PUBLISHED ON : டிச 06, 2025

டிசம்பர் 11, சர்வதேச மலைகள் தினம்
சர்வதேச மலைகள் தினம், ஒவ்வொரு ஆண்டும், டிச., 11ல் கொண்டாடப்படுகிறது. மலைகளின் முக்கியத்துவம், அவற்றின் சுற்றுச்சூழல், அங்கு வாழும் மக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை, 2002ல் அறிவித்தது.
நம் நாட்டில் பல மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவற்றில் எண்ணிலடங்கா சிறப்பும், வளங்களும் உள்ளன.
இமய மலை: இமயம் என்றால், பனியின் உறைவிடம் என பொருள். உலகின் அதிக உயரமான சிகரங்களை கொண்டுள்ளது, இமய மலை. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன.
இமயமலை இந்தியாவிலேயே நீளமானது; 7,200 மீட்டர் உயரமுடையது. 'நங்கபர்வதம், நம்சாபர்வா' ஆகிய சிகரங்கள், இமயமலையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன. சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றாத நதிகள், இம்மலையில் தான் உற்பத்தியாகின்றன.
பூர்வாஞ்சல் மலை: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது, பூர்வாஞ்சல் மலை. இமய மலையைப் போலவே, பனிச் சிகரங்களைக் கொண்டிருந்தாலும், அதன் அளவுக்கு உயரமானதல்ல. இந்த மலைத்தொடரில், மிக உயரமான சிகரம், பவாங்பூய்.
காரகோரம், பீர்பாஞ்சல் மலை: இமயமலையின் வடமேற்கு பகுதியில் இம்மலைகள் அமைந்துள்ளன. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் எல்லையுடன் இணைந்துள்ளன. அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடர், காரகோரம் மலையின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. சியாச்சின் பனியாறு, இம்மலைத்தொடரில் தான் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை: தமிழகத்தில் மிகவும் பிரசித்தமான மலைத் தொடர். இது, கன்னியாகுமரியில் துவங்கி குஜராத் மாநிலம், தபதி நதி வரை விரிந்துள்ளது. அரபிக்கடலுக்கு இணையாக மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழகம், கேரளாவில் பரவியுள்ளது. கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூர்க், ஜோக் நீர்வீழ்ச்சி, தமிழகத்தில் ஊட்டி, பந்திப்பூர் சரணாலயம், வால்பாறை என, ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது.
விந்திய மலை: இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான மலை. உத்தரபிரதேசம், வாரணாசியில் துவங்கி, மத்திய பிரதேசம் வழியாக குஜராத் வரை, கிழக்கு - மேற்காக பரவியுள்ளது. இதன் உயரமான சிகரமாக, 'கலுமார் பீக்' அறியப்படுகிறது.
சத்புரா மலை: குஜராத் மாநிலம் அரபிக்கடல் பகுதியில் துவங்கி மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலம் வரை அடர்ந்த காடுகளைக் கொண்டது. புலி, காட்டெருது, கரடி உள்ளிட்ட விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. நர்மதை மற்றும் தபதி நதிகள் இதில் உருவாகி, மேற்கு நோக்கி ஓடி, அரபிக்கடலில் கலக்கின்றன. இதன் உயரமான சிகரமாக, 'துப்கர் பீக்' உள்ளது.
ஆரவல்லி மலை: உலக அளவில் மிகவும் பழமையான மலை என கண்டறியப்பட்டுள்ளது. இது, 800 கி.மீ., நீளமுள்ளது. டில்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள மவுன்ட் அபு, புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.
கிழக்கு தொடர்ச்சி மலை: இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தொடர்ச்சியற்றதும், உயரம் குறைவானதுமாக உள்ளது. மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழக மாநிலங்களில் பரவியுள்ளது.
தமிழகத்தில் ஏலகிரி, சேர்வராயன், கல்ராயன் மலை, சொல்லிமலை, செம்மலை, சிறுமலை, அழகர்மலை ஆகியவை புகழ்பெற்றவை.
ஆந்திர மாநிலத்தில் உள்ள, 'ஜிந்தகடா' இதன் உயர்ந்த சிகரம். கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா நதிகள், இம்மலை வழியே பாய்ந்து நிலங்களை வளப்படுத்தி வேளாண்மையைச் செழிக்கச் செய்கின்றன.
- நிகி

