தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூட்டு முயற்சியால் மாறிய வாழ்க்கை!

எங்கள் ஊரில் உள்ள பல பெண்கள், 30 கி.மீ., துாரத்தில் உள்ள ஷூ கம்பெனிக்கு, முன்பு வேலைக்கு சென்றனர். நாளடைவில் கம்பெனியில் உண்டாகும், ரசாயன வெப்பத்தால் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்படைந்தது. இதனால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டனர். சில பெண்கள் கர்ப்பப்பையையே அகற்றும் நிலைக்கு சென்றனர்.

இதனால், அந்த கம்பெனிக்கு யாரும் வேலைக்கு செல்வதை தவிர்த்தனர்.

பின், எங்கள் ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில், மக்கள் அதிகம் கூடும் இடத்தில், சிறியதாக ஹோட்டல் தொடங்கலாம் என்று, முடிவெடுத்தனர். அதன்படி, அவர்கள் இணைந்து, ஹோட்டல் தொடங்குவதற்கான உபகரணங்களை வாங்கினர்.

இட்லி, ஐந்து ரூபாய், பூரி ஒரு செட், 10 ரூபாய், வடை, ஐந்து ரூபாய், மதிய சாப்பாடு, 50 ரூபாய் என்ற வீதத்தில் விற்பனை செய்தனர். விலையும் குறைவு, சுவையும் நன்றாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் வருகை அதிகமானது. பக்கத்திலேயே கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்கள் இருந்ததால், பலரும் இந்த ஹோட்டலுக்கு வர துவங்கினர்.

தற்சமயம் ஒரு நாளைக்கு, செலவு போக, 20 ஆயிரம் ரூபாயை லாபமாக சம்பாதித்து வருகின்றனர்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது போல, ஒன்று கூடி உழைத்தால் நிச்சயம் நம் வாழ்வு முன்னேறும், வாழ்க்கையும் மாறும் என்பதற்கு இந்த பெண்களே சாட்சி!

- ச.சவுமியா, அரூர், தர்மபுரி.

வேண்டாமே வீண் கவுரவம்!

தனியார் பொறியியல் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரியும் ஒருவர், என் வீட்டின் அருகில், புதிதாக குடி வந்திருந்தார். அவரின் மனைவி, தையல் பயிற்சி வகுப்பு நடத்துகிறார். சொந்தமாக கார் வைத்திருந்தனர். ஒரு நாள் அவர் வீட்டில் நிறுத்தி இருந்த காரை காணவில்லை.

பல நாட்களாக இது தொடரவே, அந்த நண்பரிடம் கேட்டேன். 'என் மனைவி, 'டிவி' நிகழ்ச்சியில் வரக்கூடிய, தங்க நகை விளம்பரங்களை விரும்பி பார்க்கும் ஆர்வமுடையவர். 'அதில் உள்ள டிசைன் போல எனக்கு நகை வேண்டும் என்றும், விசேஷங்களுக்கு இந்த மாதிரி நகை அணிந்து சென்றால் தான் கவுரவம் என்றும், வாங்கித்தரவில்லை என்றால், அம்மா வீட்டுக்கு சென்று விடுவேன்...' என்று நச்சரித்துக்கொண்டே இருந்தாள்.

'அவள் தொல்லை தாங்காமல், என் காரை விற்று விட்டேன். அதில் கிடைத்த பணத்தில், எனக்கு பைக், என் மனைவிக்கு அவள் கேட்ட நகையும் வாங்கி கொடுத்து விட்டேன்.

'என் மனைவியின் கவுரவத்திற்காக இன்னும் என்னவெல்லாம் விற்க போறேன்னு தெரியல...' என்று வருத்தத்துடன் சொன்னார், அந்த நண்பர்.

'வரவு எட்டணா, செலவு பத்தணா!' என்ற பழமொழிக்கு ஏற்ப, தகுதிக்கு மீறி வாழ நினைப்பவர்கள், இறுதியில் நிம்மதியை இழக்க நேரிடும். ஆடம்பரமாக செலவு செய்து, அதை கவுரவம் என்று சொல்லி திரியும் இவர்களை திருத்துவது எப்படி?

- டி.சுதாகர், ராமநாதபுரம்.

நுாலகத்தின் நல்வழி முயற்சி!

சமீபத்தில், தோழி ஒருவரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அப்போது, 'எங்கள் மகளை நுாலகத்தில் விட்டுவிட்டு வர வேண்டும். நீங்களும் வாங்க. அங்கே ஒரு நல்ல விஷயத்தை பார்க்கலாம்...' என்றார்.

நானும், அவருடன் சென்றேன். அருகிலிருந்த பொதுநுாலகத்திற்கு சென்றோம். வழக்கம்போல் அமைதியாக புத்தகம் படிப்பவர்கள் இருப்பர் என்று நினைத்தேன்.

ஆனால், அங்கு குழந்தைகள் பலரும் வட்டமாக அமர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் நுாலக அம்மையார் வந்து, ஒரு சிறிய கதைப் புத்தகத்தை எடுத்தார்.

அதை வாசித்து காட்டியதும், குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக கேட்டு ரசித்தனர்.

பின்னர், 'இந்தக் கதையில் உங்களுக்கு பிடித்தது என்ன?' என்று கேட்டார். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கருத்தை தைரியமாக சொல்ல ஆரம்பித்தனர்.

என் தோழி, 'வாரம் ஒருமுறை இப்படி புத்தக வாசிப்பு வட்டம் நடத்துகிறார் இந்த அம்மையார். குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் வரவும், பேசும் திறன் வளரவும், மேடைக்கூச்சம் அகலவும் இது உதவுகிறது. மொபைல் போனில் நேரம் கழிப்பதை விட, புத்தகங்களில் ஆர்வம் ஏற்படுகிறது. பெற்றோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்...' என்றார்.

அறிவை வளர்க்கும் இத்தகைய புதுமையான திட்டங்களை மற்ற நுாலகங்களும் பின்பற்றினால், வரும் தலைமுறை நல்ல பாதையில் செல்வது உறுதி!

மொ.நல்லம்மாள், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us