PUBLISHED ON : பிப் 15, 2026

அன்புள்ள மகளுக்கு -
நான், 72 வயது மூதாட்டி. அரசு பணியில் இருந்து, ஓய்வு பெற்ற கணவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது, 'பென்ஷன்' எனக்கு கிடைக்கிறது. சொந்தமாக வீடு உள்ளது.
எனக்கு, இரண்டு மகன்கள். இருவரையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தோம்.
மூத்தவன், கலப்பு மணம் புரிந்து, என் வீட்டுக்கு, இரண்டு தெரு தள்ளி தனிக்குடித்தனம் போனான்.
இளைய மகனுக்கு திருமணமாகி, மனைவி, இரு பேரக் குழந்தைகளுடன் என்னுடன் மாடி போர்ஷனில் வசிக்கிறான்.
மூத்தவனின் மனைவி, கல்லுாரி பேராசிரியையாக, கை நிறைய சம்பாதிக்கிறாள். என் மகனுக்கு நிரந்தர வேலையில்லை. எனவே, அவனுக்காக ஒரு, 'பேக்கரி' வைத்துக் கொடுத்தேன். சிறிது காலத்துக்கு பின், அதை சரிவர கவனிக்காமல் விட்டு, நஷ்டமடைந்தது. கடையையும் மூடி விட்டான்.
இதற்கிடையில், என் மூத்த மகனை அவன் மனைவி கட்டாயப்படுத்தி, மலேஷியாவில் வேலை செய்ய அனுப்பினாள். அதன் பின், அவன் சுதாரித்து, பொறுப்பாக சம்பாதிக்க ஆரம்பித்தான். சிறிது நாட்களில், துபாய் நாட்டில் நல்ல வேலையும் கிடைக்க அங்கு சென்றான்.
தான் சம்பாதித்த பணத்தை, அவன் மனைவிக்கு அனுப்ப ஆரம்பித்தான். அவளும், சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டினாள். அந்த வீட்டில் அவளும், அவளது மகன் மற்றும் பெற்றோரும் வசித்து வருகின்றனர்.
மகன் அனுப்பும் பணத்தில் எனக்கோ, என் இளைய மகனுக்கோ ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டாள். ஏதாவது கேட்டால், 'வீடு கட்ட கடன் வாங்கியதை அடைக்க வேண்டாமா?' என்று எதிர்கேள்வி கேட்கிறாள்.
ஒரு முறை, என் மகன், 'எனக்கு போன் செய்து, ஏதாவது நகையோ, பணமோ இருந்தால், என் மனைவியிடம் கொடும்மா. இந்தியா வந்ததும், திருப்பி தருகிறேன்...' என்றான். என்ன அவசரமோ என்று நினைத்து, கையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சவரன் செயினை மருமகளிடம் கொடுத்தேன்.
ஒரு ஆண்டுக்கு பின், இந்தியா வந்தவனிடம், பணத்தையும், நகையையும் திருப்பித்தர கேட்டால், 'தருகிறேன், தருகிறேன்...' என்று சொல்லி, தப்பிக்கிறான்.
இது நடந்து ஒரு ஆண்டுக்கு பின், மீண்டும் மகன் பணம் கேட்க, கடன் வாங்கிக் கொடுத்தேன். அந்த கடனையும் அவர்கள் அடைக்காமல், கடன்காரன் என்னை கேட்டு, தொந்தரவு செய்கிறான். வயது மூப்பு மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருந்து, மாத்திரை என, படுக்கையிலேயே என் வாழ்க்கை செல்கிறது.
ஒருமுறை கூட என் மருமகள் என்னை வந்து பார்க்கவே இல்லை. மகனும் போனில் விசாரிப்பதைக் கூட குறைத்துக் கொண்டான்.
இது, எதுவும் என் இளைய மகனுக்கு தெரியாது. அவன் உண்டு, அவன் வேலையுண்டு என்று இருப்பான். என், 'பென்ஷன்' பணத்தை அவனிடம் தான் கொடுப்பேன். ஏதாவது கேட்டால், வாங்கி வந்து தந்து விடுவான். இளைய மருமகளும் வேளா வேளைக்கு, சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.
மற்றபடி ஆறுதலாக பேச யாருக்கும் நேரமில்லை. பேரக்குழந்தைகளும், பள்ளிக்கு போகும் போது, எட்டிப்பார்த்து, 'போய் வருகிறோம்...' என்று சொல்லி செல்வர் அவ்வளவு தான்.
நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி வருகிறது. கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை. நான் என்ன செய்யட்டும் மகளே!
