sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (26)

/

வினோத தீவு! (26)

வினோத தீவு! (26)

வினோத தீவு! (26)


PUBLISHED ON : ஜன 24, 2026

Google News

PUBLISHED ON : ஜன 24, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, அவர்களை மீட்க ஆசிரியை ஜான்வி உதவியுடன் திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -

சுரங்கக்காரர்களின் பிடியில் குட்டி மனுஷங்கள் சிக்கியிருப்பதை எண்ணி, வருந்தினான் லியோ.

''எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கும், லியோ. இது, நடந்ததைப் பற்றியோ, பிரச்னைகளைப் பற்றியோ புலம்பும் நேரமில்லை. அடுத்து என்ன என்பதை யோசித்து செயல்பட வேண்டும்...'' என்றாள், மாலினி.

''ஆம். சுரங்கக்காரர்களின் அடுத்த 'மூவ்' என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல் நாம் செயல்படலாம்...'' என்றாள், ரீனா.

''நான் மர உச்சிக்குப் போய் கண்காணிக்கவா...''

பரபரப்புடன் கேட்டான், லியோ.

''செய், லியோ. உங்கள் உருவ அமைப்பை பற்றி வருத்தப்பட்டாயே... மர உச்சிக்கு போவதென்பது, எங்களைப்போல வளர்ச்சி அடைந்த மனிதர்களால் எளிதில் செய்ய முடியாத காரியம். உங்கள் உருவ அமைப்பு தானே இப்படி மரத்தின் உச்சிக்கு ஏறுவதையும், மரம் விட்டு மரம் தாவுவதையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது...''

லியோவை உற்சாகப்படுத்தினாள் ரீனா.

லியோ மரம் ஏற எத்தனித்தபோது, திடீரென அவனைத் தடுத்தாள் ரீனா.

''சுரங்கக்காரர்களுடன் நேரடி மோதல் என்றாகி விட்டது. அவர்கள், தங்கள் தரப்பின் அனைத்து சக்தியையும் நமக்கு எதிராகப் பயன்படுத்துவர். அதனால்...''

யோசித்தாள் ரீனா...

''சொல்லு ரீனா... நீ என்ன நினைக்கிறாய்...'' என்றாள், மாலினி.

''கூடாரத்திலும், கன்டெய்னரிலும் இருந்த அவர்களது கட்டமைப்பை தகர்த்து விட்டதால், அவர்கள் இந்த தீவில் இருந்து வெளியேறத்தான் நினைப்பர். எனவே, முதலில் தீவுவாசிகளை பாதுகாப்பான இடத்துக்கு நாம் அப்புறப்படுத்தி விட வேண்டும்...'' என்றாள், ரீனா.

''லியோவை சமிக்ஞை சத்தம் எழுப்பச் சொல்லலாமா... அவன் சத்தம் எழுப்பினால், அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி விடுவர், அல்லவா...''

''கூடுவர் தான் மாலினி... ஆனாலும், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. லியோ சத்தம் எழுப்பினால், சுரங்கத்தின் உள்ளே இருப்போருக்கு கேட்காது. சுரங்கத்திற்கு வெளியே உள்ளவர்கள் வேண்டுமானால் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடக்கூடும்...

''ஆனால் சுரங்கத்திற்கு உள்ளே இருப்போர், இந்தக் கொடியவர்களிடம் பிடிபடுவர். எனவே, சுரங்கத்திற்கு உள்ளே இருப்போரையும், வெளியில் இருப்போரையும் ஒரே நேரத்தில் எச்சரிக்க வேண்டும்...'' என்றாள், ரீனா.

''நீ சொல்வது சரிதான். ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துவது...''

குழப்பத்துடன் கூறினாள், மாலினி.

''இது என்ன பிரமாதம்... நான் சுரங்கத்துக்கு சென்று, சுரங்க வாசலில் நின்று சமிக்ஞை ஒலி எழுப்பினால், உள்ளே இருப்போரும் வெளியே வந்து விடுவர். கூடாரத்தில் இருப்போரும் சத்தம் கேட்டு ஓடி விடுவர். சமிக்ஞை ஒலி கேட்டால், சாமிக்குன்றுக்கு சென்று விட வேண்டும் என்ற திட்டம் தான் எல்லாருக்கும் தெரியுமே...'' என்றான், லியோ.

''சுரங்கத்தின் அருகே சுரங்கக்காரர்களில் ஒருவனான அன்பரசன் இருப்பான் என்று நினைக்கிறேன்...'' என்று, தன் சந்தேகத்தை தெரிவித்தாள், மாலினி.

