PUBLISHED ON : ஜூலை 19, 2026

பா - கே
சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில், புரெடக்ஷன் மேனேஜராக இருந்தவர், அவர். லென்ஸ் மாமாவின் நண்பர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, பத்மினி மற்றும் பானுமதி நடித்த பல படங்களுக்கு, புரெடக்ஷன் மேனேஜராக இருந்துள்ளார்.
வயது: 78. இப்போது இவரது மகன் பட நிறுவனம் ஒன்றில், புரெடக்ஷன் மேனேஜராக பணிபுரிகிறார். திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில், 'புரெடக்ஷன் மானேஜர்' என்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அவரது வேலை என்னவென்றால், படப்பிடிப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆட்களை தயார் செய்து தருவது, நடிகர்-நடிகையரின், 'கால்ஷீட்' தேதிகளை குறித்து வைத்திருந்து, அவர்களை படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர வைப்பது, ஒளிப்பதிவாளர், 'லைட்பாய்' உட்பட்ட தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது, சம்பள பட்டுவாடா செய்வது போன்ற சகல வேலைகளையும் செய்வது தான் இவர்களது வேலை.
மொத்தத்தில், தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே பாலமாக இருப்பவர். சினிமா உலகினர் பற்றி, பல விஷயங்கள் இவர்களுக்கு அத்துபடி. 'கம்மிங் பேக் டு த பாயின்ட்!' சமீபத்தில், லென்ஸ் மாமாவை பார்க்க அலுவலகம் வந்திருந்தார், அவர். மாமா ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்ததால் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையே அவர் கூறிய சில தகவல்கள் இதோ:
நாடோடி மன்னன் படப்பிடிப்பில், ஒரு காட்சியில், எம்.ஜி.ஆரும், நம்பியாரும் நடித்து கொண்டிருந்தனர். அப்படத்தை இயக்கியவரும், எம்.ஜி.ஆர்., தான். படப்பிடிப்பு துவங்கி, இரண்டு, மூன்று, 'ஷாட்'களை இயக்கிய, எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, 'நாளைக்கு, 'ஷூட்டிங்'கை வைத்துக் கொள்ளலாம்...' என்று கூறிவிட்டார்.
எதற்காக அவர் அப்படி சொன்னார் என்று முதலில் யாருக்கும் புரியவில்லை. எம்.ஜி.ஆர்., போட்டிருந்த, 'காஸ்டியூமை' விட, நம்பியார், 'காஸ்டியூம்' படு, 'ரிச்'சாக இருந்ததால் தான், 'ஷூட்டிங்'கை நிறுத்தி விட்டார் என்று, நம்பியார் உட்பட அனைவருக்கும் பின்னர் விஷயம் தெரிந்தது.
'அவ்வளவு தான் நாளைக்கு தன்னுடைய, 'காஸ்டியூம்' மாற்றப்பட்டு விடும்...' என்று நினைத்துக் கொண்டார், நம்பியார்.
ஆனால், எம்.ஜி.ஆர்., காஸ்டியூமரை அழைத்து, 'நம்பியாரின், 'காஸ்டியூமை' மாற்ற வேண்டாம். அது அழகாக இருக்கிறது; இளவரசன் என்றால், அப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடைய, 'காஸ்டியூமை' மட்டும் அவருடைய உடைக்கு சமமாக வேறு தையுங்கள்...' என்று கூறிவிட்டார்.
என். எஸ்.கிருஷ்ணன், தன் செல்வங்களை எல்லாம் இழந்து, கடுமையான வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அவர் எதிரில், அவரது கடைசி சொத்தாக வெள்ளியால் ஆன வெற்றிலைப் பெட்டி மட்டும் இருந்தது.
என்.எஸ்.கிருஷ்ணன் வெற்றிலை போட்டப்படி இருக்க, அருகில், அவரது மனைவி, மதுரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கலைவாணர் எதிரில் வந்து நின்றார், ஒருவர்.
யாரைப் பார்த்தாலும், 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்பதற்கு பதிலாக, 'என்ன வேணும்?' என்று கேட்டே பழக்கப்பட்ட, என்.எஸ்.கிருஷ்ணன் வந்தவரைப் பார்த்து, 'என்ன வேணும்?' என்று கேட்டார்.
வந்தவர், தன் வறுமையைச் சொல்லி, 'சாப்பிட்டே இரண்டு நாட்கள் ஆகிறது...' என்றார்.
