PUBLISHED ON : டிச 21, 2025

அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 42 வயது பெண். இல்லத்தரசி. கணவர், அரசு பணியில், நல்ல பதவியில் உள்ளார். 17 வயதில் ஒரு பெண்ணும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
நான், பி.காம்., படித்துள்ளதால், வீட்டிலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறேன்.
என் கணவர் நல்லவர் தான். ஆனால், அதிக செலவாளி. நினைத்தால், நண்பர்களை அழைத்து, வீட்டிலேயே, 'பார்ட்டி' வைப்பார். திருமண நாள், பிறந்த நாள் என்றால் பரவாயில்லை. சனிக்கிழமைதோறும், வீடு அமர்க்களப்படும். உ.பா., ஆறாக ஓடும். அதற்கு, 'சைடு-டிஷ்'ஷாக வடை, பஜ்ஜி, சுண்டல் என்று நான் செய்து தர வேண்டும். செய்து தராவிட்டால், குழந்தைகள் முன், காது கூசும்படி கத்துவார்.
செலவு கட்டுப்படியாகவில்லை. வயசு பெண்ணையும், விடலை பருவத்தில் இருக்கும் மகனையும் வைத்து கொண்டு, நான் படும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பையனின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறேன்.
வாரந்தோறும், 'உ.பா., பார்ட்டி' நடப்பதால் அக்கம்பக்கத்தினர், தங்கள் குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்ப தயங்குகின்றனர்.
கணவரது நண்பர்களே, சில சமயம், 'உன் மனைவியை தொந்தரவு செய்யாதே...' என்கின்றனர். அதற்கும் எனக்கு தான் திட்டு. 'நீ முகத்தை, 'உம்'மென்று வைத்துக் கொண்டதால் தான் அப்படி சொல்கின்றனர்...' என்று கத்துகிறார்.
இந்த அவலம் மாற ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.
- இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
பொதுவாக குடிநோயாளிகள் துாரத்து மறைவிடங்களில் தனியாகவோ, நண்பர்களுடனோ மது அருந்தி, வீடு திரும்புவர். குடிநோயாளிகள் தங்களின் குடி நண்பர்களை, தங்களின் குடும்ப பெண் உறுப்பினர்களிடம் அறிமுகப்படுத்த மாட்டார்கள். காரணம், குடிநோயாளிகளுக்கு குடிவெறியில், தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாது. உன் கணவர், நீ நினைப்பது போல நல்லவன் அல்ல. பத்து குடிநோயாளிகளுக்கு சமமானவர். விட்டால் உன்னையும், உன் மகளையும் அவர்கள் முன் குத்தாட்டம் போடச் சொல்வார் போல.
அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.
* உன் கணவரின் குடிஉற்சவத்திற்கு எதிராக, போர் பிரகடனம் செய். குடியை வீட்டுக்குள் அனுமதிக்காதே. மீறினால் கணவரின் உற்சாகபான புட்டிகளை சாக்கடையில் போட்டு உடை
* வீட்டில் இனி குடிநோயாளிகளுக்கு, 'சைடு-டிஷ்' தயாரிக்கும் வேலை நடக்காது என, ஆணித்தரமாக சொல்
* உன் கணவரின் குடிகார நண்பர்களின் வீடுகளுக்கு போன் செய்து, 'இனி, அவர்கள் என் வீட்டுக்கு குடிக்க வந்தால் சாக்கடை தண்ணீரால் குளிப்பாட்டுவேன்...' என, மிரட்டு. அவர்களின் மொபைல் போன் எண் உன்னிடம் இல்லை என்றால், அவர்கள் உன் வீட்டுக்கு குடிக்க வரும்போது பெரும் ரகளை பண்ணி அவர்களை விரட்டு
* உன் கணவர் கத்தினால் அசராதே. அதை விட அதிகமாக நீ கத்து. வாயடைத்துப் போவார் உன் கணவர்
* மாதம் ஒரு முறை உற்சாகபானம் அனுமதி. அதுவும் அளவாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ஓ.கே., அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தால், 'வீட்டை பூட்டிக் கொண்டு நடைபாதையில் துாங்க விட்டு விடுவேன்...' என எச்சரி
* சண்டை இழுத்தால், 'நானும், குழந்தைகளும் கூட்டாக உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்கள் மேலதிகாரியிடம் உங்களின் துர்நடத்தை பற்றி புகார் செய்வோம்...' என, நிர்தாட்சண்யமாக தெரிவி. கணவர், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை, 'பார்' ஆக்குகிறார் என, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்வேன் என தெரிவி
* மேற்சொன்ன எதுவும், 'கிளிக்' ஆகவில்லை என்றால், 'நானும், என் குழந்தைகளும் தனியே போய் விடுவோம். விவாகரத்துக்கு மனு போடுவேன்...' என கூறு
* உன் மகளை விட்டு உன் கணவரிடம் பேச வை
* இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பஞ்சாயத்து வை
* வன்முறை தேவையில்லை. அஹிம்சா முறையில், குடிநோயாளி கணவருக்கு எதிராக போராடலாம். பிரச்னை பெரிதானால் குழந்தைகளுடன் உன் பெற்றோர் வீட்டுக்கு போ. எங்காவது வேலையில் சேர். மாலையில் டியூஷன் நடத்து
* பெரும்பாலான குடிநோயாளிகள் கோழைகள், 'சென்டிமென்ட்' முட்டாள்கள்
உன் ருத்ரதாண்டவத்தில், பொட்டுப் பூச்சியாய் உன் காலடியில் வந்து சரணடைவார், உன் கணவர்.
- -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்

