
கோவை, சின்னியம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1994ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
பள்ளியில் ஊசியில் நுால் நுழைக்கும் போட்டி நடக்கவிருந்தது. அதில் பங்கேற்க அறிவுரைத்தார் வகுப்பாசிரியர் சின்னச்சாமி. அதன்படி, போட்டி துவங்கிய கண நேரத்தில் நுால் நுழைத்து நடுவரிடம் தந்தேன். மூன்று முறை இதுபோல் முதலிடம் பிடித்திருந்தேன். இதையறிந்து விசாரித்த வகுப்பாசிரியரிடம், 'வீட்டில் உடுத்தும் உடைகள் கிழிந்தால் நானே தைப்பேன். தையல் கடைக்கு செல்ல மாட்டேன். அதனால் எளிதாக வெல்ல முடிந்தது...' என்றேன்.
வியப்பு மேலிட, 'ஆர்வம் தான் உன்னை திறமைசாலியாக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் தையல்கலையில் சிறந்து விளங்குவாய்...' என வாழ்த்தினார் வகுப்பாசிரியர். அது கிரீடம் சூட்டியது போல் இருந்தது. விடுமுறை நாட்களில் தவறாமல் தையல் பயிற்சி பெற்றேன். பின்னாளில் மகளிருக்கு ஆடை தைக்கும் தொழில் நிறுவனம் துவங்கி வென்றுள்ளேன்.
எனக்கு, 44 வயதாகிறது. ஆடை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். என் நுணுக்க வேலைப்பாடு பாராட்டுதல்களை பெற்றுத்தருகிறது. இதற்கு ஊக்குவித்த ஆசிரியர் சின்னச்சாமியை போற்றுகிறேன்.
- கே.புனிதா, கோவை. தொடர்புக்கு: 94428 85476

