தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (16)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (16)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (16)


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

சத்யராஜ், மணிவண்ணன் இருவரும் கோயமுத்துார் கல்லுாரியில் ஒன்றாக படித்தவர்கள். சத்யராஜின் நிஜப்பெயர், ரங்கராஜ். இயக்குனர், டி.என்.பாலு இயக்கிய, சட்டம் என் கையில் படத்தில் அறிமுகம் ஆனார், சத்யராஜ். ஆனாலும், அவருக்கு நிஜமான வெற்றி வாசலை திறந்த படம், இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய, நுாறாவது நாள் படம் தான்.

இயக்குனர்கள், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் மற்றும் நடிகர், சத்யராஜ் மூவருக்கும் இடையே இருந்த நட்பே தனி. நகைச்சுவை ததும்ப, மூன்று பேரும் பேசி கொள்வர். எஸ்.என்.எஸ்.திருமால் தயாரித்த படம் தான், நுாறாவது நாள்.

குடும்பக்கதை மற்றும் கிராம த்து கதைகளை இயக்கி வந்த, மணிவண்ணனை, 'வித்தியாசமான, 'திரில்லர்' கதை பண்ணுங்க தலைவா...' என திசை மாற்றியது, சத்யராஜ் தான். படத்தின் கதை விவாதம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹோட்டல் 'பாம்குரோவில்' நடந்தது. அலுவலக நேரம் போக, மற்ற நேரங்களில், நானும் அந்த விவாதத்தில் ஐக்கியமாகி விடுவேன்.

இருபது நாட்களுக்கும் மேலாக, மணிவண்ணனுக்கு ஒரு கதையும் உருவாகவில்லை. ஆங்கில நாவலில் வரும், 'திரில்லர்' கதைக் கருவை சொன்னார், சத்யராஜ். ஆரம்பத்தில் கதை விவாதத்தின் போது, மொட்டை கதாபாத்திரம் உருவாகவில்லை. நண்பன் சத்யராஜ் நடிப்பதற்கேற்ப, நல்ல கேரக்டர் உருவாக்கி தர வேண்டும் என்பதில் சற்று மெனக்கெட்டார், மணிவண்ணன். அவர் திட்டமிட்டு உருவாக்கியது தான், நுாறாவது நாள் திரைப்படம். 'ஹாலிவுட்' நடிகர் போல், வில்லன் கேரக்டர் அமைய வேண்டும். அதற்கு சரியான, 'கெட்-அப்' வேண்டுமென்ற தீர்மானத்தை மனதிற்குள் வைத்திருந்தார். கதை விவாத நேரத்தில் ஒருநாள், சத்யராஜிடம், 'நீங்க போய் உடனே மொட்டை போட்டுட்டு வாங்க...' என சொன்னார்.

'ஏற்கனவே எனக்கு வழுக்கை தலை தானே, தலைவா...' என, சத்யராஜ் சொல்ல, 'எல்லா பக்கமும் மழு மழு மொட்டை போட்டு வாங்க'ன்னு, மணிவண்ணன் சொன்னதும், உடனே அருகில் இருந்த சலுான் கடைக்கு போய், மொட்டை போட்டு வந்து விட்டார், சத்யராஜ். 'ரேபான் கூலிங் கிளாஸ்' போட்டுக்கொள்ளும் பழக்கம், சத்யராஜுக்கு உண்டு. மொட்டை, 'கெட்-அப்'பில், சத்யராஜ் 'கூலிங் கிளாஸ்' மாட்டி நிற்க, மணிவண்ணன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

'இந்த, 'கெட்-அப்' பத்தி பத்திரிகையில் எழுத வேண்டாம்...' என்று என்னை கேட்டுக் கொண்டார். நானும், அதை கடைப்பிடித்தேன்.

கதை விவாதங்களில் இருந்த போது, இன்னொரு பக்கம், இளமைக் காலங்கள் என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், மணிவண்ணன். ஒரே சமயத்தில், மூன்று படங்களுக்கு மேல் அப்போது இயக்கிக்கொண்டு இருந்தார், மணிவண்ணன். கோவை தம்பிக்காக, இளமைக் காலங்கள் படத்தை ஊட்டி பகுதியில் படமாக்கினார். இளமைக் காலங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வேறு ஒரு படத்திற்காக உருவானவை. படத்தில் இடம்பெற்ற, 'ஈரமான ரோஜாவே...' பாடலை ரசித்து கேட்டு, அதற்கேற்ப திரைக்கதையை உருவாக்கினார், மணிவண்ணன். படத்தில், ஜனகராஜ் பேசும், 'ஊட்டிக்கு போகாதீங்க...' என்ற வசனம், மிகவும் பிரபலம்.

