PUBLISHED ON : ஜூன் 07, 2026

பா கே
வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, மொபைல் போன் ஒலித்தது. போனை, 'ஆன்' செய்து, 'ஹலோ' என்றேன்.
'நான் .....(பெயர்) பேசுகிறேன். சென்னை வந்துள்ளேன். உன்னையும், லென்ஸ் மாமாவையும் பார்த்து, பல வருஷமாச்சு. சந்திக்க முடியுமா?' என்றார், எதிர்முனையில் பேசியவர்.
எங்கு, எப்போது சந்திக்கலாம் என்று கேட்டறிந்து, போனை, 'கட்' செய்தேன்.
போனில் பேசியவர், இந்திய உளவுத்துறையில், அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். ஆனால், இன்றும், அத்துறையில், கவுரவ ஆலோசகராக இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்தவராயினும், டில்லியிலேயே, 'செட்டில்' ஆகிவிட்டவர். தற்சமயம், அவருக்கு, 75 வயது இருக்கும்.
ஆசிரியருக்கும் நன்கு அறிமுகமானவர். ஆசிரியரை பார்க்க வரும்போது தான், எனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
முன்னாள் அதிகாரி வந்திருக்கும் செய்தியை, லென்ஸ் மாமாவிடம் கூற, 'உடனே போய் பார்க்கலாம், மணி...' என்று பரபரத்தார். ஆசிரியரிடம் அனுமதி பெற்று செல்லலாம் என்று கூறி, அமைதிப்படுத்தினேன்.
ஆசிரியரின் அனுமதியுடன், மதிய உணவு இடைவேளையின் போது, அதிகாரி குறிப்பிட்ட, 'கெஸ்ட் ஹவுஸ்'ல் சந்தித்தோம்.
வயது காரணமாக சற்று தளர்ந்திருந்தாலும், அன்று போலவே மிடுக்காக இருந்தார். இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் மற்றும் ஈரான்-அமெரிக்க போர் உட்பட பல விஷயங்கள் பேசினார். பொதுவாக நாம் படிக்கும், பார்க்கும் ஒரு சம்பவம், அவரது கண்ணோட்டத்தில் வேறு விதமாக பல உள் விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்வதை கேட்க, பிரம்மிப்பாக இருந்தது.
'எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கும், உங்களைப் போன்ற உளவாளிகளுக்கும் உள்ள வித்தியாசம், உங்கள் பேச்சில் நன்றாகவே புலனாகிறது...' என்று பாராட்டினார், லென்ஸ் மாமா.
'உளவுத்துறை பணியில் இருந்த போது, நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன்...' என்றேன், நான். சொல்ல ஆரம்பித்தார், அதிகாரி:
கடந்த, 1974ல், இந்தியா, அணு ஆயுத சோதனையை, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நிகழ்த்தியது நினைவிருக்கும். யாருக்கும் தெரியாமல், ரகசியமாக, 'சிரிக்கும் புத்தர்' என்ற பெயரில் நிகழ்த்திய இந்த சாதனையை, சோதனை முடிந்து, நான்கு மணி நேரத்துக்கு பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்தார், அப்போதைய பிரதமர், இந்திரா. அதன் பின்னரே, உலக நாடுகளுக்கு, செய்தி பரவியது. எல்லா நாடுகளும், இந்தியாவை திகைப்புடன் பார்த்தன. பாகிஸ்தானுக்கு மட்டும், இந்தியாவின் அணு ஆயுத வெற்றி அச்சத்தை ஏற்படுத்தியது.
உடனே, ரகசியமாக, 'புராஜக்ட் 706' என்ற பெயரில், அணு ஆயுதம் உருவாக்க முடிவு செய்தது, பாகிஸ்தான்.
இந்த ரகசியத்தை வெளியே தெரியாமல் பாதுகாக்கும் பொறுப்பு, அந்நாட்டின், ஐ.எஸ்.ஐ., என்ற உளவுத்துறையிடம் ஒப்படைத்து, இன்னும் சில ஆண்டுகளில் நாமும், அணு ஆயுதம் கொண்ட சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார், பாக்.,கின் அப்போதைய பிரதமர், புட்டோ.
மிக மிக ரகசியமாக, நடைபெற்ற விஷயத்தை முதலில் மோப்பம் பிடித்தது, இஸ்ரேல் நாட்டின், உளவுத்துறையான, மொஸாட். உடனே, இந்தியாவை தொடர்பு கொண்டு, விஷயத்தை போட்டுடைத்தது.
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை வெற்றி பெற்றால், தேவையில்லாமல் பதற்றம் உருவாகும். எனவே, அதை தடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தது, இந்தியா.
இந்தியாவின், உளவுத்துறையான, 'ரா'வை அழைத்தார், பிரதமர் இந்திரா. 'முதலில், அச்செய்தி உண்மை தானா என்று அறிய வேண்டும். ஆதாரம் இல்லாமல் நாம் நடவடிக்கை எடுத்தால், அது நமக்கே ஆபத்தாக முடியலாம். ஆதாரத்துடன் வாருங்கள் பிறகு, அழிக்கும் வேலையைத் திட்டமிடலாம்...' என உத்தரவிட்டார், இந்திரா.