'அப்படியா... சரி இரு...' என்று, அவனை நிற்க வைத்து, மதுரத்தை பார்த்து, 'மதுரம் குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வா...' என்று கூற, மதுரம் தண்ணீர் கொண்டு வர எழுந்து உள்ளே போனார். அந்த இடைப்பட்ட நேரத்தில், 'இந்தாய்யா இதை எடுத்துக்கிட்டு போ...' என்று கூறி, அந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியை எடுத்து கொடுத்தபடி, 'சீக்கிரம் போய்யா... அவ வந்துடப் போறா...' என்று கூறினார்.
தர்ம சங்கடத்துடன், வந்தவனும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விரைந்தான்.
ஜெ யிலில் இருந்த, எம்.ஆர் .ராதாவை பார்க்க இயக்குனர், பீம்சிங் சென்றார்.
அங்கு சென்றவர், துக்கம் தொண்டை அடைக்க, கண்ணீர் சுரக்க, 'அண்ணே...' என்று, ராதாவை பார்த்து, அழுதார், பீம்சிங்.
அவரைப் பார்த்த, ராதா, 'வாய்யா பீம்பாய். எப்படி இருக்கே?' என்றார்.
'நீங்க எப்படி இருக்கீங்கண்ணே?' என்று கேட்டார், பீம்சிங்.
'இங்கே எனக்கு ராஜ உபச்சாரம் தான். திராவிடர் கழக பாய்ஸ் தான் ஜெயில் அதிகாரிங்க. வெளியில இருந்து சிக்கன், மட்டன், பிரியாணி எல்லாம் வருது. சாப்ட்டு நல்லா துாங்கறேன். பிக்பாக்கெட் பசங்க கால் அமுக்கி விடறாங்க. ஒரு குறையுமில்லே. வெளிய இருந்தா குடிச்சே செத்திருப்பேன்...' என்றார், எம்.ஆர்.ராதா.
'கி த்னா பதல் கயா இன்ஸான்'னு ஒரு ஹிந்திப் பாட்டை மனசுல வெச்சுத்தான், பாவ மன்னிப்பு படத்துக்காக, 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' பாட்டை எழுதினார், கண்ணதாசன்.
அப்பாடலை பாட விரும்பினார், கவிஞர். 'வந்த நாள் முதல்... பாட்டை நான் பாடற மாதிரி, 'ஈஸியா' ஒரு நல்ல, 'ட்யூன்' போட்டுக் கொடு. நானே பாடறேன்...' என்று இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டார், கண்ணதாசன்.
'அதெல்லாம் வேண்டாம். நீங்க பாடினீங்கன்னா, மக்களுக்கு உங்க மேல இருக்கற அபிமானம் போயிடும்; மரியாதை குறைஞ்சிடும்...' என்றார், எம்.எஸ்.வி.,
இதைக்கேட்டு, கண்ணதாசன் கோபிச்சுக்கிட்டாரு. அவரை சமாதானப்படுத்தி, அப்பாடலை, டி.எம்.சவுந்தரராஜனை பாட வைத்து, பதிவு செய்தார், எம்.எஸ்.வி.,
ஆரம்ப காலத்தில், பட வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார், சந்திரபாபு.
இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.
சந்திரபாபுவிடம், தற்கொலைக்கான காரணம் கேட்டார், நீதிபதி.
காரணத்தை சொன்னதோடு, ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஒரு காட்சியை, சந்திரபாபு நடித்துக்காட்ட, அவரது திறமையை கண்டு திகைத்த நீதிபதி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
- அவர் கூறி முடிக்கவும், லென்ஸ் மாமா வரவும் சரியாக இருந்தது.
'இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, விலாவரியாக பேசுவோம்...' என்றார், அந்த நண்பர். அவரிடம், நலம் விசாரித்தவர், 'நீங்கள் சொன்னபடி எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன், புறப்படலாமா?' என்றார், லென்ஸ் மாமா. விஷயம் வேறொன்றுமில்லை... தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், இவரை பேட்டி எடுக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வந்துள்ளார், லென்ஸ் மாமா. 'மணி... நீ சாப்பிட்டு விடு. நான் வர, 'லேட்'டாகும்...' என்று கூறி, அவருடன் வெளியேறினார், லென்ஸ் மாமா.
