sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 07, 2025

Google News

PUBLISHED ON : செப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 22 வயது பெண். பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு, இரு தங்கைகள்; பள்ளியில் படித்து வருகின்றனர். என் அப்பா, கம்பெனி ஒன்றில், அக்கவுன்ட்ஸ் பிரிவில் உள்ளார். அம்மா, இல்லத்தரசி. நான் கல்லுாரியில் சேர, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி தான், 'சீட்' வாங்கிக் கொடுத்தார், அப்பா.

நான், நன்கு படித்து, ஒரு வேலையில் சேர்ந்து, அப்பாவின் சுமையை குறைக்க வேண்டும் என, எண்ணியுள்ளேன்.

இந்நிலையில், என் மொபைல் போனுக்கு, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் போன் செய்து, என்னை விரும்புவதாக கூறினார். யார் இவர், என் மொபைல் போன் எண் இவருக்கு எப்படி தெரியும் என, குழம்பினேன்.

அடுத்தடுத்த நாட்களில், இதே, 'மெசேஜ்' மற்றும் 'லவ் சிம்பல்' போட்டு வர ஆரம்பித்தது. அதை அலட்சியப்படுத்தி விட்டேன்.

ஒருநாள், கோவிலுக்கு சென்றபோது, ஒருவர் என்னிடம் வந்து, 'என் மனதில் முதலில் இடம்பிடித்த பெண், நீ தான். உன்னை என்னால் மறக்க முடியாது. என் காதலை ஏற்றுக்கொள்...' என்றார்.

அந்நபரை, ஓரிருமுறை, பஸ் ஸ்டாண்டில் பார்த்துள்ளேன். அவ்வளவே!

'என் போன் எண் எப்படி கிடைத்தது?' எனக் கேட்க, 'உன் தோழியிடமிருந்து வாங்கினேன்...' என்றார்.

மறுநாள், தோழியிடம் கேட்க, 'உனக்கு, அவரை போல், ஒரு நல்ல மனிதர், கணவனாக வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். காதலிக்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதாக, கெஞ்சி கேட்டதால் தான் கொடுத்தேன்...' என்றாள்.

அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்றும், நல்ல வேலையில் இருப்பதாகவும், பெற்றோருக்கு ஒரே மகன் என்றும் கூறினாள், தோழி.

வேற்று மதத்தை சேர்ந்தவருக்கு, என்னை திருமணம் செய்து வைக்க, ஒப்புக்கொள்ளவே மாட்டார், அப்பா. மேலும், என் இரு தங்கைகளின் எதிர்காலமும் என்னால் பாதிக்கக்கூடும் என, நினைத்து, அவரது காதலை ஏற்க மறுத்தேன்.

'நீ படிப்பை முடித்து, வேலைக்கு சென்ற பின், இதுபற்றி முடிவு செய்வோம். ஆனால், என்னை ஏமாற்றி, வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், நான் உயிருடன் இருக்க மாட்டேன். நம் எதிர்கால வாழ்க்கைக்காக பல ஏற்பாடுகள் செய்து வருகிறேன்...' என்கிறார்.

இவரது, 'டார்ச்சரால்' படிப்பில் கவனம் சிதறுகிறது. இப்பிரச்னையிலிருந்து மீள்வது எப்படி அம்மா.

இப்படிக்கு, உங்கள் மகள்.

அ ன்பு மகளுக்கு —

'காதல் என்பது காமத்தின் மாறுவேஷம். காதல் ஒரு மாயத்தீ. அது உன் இதயத்தை கதகதப்பூட்டுமா அல்லது உன் மரவீட்டை எரித்து சாம்பலாக்குமா என்பது யாருக்கு தெரியும்?' என்கிறார், ஜோவன் கிராபோர்ட்.

நள்ளிரவில் வீட்டுக்கூரையை பிரித்து, ஓர் அந்நியன் நம் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்து, துாங்கும் நம்மை எழுப்பி, 'இந்த முகவரி எங்கே இருக்கிறது?' என கேட்பது போலிருக்கிறது, உன் மொபைல் போன் நண்பரின் செய்கை.

மெய்யான காதல், கள்ளத்தனம் புரியாது; வழிப்பறிக் கொள்ளை நிகழ்த்தாது; இருட்டில் நின்று காதல் அம்பு எய்யாது. உன்னுடைய அனுமதி இல்லாமல், உன்னுடைய மொபைல் எண்ணை அவன் வாங்கியது, உன் தனி உரிமை மீதான ஊடுருவல்.

உன்னுடைய மொபைல் எண்ணை, உன் தோழி அவனுக்கு கொடுத்தது நம்பிக்கைத் துரோகம். தோழியின் சிபாரிசை நம்பாதே. பழகிய கும்கி யானைகளை வைத்து தான், புதிய யானைகளை பிடிப்பர்.

ஒரு துளி நரகத்தை ஊட்ட, சுயலாபமடைய, பழிவெறி தீர்க்க சில பல நட்புகளும், உறவுகளும் வில்லங்கமான வரன்களை நமக்கு சிபாரிசு செய்வர். வலையில் சிக்காதே.

இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* நீ படித்து முடித்து வேலைக்கு போய், தந்தையின் பாரத்தை குறைக்க, நான்கு ஆண்டுகள் ஆகும். மொபைல் நண்பனின் காதலை மட்டுமல்ல, சாத்தியமான அத்தனை காதல்களில் இருந்தும் விலகி நில்

* மொபைல் நண்பனிடம், 'உன் காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. விலகி போய் விடு. இல்லையென்றால் உன் துர்நடவடிக்கை பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்வேன்...' என, எச்சரித்து விலகு

* உன் மொபைல் எண்ணை மாற்று

* தோழியின் நட்பை துண்டித்துவிடு

* தற்கொலை செய்து கொள்வதாக உணர்ச்சி மிரட்டல் செய்யும் மொபைல் நண்பன் ஆபத்தானவன். உன் மொபைல் எண்ணை திருடி, காதல் வசனம் பேசி, 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்யும் இவன், ஒரு கிறுக்கன்

* தொடர்ந்து தொந்தரவு செய்தால், உன் பெற்றோரிடமும் தெரிவி. அவர்கள் தகுந்த மேல் நடவடிக்கை எடுப்பர்

* உன் முடிவில் நீ உறுதியாக இருந்தால், அவன் மூன்றே மாதங்களில் உன்னை விட்டு நிரந்தரமாக விலகி விடுவான். காதலை, 'வீடியோ கேம்' போல் ஆடும், 'ஜென் இஸட்' ஆண்களின் தாக்குப்புள்ளியிலிருந்து விலகி நில்லுங்கள், மகள்களே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us