'ரா' தன் உளவாளிகளை அனுப்பி, பாகிஸ்தான் முழுவதும் கண்காணிக்கத் துவங்கியது. பாகிஸ்தானில் பல ஆராய்ச்சி கூடங்கள் இருந்தாலும், ஒரு சோதனைக் கூடத்தில் மட்டும், பாக்., பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட, அதிக பாதுகாப்பு வழங்கி இருப்பதை கவனித்து, தகவலை சேகரிக்க ஆரம்பித்தது, நம் உளவுத்துறை.
அணு ஆயுத சோதனை மிக ரகசியமானது என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவதையும், பாக்., பிரதமர், ஜுல்பிகர் அலி புட்டோவே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அங்கிருந்து குண்டு ஊசி வெளியே எடுத்து போவதற்கும் தடை விதித்திருக்கிறார். அதனால், நேரிடையாக, சோதனைக் கூடத்தில் நுழைந்து, விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு, மிரட்டியோ, ஆசைக்காட்டியோ ஆதாரங்களை சேகரிக்க நேர விரயமாகும். செலவும் அதிகரிக்கும் என்பதால், நம் உளவுத்துறை வேறு ஒரு வழியை கையாண்டது.
சோதனை கூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தங்கியிருந்த விடுதிகளில் எங்கெங்கு முடித்திருத்தம் நிலையங்கள் உள்ளன என்ற பட்டியலை எடுத்தது, உளவுத்துறை.
விஞ்ஞானிகள் முடித்திருத்த எப்போது போவர் என்று பொறுமையாக காத்திருந்தனர்.
அணுசக்தி கூடத்தில் பணியாற்றுபவர்கள் மேல் கதிர்வீச்சின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அவர்கள் விட்டுச் செல்லும் பொருட்களில் அந்த கதிர்வீச்சு தொற்றிக்கொண்டு வரும். அவற்றை எடுத்து சோதித்தால், அணு ஆராய்ச்சி நடைபெறுகிறதா என்று கண்டுபிடித்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர், இந்திய உளவாளிகள்.
அதன்படி, விஞ்ஞானிகள் முடி திருத்த வரும்போது, அங்கே அவர்களுக்கு வெட்டப்பட்ட முடிகளை சேகரித்து, அதில் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கிறதா என, அறிய, டில்லிக்கு அனுப்பி பரிசோதனை செய்ய செய்தனர்.
உளவுத்துறையின் அனுமானம் சரியாக இருந்தது. பாக்., விஞ்ஞானிகளின் முடிகளில், அணுசக்தி தயாரிக்க முக்கிய மூலப் பொருளாக இருக்கும், புளுட்டோனிய கதீர்வீச்சு வெளிப்பட்டது.
அவ்வளவு தான். பாகிஸ்தான், அணு ஆயுதத்தை உருவாக்குவது உறுதியானது.
அணு ஆயுத சோதனை நடைபெறுவதை தடுத்து, அழிக்க வேண்டும் என்பது பிரதமர் இந்திராவின் நோக்கம். ஆனால், அப்போது நடந்த அரசியல் மாற்றம் காரணமாக, இந்திரா பதவி இழந்து, மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார்.
அவரிடம், நம் உளவுத்துறையினர் விஷயத்தை சொல்லி, அதை அழித்து விடலாம், உத்தரவு தாருங்கள் என்று கேட்டனர்.
ஆனால், மொரார்ஜி தேசாய் அதற்கு சம்மதிக்கவில்லை. 'பாகிஸ்தானில் உங்களுக்கு என்ன வேலை. உடனே, அங்கிருந்து அனைவரும் இந்தியா திரும்புங்கள். என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்...' என்று கூறி, முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், உடனடியாக பாக்., பிரதமருக்கு போன் செய்து, 'அணு ஆயுதம் தயாரிக்கிறீர்களாமே, எனக்கு தெரியும்...' என்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டார்.
உடனே, உஷாரான பாக்., பிரதமர், அவர்களது ஐ.எஸ்.ஐ., உளவாளிகளை வைத்து, பாகிஸ்தானில் இருக்கும், இந்திய உளவாளிகளை வேட்டையாட உத்தரவிட்டார். விளைவு, நம் ஏராளமான உளவாளிகள் பிடிபட்டு, கொல்லப்பட்டனர்.
இது நமக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.
- என்று கூறி முடித்தார், அந்த அதிகாரி.
'உளவாளிகள் என்று சொல்கிறீர்களே... அவர்கள் எப்படி, எந்த வேடத்தில் சென்று தகவல் சேகரிப்பர்?' என்று கேட்டார், லென்ஸ் மாமா.
'திரைப்படத்தில், ஜேம்ஸ் பாண்டு 007 வருவது போல், கோட்சூட் அணிந்து, ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி, ஒரு கையில் மது கோப்பையையும், இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்தபடி எல்லாம் இருக்க மாட்டார்கள்... விவசாயி போல், மெக்கானிக் போல் தான் இருப்பர்.
'உளவறிய, ஆட்களை எப்படி தேர்ந்தெடுத்து, பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை பிறகு சொல்கிறேன்...' என்றார், அந்த அதிகாரி. 'படு பயங்கரமான, 'த்ரில்லர்' கதை கேட்டது போல் இருக்கிறது...' என்றேன், நான்.
அவர், திடீரென சென்னை வந்த நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி, அவரிடம் விடைபெற்று கிளம்பினோம்.
