
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலையில், 1973ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். அப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக கே.ராஜகோபால் பணியாற்றினார்.
என் தந்தை, கோவிலில் பணி செய்து வந்தார். நாங்கள் ஏழை குடும்பத்தினர். அதனால், பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி தருவார், என் தந்தை. கோவிலுக்கு வந்த உதவி தலைமை ஆசிரியர் ராஜகோபாலை சந்திக்க நேர்ந்த என் தந்தை, எனக்கு இலவச புத்தகங்கள் பெற்று தர கேட்டுக் கொண்டார்.
தன்னை வீட்டிற்கு வந்து சந்திக்கும் படி ஆசிரியர் என்னிடம் கூறினார். அதன்படி சென்றேன்.
குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே இலவச புத்தகங்கள் வழங்கப்படுவதாக அவர் விளக்கினார். என் தேவை குறித்தும் கேட்டார். பழைய புத்தகங்கள் வாங்கிவிட்டதாகவும், தமிழ் புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை என்றும் கூறினேன். அப்போது, இரண்டு ரூபாய் தந்து, கடையில் புதிய புத்தகம் வாங்கிக் கொள்ளும்படி கூறியவர், நன்கு படித்து முன்னேற வேண்டும் என, வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அவரின் ஆசியால், 1985ல், அதே பள்ளியில், நான் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின், 1992ல், நிரந்தர பணி நியமனம் பெற்றேன். கே.ராஜகோபால் தலைமை ஆசிரியராக இருக்க, அவரிடம் பணியாற்றும் பாக்கியம் பெற்றேன்.
கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் ஏழ்மை நிலை எனக்கு தெரியும். தலைமை ஆசிரியர் ராஜகோபாலை பின்பற்றி, மாணவர்களுக்கு தேவையான சிறிய பொருளுதவிகளை செய்து வந்தேன்.
சமீபத்தில் எங்கள் பள்ளி நுாற்றாண்டு விழா கண்டது. தற்போது அனைத்து மாணவர்களுக்கும் அரசு சார்பில் இலவசமாக பாடப்புத்தகங்களும், கல்வி உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
தற்போது என் வயது, 62. கடந்த 2023, ஜூலையில், பணி நிறைவு பெற்றேன். இப்போதும், என்னை தேடி வரும் ஏழை மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை அளித்து வருகிறேன். இதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, என்னை வழி நடத்திய கே.ராஜகோபாலை போற்றி வணங்குகிறேன்.
- கே.கணேசன், கடலுார். தொடர்புக்கு: 94428 32664

