
பா - கே
பீச் மீட்டிங். வழக்கம் போல் கூட்டம். மராட்டிய மொழியை தாய் மொழியாக கொண்டவரும், ம.பி., மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே புலம் பெயர்ந்து, சென்னை, சவுகார்பேட்டை பகுதியில், துணி வியாபாரம் செய்து கொடிக்கட்டி பறந்து வரும், நண்பர் ஒருவரும், கூட்டத்தில் இருந்தார். தமிழ் மொழியையும் அவர் நன்கு அறிவார். மராட்டிய பத்திரிகை ஒன்றை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும், 'ஓய்..... (நண்பர் பெயர்) விளித்து, 'எப்பப்பாரு, பிசினஸ், பிசினஸ்ன்னு இருக்காதீர். கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்துக்கணும்...' என்றார், லென்ஸ் மாமா. 'அதில்லை, மாமா... ஒரு, 'இன்ட்ரஸ்ட்'டான செய்தி வந்துள்ளது. அதைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்...' என்றார். அப்படி என்ன செய்திபா அது? எங்களுக்கும் சொல்லேன் கேட்போம்...' என்றார், குப்பண்ணா. கூற ஆரம்பித்தார், நண்பர்: பள்ளி ஆசிரியர் ஒருவரும், அவரது மனைவியும் மத்திய பிரதேச மாநிலத்தில், 'பிளாட்' ஒன்றில் வசிப்பவர்கள். ஆசிரியர், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
பண்டிகை கொண்டாட, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.
புறப்படுவதற்கு முன், ஆசிரியர், 'நாம் இல்லாதபோது, திருடன் யாராவது உள்ளே நுழைந்தால் என்ன செய்வது? வீட்டில் பணம் இல்லாவிட்டால், பீரோ, அலமாரிகளை உடைத்து, எல்லா பொருட்களையும் நாசம் செய்து விடுவானே...' என்று எண்ணி, வீடு சேதமடையாமல் இருக்க, அவர், ஆயிரம் ரூபாயை மேஜை மீது வைத்தார்.
அத்துடன், அன்புள்ள திருடனே... என் வீட்டிற்குள் நுழைய நீங்கள் எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான், ஒரு நடுத்தர வர்க்க மனிதன். என் ஓய்வூதியத்தில் மட்டுமே வாழ்கிறேன். எனவே, இங்கே மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லை. உங்க கடின உழைப்பும், விலைமதிப்பற்ற நேரமும் வீணாகி விடும் என்று நான் வருத்தப்படுகிறேன். எனவே, உங்கள் முயற்சிக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் தொழிலில்(திருட்டு) நீங்கள் வெற்றி பெற உதவ, நான் கீழே சில குறிப்புகளை தருகிறேன்.
* எட்டாவது மாடியில், ஒரு ஊழல் மந்திரி வசிக்கிறார்
* ஏழாவது மாடியில், நிறைய சொத்துகள் கொண்ட வியாபாரி இருக்கிறார்
* ஆறாவது மாடியில், கூட்டுறவு வங்கித் தலைவர்
* ஐந்தாவது மாடியில், பெரிய தொழிலதிபர்
* நான்காவது மாடியில், பிரபல வழக்கறிஞர்
* மூன்றாவது மாடியில், ஊழல் அரசியல்வாதி வசிக்கிறார்.
இவர்களிடம் மலையளவு தங்கமும், பணமும் உள்ளன.
உங்களது சிறிய அளவிலான கையாடல், அவர்களை சிறிதும் தொந்தரவு செய்யாது. ஏனென்றால், அவர்கள் போலீசில் புகார் கூட செய்ய மாட்டார்கள்!
- இப்படி கடிதம் எழுதி வைத்து விட்டு, ஊருக்கு சென்று விட்டார், அந்த ஆசிரியர்.
பண்டிகை முடிந்து, ஆசிரியர் வீடு திரும்பியபோது, மேஜையில் ஒரு பெரிய பையைக் கண்டார். உள்ளே, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது மற்றும் ஒரு கடிதம். அதில்...
