
பா கே
அலுவலகம்... 'நாடாளுமன்றத்தில், 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதே... அது குறித்த கருத்துகளோ, காரசாரமான விவாதங்களோ அதிக அளவில் தலை துாக்கவில்லையே கவனித்தீர்களா?' என்றார், உ.ஆசிரியர் ஒருவர். 'அதைவிட முக்கியமா, முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகம் பற்றியும், நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பிரதமரை தாக்க, காங்., பெண் எம்.பி.,கள் இருவர் திட்டமிட்டது பற்றிய விவாதத்துக்கே நேரம் போதவில்லை; இதில், பட்ஜெட் பற்றி எங்கே பேச...' என்று கூறி சிரித்தார், லென்ஸ் மாமா. 'அதை விடுங்க... கருப்பு பட்ஜெட் மற்றும் கனவு பட்ஜெட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்றார், அருகிலிருந்த மூத்த செய்தியாளர்.
'அதென்ன... புதுவிதமான, பட்ஜெட்டாக இருக்கிறதே... அதைப்பற்றி சொல்லுங்களேன்...' என்றேன், நான். சொல்ல ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்: பிரதமர் இந்திராவின் தலைமையின் கீழ், இந்திய நிதி அமைச்சர், யஷ்வந்த் ராவ் சவான் பிப்., 28, 1973ல், தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் தான், கருப்பு பட்ஜெட் எனப்படும். அந்த ஆண்டில், நிதி பற்றாக்குறை, 550 கோடி ரூபாயாக இருந்ததே அதற்கு காரணம். 1972ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரும், 1972ல், ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாகவும், இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தது. இதன் காரணமாக, 'கருப்பு பட்ஜெட்' என்று வரலாற்றில் இடம் பிடித்தது.
அடுத்து, கனவு பட்ஜெட்.
கடந்த, 1997ல், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், பெரிய சீர்திருத்தங்களுக்கான ஒரு வரைபடத்தை வகுத்தார். அதுவே, 'கனவு பட்ஜெட்' என, குறிப்பிடப்பட்டது.
இந்த, பட்ஜெட்டில், தனி நபர்களுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை, 40 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாகவும், சுங்க வரியை, 50 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், கலால் வரி அமைப்பையும் எளிமைப்படுத்தியது.
புதுமையான இந்த அம்சங்கள் இடம்பெற்றதால், அது, கனவு பட்ஜெட் என்றானது.
இதுதவிர, பட்ஜெட் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறிவிடுகிறேனே...
* இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார் தெரியுமா?
இந்தியாவில், 1860ல், பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போது, அப்போதைய பிரிட்டிஷ் நிதி அமைச்சராக இருந்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஜேம்ஸ் வில்சன் என்பவர் தான் இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்
* சுதந்திர இந்தியாவில், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக் குரியவர், முன்னாள் நிதி அமைச்சராக இருந்த, மொரார்ஜி தேசாய் தான். இப்போதைய, நிதி அமைச்சரான, நிர்மலா சீதாராமன், 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, இரண்டாவது இடத்தில் இருக்கிறார்
* மத்திய பட்ஜெட், 1999ம் ஆண்டு வரை, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில், மாலை 5:00 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. 1999ல், அப்போதைய நிதி அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை, காலை 11:00 மணியாக மாற்றினார்
கடந்த, 2017ல், அப்போதைய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில், பட்ஜெட் தாக்கல் செய்யும், பிரிட்டிஷ் கால மரபை மாற்றி, பிப்ரவரி 1ம் தேதியை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளாக கொண்டு வந்தார்
* இந்தியாவின் வரலாற்றிலேயே, பிப்., 1, 2020ல், அப்போதிருந்த நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய பட்ஜெட் உரை தான் மிக நீண்ட பட்ஜெட் உரையாகும். 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தினார். உரையின் இறுதி கட்டத்தில், நிர்மலா சீதாராமனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், இரண்டு பக்கங்கள் மீதமிருந்த நிலையில், உரையை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று
* 'பட்ஜெட்' என்பதற்கு நிதி நிலை அறிக்கை என்று பொருள் அல்ல. நிதிநிலை அறிக்கைகள் கொண்ட தாள்களை வைத்து எடுத்து செல்லும், தோல் பைக்கு தான், 'பட்ஜெட்' என்று பெயர்.
- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். 'எல்லாம் சரி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், அல்வா கிண்டும் சம்பிரதாயம் ஒன்று பின்பற்றப்படுகிறதே... அதற்கு என்ன காரணம்?' என்று கேட்டார், லென்ஸ் மாமா. பதில் தெரியாமல் விழித்தார், மூத்த செய்தியாளர். அல்வா கிண்டுவது ஏன்? தெரிந்தவர்கள் எனக்கு எழுதலாமே!
ப
மலைக்கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக, அப்பாவும், மகனும் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓரிடத்தில் குதிரை தடுமாறவே, மகன் கீழே விழுந்து விட்டான்.
உடனே வலியில், 'ஐயோ...' என்று கத்தினான். மறு நிமிடமே, ஐயோ என்ற சத்தம் மலையிலிருந்து எதிரொலித்தது.
தன்னை மலை கேலி செய்வதாக நினைத்து, 'உன்னைக் கொன்று விடுவேன்...' என்று கத்தினான், அவன்.
மறு நிமிடம், 'உன்னை கொன்று விடுவேன்...' என்று மலையும் எதிரொலித்தது.
அவன் ஆத்திரம் அடைந்து, 'நான் யார் தெரியுமா?' என்று கூச்சலிட்டான். அதுபோலவே மலையும் கூச்சலிட்டது. அவனால், கோபத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கையில் கிடைத்த கற்களை எடுத்து மலையை நோக்கி எறிந்தான். மலை மவுனமாக இருந்தது.
சிறுவனது சிறுபிள்ளைத் தனத்தை கண்ட அவனது அப்பா, மகனிடம், 'நான் நல்லவன் என்று கத்து...' என்றார்.
அவனும் அப்படியே கத்தினான். உடனே, மலையிலிருந்து, 'நான் நல்லவன்...' என்ற சத்தம் எதிரொலித்தது.
அது போலவே, 'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு...' என்று கத்த சொன்னார். மகனும் அப்படியே சொன்னான். மலை அதையும் எதிரொலித்தது. இப்போது, மகனுக்கு மலை மீதிருந்த கோபம் போய் விட்டது.
அப்பா சிரித்தபடியே, 'நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அது தான் வெளியிலும் எதிரொலிக்கிறது. ஆகவே, நம் மனதில் நல்ல எண்ணங்கள் வெளிப்பட்டால், பதிலாக நல்ல எண்ணங்கள் நம்மை வந்து அடையும்...' என்றார்.
அவனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. உள்ளுக்குள் உற்சாகம் பிறந்தது. வலிகளை உதறித்தள்ளினான். புதிய வழி ஒன்று உதயமானது. பயணத்தை தொடர்ந்தான்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
@quote@ அந்துமணியின் அதிதீவிர வாசகரான புதுடில்லி ஆர்.ஹரிகோபி, அந்துமணியை சந்தித்த போது...@@quote@@

