்கள் குறைந்து, துணிச்சல் நிறைந்த இளைஞர்களை கொண்ட புதிய பாரதமே உருவாகும்.
- பிரியமுடன், இந்துமதி