மதிப்பிற்குரிய குருஜி, உங்கள் வழிகாட்டுதலுக்கும், போதனைக்கும் மனமார்ந்த நன்றி. நான், உங்கள் ஆலோசனையைப் பின்பற்றினேன், என் பணி வெற்றி பெற்றது. நன்றியின் அடையாளமாக இந்த சிறிய தொகையை விட்டுச் செல்கிறேன். எதிர்காலத்திலும் உங்கள் ஆசிர்வாதங்களையும், ஞானத்தையும் நான் தொடர்ந்து பெற விரும்புகிறேன். உங்கள் சீடர், திருடன்! - என்று, அதில் எழுதி வைத்திருந்தான்.
'நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் என்று நினைத்தேன். ஆனால், என் கற்பித்தல் பணி இன்னும் தொடர்கிறது போலிருக்கிறது...' என்று நினைத்து, தன்னைத்தானே பாராட்டிக் கொண்டாராம், அந்த ஆசிரியர்.
இதைக்கேட்டதும், கண்களில், கண்ணீர் வரும் வரை சத்தமாக சிரித்தார், லென்ஸ் மாமா. 'திருட தெரிஞ்சாலும், தேத்த தெரியணும். சில அபிஷ்டுகளுக்கு அந்த சாமர்த்தியம் போதாது...' என்று சொல்வர். ஆனால், இந்த திருடன் பலே கில்லாடியா இருக்கிறானே...' என்று அந்த திருடனை பாராட்டினார், குப்பண்ணா. இது உண்மையாக இருக்குமா? என்று சிந்தித்தேன், நான்.
ப
ஒவ்வொருவருக்கும், சதுரம், வட்டம் என, ஒவ்வொரு வடிவம் பிடித்திருக்கும். யாருக்கு எந்த வடிவம் பிடிக்கும், அவரது குணநலன்கள் எப்படி இருக்கும். பார்ப்போமா? சதுரம் பிடித்திருந்தால் அவரது மனப்போக்கு...
எ ந்த ஒரு செயலையும் செய்யும் முன், தெளிவான திட்டமிடல் உங்களிடம் இருக்கும். எந்தச் செயலையும் ஒழுங்கான முறையில் வழக்கமான பாணியில் செய்வது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு செயலையும் தனியாளாக செய்து முடிக்கவே விரும்புவீர்கள். மேலும், உங்கள் திறமையை பங்கு போட்டுக்கொள்ள விரும்ப மாட்டீர்கள்.
செவ்வகம் பிடித்திருந்தால்...
நீங்கள் எந்த ஒரு செயலும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்று விரும்புவீர்கள். அதுபோல், சரியான நேரத்தில் ஒவ்வொரு பணியும் நடைபெற வேண்டும் என்பது உங்களின் எண்ணமாக இருக்கும். செவ்வகத்தை விரும்பிய நீங்கள் சிறந்த நிர்வாகியாக செயல்படும் திறமை கொண்டவராக இருப்பீர்கள். மேலும், குழுவாக இணைந்து பணியாற்ற நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
முக்கோணம் பிடித்திருந்தால்...
மு யற்சி செய்யும் குணம் உங்களிடம் காணப்படும் காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நீங்கள். இதனால், சில நேரங்களில் விதிமுறைகள், நேரான வழிமுறைகளை பின்பற்ற ஆர்வம் இருக்கிறது. இதனால், சில நேரங்களில் வம்பில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடும்.
வட்டம் பிடித்திருந்தால்...
உ ங்களிடம் தஞ்சம் புகுந்தால் போதும், காரியங்களை நீங்கள் செய்து கொடுத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு அளிப்பதில் கில்லாடி. அதே நேரத்தில் உங்களிடம் எந்த ரகசியமும் தங்காது. உங்களுக்கு தெரிந்ததை உடனே மற்றவர்களிடம் சொல்லாவிட்டால், உங்களுக்கு தலை வெடித்து விடும்.
வளைகோடு பிடித்திருந்தால்...
கற்பனை சக்தியும், புத்திசாலித்தனமும் மிக்கவர்கள் தேர்ந்து எடுக்கும் உருவம் தான் வளைகோடு. எதையும் வித்தியாசமாக, மாற்றுக் கண்ணோட்டத்தில் செய்யக் கூடியவர்கள் நீங்கள். மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தெரிய வேண்டும், மாறுபட்டு நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பீர்கள்.
ஆக, ஒவ்வொரு மனிதனும், ஏதோவொரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தி விடுவான். அதன் மூலம் அவனது மனப்போக்கை கண்டுபிடித்து விட முடியும்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

