தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஏப் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

நான் 8ம் வகுப்பு மாணவன். என் அம்மாவுக்கு துணையாக நானும் கடைகளுக்கு போவதுண்டு. மால்கள், துணிக்கடை, காய்கறிக் கடை போன்ற எல்லாவற்றுக்கும் உடன் செல்வேன்.

துணிக் கடைகளிலும், பெரிய பெரிய மால்களிலும் வாங்கும் பொருட்களில், அதில் போட்டிருக்கும் விலையை மறு பேச்சில்லாமல் கொடுப்பார், அம்மா. ஆனால், பிளாட்பாரக் கடைகளிலும், கீரை விற்கும் வயதான ஏழை மூதாட்டியிடமும் விலையைக் குறைத்து பேரம் பேசி வாங்குகிறார். இது என் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

'ஏழை கடைக்காரர்களிடம் ஏன் பேரம் பேசுகிறாய்...' என்று அம்மாவிடமே கேட்டேன். 'இவர்களுக்கு கடை வாடகை இல்லை; கரன்ட் பில் கட்ட வேண்டாம்; சேல்ஸ் மேன் இல்லை. அதனால் குறைச்சு தான் குடுக்குணும்' என்றார்.

'பெரிய கடையை விட, இவர்கள் விலை குறைத்து தானே விற்கின்றனர்' என்று வாதாடினேன். 'எனக்கு நீ புத்தி சொல்ல வேண்டாம்; வாயை மூடிக்கிட்டு வாடா, அதிகப் பிரசாங்கி...' என, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். என் அம்மா செய்வது சரியா, தவறா சொல்லுங்க...

- இப்படிக்கு,

பிரகதீஷ்.



அன்பு மகனே பிரகதீஷ்,

உன் நல்ல உள்ளம் என்னை நெகிழ வைக்கிறது. உன் அம்மா மட்டும் இல்லை; முக்கால் வாசி பேர் அப்படித்தான் இருக்கின்றனர். வலியோரிடம் வாய் திறக்காதோர், எளியோரிடம் வாயடிக்கின்றனர். துணிக்கடைகளிலும், மால்களில் உள்ள பளபளப்பான பெரும் கடைகளிலும், பொருட்களின் கவர் மீது போடப்பட்டிருக்கும் பணத்தை வாய் திறக்காமல் எண்ணிக் கொடுப்பவர்கள், பிளாட்பார ஓரங்களில் கீரை விற்கும் மூதாட்டி, தள்ளுவண்டி காய்கறி, பழ வியாபாரிகள் போன்ற எளிய மக்களிடம், அவர்களின் பொருட்களுக்கு விலையை குறைத்து கேட்கின்றனர்.

இந்த ஏழை வியாபாரிகளில் பெரும்பாலானோர் குடிசைவாசிகள்; ஒற்றை அறையில் வசிப்பவர்கள். ரேஷன் பொருட்களை நம்பி வாழ்வோர். அவர்களின் வீடுகளிலுள்ள பெண்கள், பிறரது வீட்டு வேலைகளை செய்வோராக இருப்பர். இப்படிப்பட்டோரிடம் பேரம் பேச, நா கூச வேண்டும்; மனசாட்சி குத்த வேண்டும்.

எந்த நிலைமையும், எல்லாருக்கும், எப்போதும் வரலாம். இதை கருத்தில் கொள்ளாமல், எளியோரிடம் பேரம் பேசி, சேமிப்பதாக நினைக்கும் எட்டணாக் காசு, எத்தனை நாளைக்கு உதவும் என்பதை, நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு எல்லாம், ஒரு பழைய பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன்...

'எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் தான் மாறாதா...'

உன் அம்மா கண்களில் படும்படி, இந்தக் கேள்வியையும், பதிலையும் வை. இதைப் பார்த்த பிறகாவது மனதில் உறைக்கிறதா, திருந்துகிறாரா என்று பார்ப்போம்.

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us