சசிகலா என்ற புதுமுக நடிகையை இந்த திரைப்படத்தில் அறிமுகம் செய்தார், மணிவண்ணன். அதுபோல, நடிகை ரோகிணிக்கும் இதில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். மோகனுக்கு முறைப் பெண்ணாக, இளமைக் காலங்கள் படத்தில் நடித்திருப்பார், ரோகிணி. கல்லுாரி மாணவர்கள் பற்றிய கதை. தன் கல்லுாரி கால நாட்களில் நடந்த போராட்டத்தை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியிருந்தார், மணிவண்ணன்.

அப்போது, ஆழ்வார்பேட்டையில், பாரதிதாசன் சாலையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தார், சசிகலா. அவருடைய அப்பா மல்கோத்ரா, பஞ்சாபிக்காரர். அம்மா சுலோச்சனா கன்னடத்துக்காரர். சசிகலா ஆழ்வார்பேட்டைக்கு வந்து தங்குவதற்கு முன், அவர் குடியிருந்த இடம் சவுகார்பேட்டை பகுதி. சவுகார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளியில், 10வது படிக்கும்போதே, அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

ஒரு நாள் தன் தோழி ஒருவரை அழைத்துக் கொண்டு, அவரே போட்டோ ஸ்டுடியோவில் விதவிதமாக புகைப்படம் எடுத்து இருக்கிறார். சசிகலாவுக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அவரும், அவரது அண்ணன் மனோகரும் கோவை தம்பி தயாரித்த, இளமைக் காலங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, கோவை தம்பியை நேரில் வந்து பார்த்தனர்.

கோவைத்தம்பி அப்போது எம்.எல்.ஏ., ஆக இருந்தார். சசிகலாவுடைய புகைப்படங்களை காட்டினார், சசிகலாவின் அண்ணன், மனோகரன். வாங்கி பார்த்த, கோவை தம்பி அருகில் இருந்த இயக்குனர், ஆர்.சுந்தர்ராஜனிடம் காட்டினார். சசிகலாவின் புகைப்படங்களை பார்த்து, நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தார், ஆர்.சுந்தர்ராஜன்.

சசிகலாவிற்கு புது ஆடைகள் எடுத்துவரச் சொல்லி, விதவிதமாக சிகை அலங்காரம் எல்லாம் செய்து பார்த்து, முடிவு செய்தார், ஆர்.சுந்தர்ராஜன். அதன்பின், படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு, சசிகலாவை அனுப்பி வைத்தனர்.

இளமைக் காலங்கள் படத்திற்கு பின், அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதே நேரத்தில் தெலுங்கிலே, ரஜினி என்ற பெயரிலே நடித்தார். சசிகலாவை நான் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். வெளிநாட்டில், மருத்துவம் படித்து, அங்கேயே வசிக்கிறார் என்பதை நம்பி, ஒருவரை திருமணம் செய்து கொண்டார், சசிகலா. திருமணம் செய்து கொண்ட பின் தான், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தார். ஒருகட்டத்தில், முழுக்க முழுக்க தன்னிடம் பணம் பறிப்பதற்காக வந்து சேர்ந்தவர் அவர் என்பது புரிந்து, அவரை விவாகரத்து செய்து வெளியேறி விட்டார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே, அனகாபள்ளி என்ற ஊரில் பிறந்தவர், ரோகிணி. மகளை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்தார், அவரது அப்பா. சென்னை ரங்கராஜபுரம் நாகார்ஜுனா நகரில் அவர்கள், குடியிருந்தனர். குழந்தை நட்சத்திரமாக, ரோகிணி நடித்தாலும், அவர் நன்கு பரிச்சயமானது, இளமைக் காலங்கள் படத்தில் தான். படம் வெளியான பின், நான் அவரைச் சந்தித்து பேசும் போது, குழந்தைத்தனம் சற்றே மாறி வந்த தருணம். விதவிதமாக அவரை படம் எடுக்க செய்து, 'தாய்' வார இதழில், கட்டுரை ஒன்றை எழுதினேன்.



—  தொடரும்ஆர்.பிரபாகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us