''அதனால் என்ன மாலினி... முதலில் நாம் சுரங்கத்தின் அருகே சென்று, அங்குள்ள சூழ்நிலையைக் கவனிப்போம்; அதற்கேற்றார் போல் செயல்படலாம்...'' என்றாள், ரீனா.

மாலினியும் அதை ஆமோதித்தாள்.

அவர்கள் மூவரும், சுரங்கப் பகுதிக்கு கிளம்பினர்.

மாலினியின் கையில் இருந்த வாக்கி டாக்கி, சிறு கரகரப்புடன் மீண்டும் உயிர்த்தது.

''அந்த குரங்கு பையன் கையில் இருக்கும் வாக்கி டாக்கியில் இருந்து சத்தம் வருகிறதா என்று பாருங்கள். அவன் எங்கே இருக்கிறான் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து, நம் மொபைல் போன்களை மீட்க வேண்டும்...''

அன்பரசனின் குரல், வாக்கி டாக்கியில் ஒலித்து, நின்றது.

''இங்கே சத்தம் கேட்கவில்லை அன்பு... அவன் தொலைவுக்கு சென்று விட்டான் போலத் தெரிகிறது...''

பதில் கூறினான் ஆன்டனி.

''வாக்கி டாக்கி சத்தம் கேட்கிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஜாமர் போட்டு விட்டதால், அந்த மாணவியரால், வெளியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. எனவே, தற்சமயம் அவர்களால் நமக்குப் பிரச்னையில்லை. முதலில் தீவிலுள்ளவர்களை சிறை பிடியுங்கள். திட்டமிட்டபடி, நாம் தீவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும்...''

பேசுவது அன்பரசன் என்று புரிந்தது.

''நமக்கு நேரம் இல்லை... அவர்கள் இங்குள்ளவர்களைச் சிறைப்பிடிக்க முயல்கின்றனர்...''

பதற்றத்துடன் கூறினாள், மாலினி.

''லியோ, நீ மரங்களில் தாவி சீக்கிரமாக அங்கு சென்று, சுரங்கத் தொழிலாளர்களுக்கு தகவலை சொல்லி விடு. நாங்கள் சுரங்கம் இருக்கும் இடத்திற்கு வருகிறோம்...'' என்றாள், ரீனா.

அவர்களின் பதற்றம், லியோவையும் தொற்றிக் கொண்டது.

லியோ சற்றும் தாமதிக்காமல், பாய்ந்து மரத்தில் ஏறினான்.

ரீனாவும், மாலினியும் சுரங்கம் இருக்கும் திசை நோக்கி ஓட்டமும், நடையுமாக விரைந்தனர்.

அவர்கள் அங்கு சென்றபோது, பெரிய கல் ஒன்றை உருட்டி, சுரங்கத்தின் உள்ளே இருப்போர் வெளியில் வர இயலாத வகையில், அன்பரசனும், ஆன்டனியும் சுரங்கத்தின் வாசலை அடைத்துக் கொண்டிருந்தனர்.

குள்ள மனிதர்களான சுரங்கத் தொழிலாளர்கள், கூடாரத்தில் இருந்தனர். அன்பரசன் ஏன் சுரங்கத்தை அடைக்கிறான் என்பது புரியாமல், அவர்கள் குழம்பினர்.

ரீனாவுக்கும், மாலினிக்கும் சூழ்நிலை புரிந்தது.

கூடாரத்தில் இருந்த தொழிலாளர்களிடம், 'எல்லாரும் சீக்கிரம் தப்பி ஓடுங்கள்...' என்று சொல்லிவிட்டு, அன்பரசனுக்கு பயந்து இருவரும் மரங்களுக்கு பின் மறைந்து கொண்டனர்.

'இந்தப் பிள்ளைகள் எதற்காக நம்மைத் தப்பி ஓடச் சொல்கின்றனர்' என்று புரியாமல், கூடாரத்திலிருந்த தொழிலாளர்கள் குழம்பி, அங்கேயே நின்றிருந்தனர்.

அச்சமயம் லியோ அங்கு வந்தான்.

அன்பரசனும், ஆன்டனியும் சுரங்க வாயிலை மூடிக் கொண்டிருப்பதை, அவனும் பார்த்தான்.

மரக்கிளையில் இருந்தபடி, 'லுா, லுா... லுா, லுா...' என்று, வினோதமான சமிக்ஞை ஒலியை திரும்பத் திரும்ப எழுப்பினான், லியோ.

அடுத்த நொடியே, கூடாரத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

- தொடரும்...

நரேஷ் அருண்குமார்







      Dinamalar
      Follow us