-இப்படிக்கு, உன் அம்மா.
அன்பு அம்மா -
உங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என நம்புகிறேன். உங்களின் சொந்தவீடு உங்கள் கணவரின் சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடாக இருக்கலாம். உங்கள் கணவர் இறப்பதற்கு முன், ஏதாவது உயில் எழுதி இருக்கிறாரா? வீட்டை இரு மகன்களுக்கும் பங்கு பிரித்து அவர் எழுதி வைக்கவில்லைதானே! உயில் எதுவுமே எழுதி வைக்காதிருந்தால் வீடு உங்களுக்கு தான் சொந்தம்.
உங்கள் இருமகன்களும் சுயநலப்பிசாசுகள் தான்.
உங்கள் இளையமகன் உங்களின், 'பென்ஷன்' பணத்தை முழுவதுமாய் கபளீகரம் பண்ணுகிறான். உங்களுக்கான மருந்து மற்றும் சாப்பாடு செலவு எட்டாயிரம் ரூபாய் ஆகலாம். மீதி, 17ஆயிரம் ரூபாய் உங்கள் இளைய மகனுக்கு. அத்துடன் உங்கள் வீட்டுமாடியில் வாடகை இல்லாமல் வசிக்கிறான். அதில் மாதம், 10 ஆயிரம் மிச்சம்.
உங்கள் மூத்தமகனுக்கு பேக்கரி வைத்துக் கொடுத்தீர்கள். ஊத்தி மூடிவிட்டான். நீங்கள் கைமாத்தாய் கொடுத்த, 35 ஆயிரம் ரூபாயையும், 5 சவரன் நகையையும் சுருட்டிவிட்டான். ஒரு லட்ச ரூபாயோ, இரண்டு லட்ச ரூபாயோ, உங்கள் மூலமாக கடன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறான். சுயநலத்தில் மூத்த மருமகள், மூத்த மகனை விட ஒருபடி மேலே.
இந்த தலைமுறை மகனும், மகளும் அன்பை ஒரு வழிபாதையாய் கருதுகின்றனர். பணமும், நகைகளும் சொத்தும், உடலுழைப்பும் பெற்றோர், பிள்ளைகளுக்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் பெற்றோருக்கு ஒரு குண்டுமணி கூட திருப்பித்தர மாட்டார்கள்.
சரியான மருத்துவமும், அக்கறையான கவனிப்பும் இருந்தால், நீண்ட நாள் உயிர் வாழ்வீர்கள்.
நான், உங்களுக்கு ஒரு யோசனை கூற விரும்புகிறேன்.
உங்கள் சொந்த வீட்டை கிரயம் பேசுங்கள். 40 லட்ச ரூபாய்க்கு விலை போகிறது என்றால், 5 லட்ச ரூபாயை இளைய மகனுக்கு கொடுக்கலாம். மூத்த மகனுக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த கடன் வட்டியுடன் 5 லட்சம் ரூபாய் இருக்குமா? அதனை அடைத்து விடுங்கள். கடனை அடைத்ததோடு சரி மூத்தவனுக்கு எதுவும் பங்கு கொடுக்காதீர்கள்.
அஞ்சல் துறை சேமிப்பு திட்டத்தில் சீனியர் சிட்டிசன் கணக்கு ஆரம்பித்து முப்பது லட்ச ரூபாயை வைப்பு நிதியாக போடுங்கள். வாரிசாக இருமகன்கள் வழி பேரக்குழந்தைகள் பெயரை போடுங்கள். வட்டி மாதத்திற்கு, 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காலாண்டுக்கு ஒருமுறை வழங்குவர். பணம் கட்டி தங்கும் வசதி வாய்ப்பு உள்ள முதியோர் இல்லத்தில் தங்குங்கள். தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு எல்லாம் நிறைவாகக் கிடைக்கும். மாதம் ஒருமுறை பேரக்குழந்தைகளை வரவழைத்து அளவளாவி பரிசு பொருள் வழங்குங்கள்.
மகன்கள் விரும்பினால் அவர்களும் வந்து உங்களை பார்க்கட்டும்.
பணம் கட்டி தங்கும் முதியோர் இல்லங்களில் உங்கள் வயது தாத்தா - பாட்டிகள் நட்பாவர். உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட நீங்கள் அனைவரும், பரஸ்பரம் எற்பட்டுள்ள மனக்காயங்களுக்கு மருந்திடலாம்.
--என்றென்றும், உங்கள் மகள், சகுந்தலா கோபிநாத்.

